டி.என்.பாளையம் அருகே பெண் மர்ம சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்றதாக கைதான கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் பள்ளத்தூரை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 40). அவருடைய மனைவி கவிதா (35). கூலித் தொழிலாளி. இவர்களுக்கு கார்த்திகேயன் (17), கோகுல்நாத் (15) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

கோகுல்நாத் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கார்த்திகேயன் வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு வந்தார்.

அப்போது அவரது தாய் கவிதா வாயில் நுரை தள்ளியபடி மர்மமான முறையில் கட்டிலில் பிணமாக கிடந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கார்த்திகேயன் பங்களாப்புதூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்தப்புகாரில் அவர் ‘எனது தாய் கவிதாவின் சாவில் சந்தேகம் உள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் கவிதாவின் கணவர் மோகனசுந்தரம் நேற்று காலை வாணிப்புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் முகமது ஹனீபாவிடம் சரண் அடைந்தார்.

அவர் மோகனசுந்தரத்தை பங்களாப்புதூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது மனைவி கவிதாவை தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர்.

பின்னர் மோகனசுந்தரம் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

நான் கண் பார்வை குறைபாடு உடையவன். இதனால் நான் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தேன். எனது மனைவி கவிதாவும், மகன் கார்த்திகேயனும் வேலைக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் எனது மனைவியின் நடத்தையின் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் எனக்கும், அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்து கவிதாவை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். சம்பவத்தன்று பிற்பகல் 3 மணி அளவில் கடையில் டீ வாங்கி வந்தேன்.

அதில் மயக்க மாத்திரையை போட்டு கவிதாவுக்கு குடிக்க கொடுத்தேன். அவரும் அதைக்குடித்தார். பின்னர் நான் வெளியில் சென்றுவிட்டேன். அதன்பின்னர் மாலை 6 மணி அளவில் வீட்டுக்கு சென்று பார்த்தேன்.

அப்போது கவிதா வாயில் நுரை தள்ளியபடி கட்டிலில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் சேலையால் இறுக்கி அவரது கழுத்தை நெரித்தேன்.

இதில் அவர் இறந்துவிட்டார். பின்னர் போலீசாருக்கு பயந்து அங்கிருந்து வெளியே சென்று தலைமறைவாக இருந்து வந்தேன். இந்த நிலையில் போலீசார் என்னை தேடுவதை அறிந்ததும் சரண் அடைந்தேன்.

இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் அவர் கூறி உள்ளார்.

Share.
Leave A Reply