“புலிகளை ஆயுத ரீதியாக தோற்கடிக்கும்போது ராஜபக்ஷவினர் இந்தியாவுக்கும், சர்வதேசத்திற்கும் வாக்குறுதிகளை வழங்கினார்கள்”

“தேர்தல் பின்னடைவுகளுக்கு கூட்டமைப்பையும், தமிழரசுக் கட்சியையும் வழி நடத்தாத சுமந்திரன் காரணமில்லை”

“உண்மைகளைக் கூறும் எனது கடிதங்களுக்கு ஜனாதிபதியால் பதிலளிக்க முடியாது”

“13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தச் செய்யும் தார்மீக கடமையிலிருந்து இந்தியா விலகாது” 

நேர்காணல்:- ஆர்.ராம்

படப்பிடிப்பு:- எஸ்.எம்.சுரேந்திரன்

ஆட்சியில் உள்ள ராஜபக்ஷவினரால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யாது, பொறுப்புக்கூறலை செய்யாது எம்மை ஏமாற்றி அனைத்தையும் தட்டிக் கழித்து விட முடியாது. அவ்வாறான போக்கில் செல்வார்களாயின் நாம் மாற்று வழியை கையிலெடுப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அதன் தலைவருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்தார். அச் செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

 

கேள்வி:- பொதுத்தேர்தலில் 20ஆசனங்களை இலக்கு வைத்து கூட்டமைப்பு களமிறங்கியிருந்த போதும் பத்து ஆசனங்களே கிடைத்துள்ளதோடு வாக்கு வங்கியும் சரிந்துள்ளது. இந்த நிலைமைகளுக்கான காரணங்களை மீளாய்வு செய்தீர்களா?

பதில்:- எமது மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றாமையே பின்னடைவுகளுக்கு காரணமாக இருக்கின்றது. விசேடமாக, 2015இல் ஆட்சிமாற்றத்தினை நாம் ஏற்படுத்திய போது எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யவல்ல அரசியல் தீர்வொன்று கிடைக்கும் என்பதில் முழுமையான நம்பிக்கையுடன் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பணிகளை முன்னெடுத்திருந்தோம்.

துரதிர்ஷ்டவசமாக ஆட்சியை அமைத்திருந்த பிரதான கட்சிகள் இரண்டுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்குகள் மற்றும் தலைவர்களுக்கு இடையிலான ஒற்றுமையின்மை ஆகியவற்றின் நிமித்தம் அந்தப் பணிகள் முழுமை பெறவில்லை. எமது மக்களைப் பொறுத்தவரையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படாமையானது மிகுந்த ஏமாற்றமான விடயமாகும். புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட்டிருந்தால் தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும்.

இதனைவிடவும், எமது மக்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய விடயங்களும் முழுமை பெற்றிருக்கவில்லை. அவை மிகவும் சிக்கலுக்குரியவையாக இருந்தாலும் உறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம் செயற்பாட்டு ரீதியாக முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஏற்பட்ட மந்தநிலைமைகள் காரணமாக காணாமலாக்கப்பட்டவர்கள் விடயம் போன்று பல விடயங்கள் முழுமை பெறாது தடைப்பட்டிருந்தன.

இவ்வாறு பல விடயங்கள் எமது மக்களுக்கு ஏமாற்றத்தினை அளிப்பவையாகவே இருந்துள்ளன. அந்த மக்களின் பிரதிநிதிகளான எம்மால் பொறுப்புக்கூற முடியாத நிலைமைகள் ஏற்பட்டதன் காரணமாக அவர்களின் மனதில் சஞ்சலமான நிலைமை தோன்றியிருந்தது. அதன் வெளிப்பாடாகவே அவர்களின் முடிவும் அமைந்திருக்கின்றது.

கேள்வி:- 2018 ஒக்டோபரில் அரசியல் சூழ்ச்சி நடைபெறுவதற்கு முன்னதாகவும், அதன் பின்னர் மீண்டும் ஆட்சி அமைக்கப்பட்ட போதும் கூட்டமைப்பு தம்மிடம் இருந்த துருப்புச் சீட்டுக்களை பயன்படுத்த தவறியுள்ளதல்லவா?

பதில்:- எம்மை எதிர்ப்பவர்கள் அரசியலுக்காக பல்வேறு விதமான விமர்சனங்களை முன்வைக்க முடியும். ஆனால் இனவிடுதலைக்கான பயணத்தில் நிரந்தரமான தீர்வினை நோக்கிய கருமங்கள் பக்குவமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றபோது அவற்றை குழப்பிவிட முடியாது.

அனைத்து தரப்பினரதும் ஆதரவுடன் புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள் நேர்த்தியான முறையிலேயே இடம்பெற்றுக்கொண்டிருந்தன. அவ்வாறான தருணத்தில் ஒருசில விடயங்களை மையப்படுத்தி அரசாங்கத்துடன் நாம் முட்டிமோதி மிக முக்கியமான புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாடுகளை சீர்குலைத்துவிட முடியாது.

அதற்காகவே நாம் நிதானமாகச் செயற்பட்டு வந்தோம். ஆட்சியில் இருந்த இருபெரும் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பத்தினை கட்டுப்படுத்தக்கூடிய நிலை எம்மிடத்தில் இருக்கவில்லை.

தந்தை செல்வா, இந்தத் தீவில் உள்ள தமிழ் மக்களுக்கு நீதியான, சமத்துவமான அந்தஸ்து அரசியலமைப்பில் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார்.

அவருடைய இலட்சியப் பாதையில் நாம் வெகுதூரம் கடந்து வந்திருக்கின்றோம். அரசியல் தீர்வு விடயத்தில் மக்களின் ஆணையைப்  பெற்று பல விடயங்களை கையாண்டிருக்கின்றோம். நீண்ட அனுபவங்களை கொண்டிருக்கின்றோம்.

ஆகவே அந்தப் பணிகளை இடைநடுவில் கைகழுவி விடமுடியாது. தற்போதும் அந்தப் பணிகளை முன்னெடுக்கத் தயாராகவே உள்ளோம். அதற்கான முன்னெடுப்புக்களை நாம் செய்துகொண்டிருக்கின்றோம். எமது மக்கள் நம்பிக்கையுடன் எம் பின்னால் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

கேள்வி:- ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  9ஆவது பாராளுமன்ற கொள்கைப் பிரகடன உரையின் போது “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கோட்பாட்டை பிரதிபலித்திருக்கும் நிலையில், அதிகாரப்பகிர்வு உள்ளடக்கத்தினை மையப்படுத்திய சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை அடையமுடியுமென்று நம்பிக்கை கொள்கின்றீர்களா?

பதில்:- ஜனாதிபதியின்  ஒரு சில வார்த்தையின் அடிப்படையில் நாம் தீர்க்கமான முடிவொன்றை எடுத்துவிட முடியாது. இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம் எழுபது ஆண்டுகளாக முன்னெடுக்கப்படும் ஒரு விடயமாக இருக்கின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் பேரவை, சர்வதேச நாடுகள் உள்ளிட்ட தரப்புக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளார்கள்.

விசேடமாக, 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு அதன்மீது ஆக்கபூர்வமான அதிகாரப்பகிர்வினைக் கட்டியழுப்பி அதனை நடைமுறைப்படுத்துவோம் என்றும் உறுதியளித்திருக்கின்றார்.

இதனைவிடவும், தமிழீழ விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிப்பதற்கு இந்தியாவிடமும்,சர்வதேசத்திடமும் உதவிகளைக் கோரியபோது ராஜபக்ஷவினர் பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றார்கள்.

குறிப்பாக, தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை ரீதியான இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காண முடியாது.

ஆகவே அவர்களை இராணுவ ரீதியாக தோற்கடித்ததன் பின்னர் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு அதியுச்ச அதிகாரப்பகிர்வுடனான அரசியல் தீர்வினை வழங்குவோம் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்கள்.

அவ்விதமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது தொடர்ந்தும் இருக்க முடியாது. அந்த அடிப்படையில், ஜனாதிபதியின் ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது.

ஆனால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்றபோது, தற்போதைய ஆட்சியாளர்கள் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில், தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வினை முன்வைக்க வேண்டியது அவர்களின் கடமையாகின்றது.

கேள்வி:- மூன்றிலிரண்டு பாராளுமன்றப் பெரும்பான்மையை தம்வசம் கொண்டிருக்கின்ற தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழர்களின் அதியுச்ச அதிகாரப்பகிர்வு கோரிக்கைகள் தொடர்பில் கரிசனை கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா?

பதில்:- தற்போதைய ஆட்சியாளர்கள் எம்முடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கே தயக்கம் காட்டுகின்றார்கள். எம்மை இலகுவாக ஏமாற்ற முடியாது என்பதே அதற்கான அடிப்படைக் காரணமாகின்றது.

எமது மக்களின் அபிலாஷைகள் தொடர்பாக நாம் தெளிவாக இருக்கின்றோம். ஆகவே ஆட்சியாளர்களே தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டியவர்களாக உள்ளார்கள்.

மேலும்,தற்போதைய நிலையில் இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொண்ட அரசியல் சாசனம் ஒன்று இல்லை. தேசியத் தேர்தல்களில் 1978ஆம் ஆண்டு அரசியல் சாசனத்தினை நிராகரித்து தீர்ப்பளித்துள்ளார்கள்.

ஆகவே புதிய அரசியலமைப்பொன்று அவசியமாகின்றது. அதுமட்டுமன்றி பொருளாதாரம், ஜெனீவா விவகாரம் என்று பலவிதமான பிரச்சினைகளுக்கு அரசாங்கம்  முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

ஆகவே தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்காது காலத்தினைக் கடத்தி, ஏமாற்றி ,தட்டிக்கழித்து விட முடியும் என்று எண்ணக்கூடாது.

அவ்விதமான போக்கில் ஆட்சியாளர்கள் செல்ல விளைவார்களாக இருந்தால் அதற்கு மாற்றாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய வழிகளில் செல்வதற்கு நாங்கள் வலிந்து தள்ளப்படுவதை தவிர்க்க முடியாது.

கேள்வி:- 20ஆவது திருத்தச்சட்ட வரைவு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதுபற்றி எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளீர்கள்?

பதில்:- ஜனநாயக பண்புகளை நிலைநிறுத்துவதற்கான கட்டமைப்புக்களை சிதைப்பதற்கும், அதிகாரங்களை குவிப்பதற்கும் நாம் ஒருபோதும் துணைபோக மாட்டோம். எமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவோம்.

கேள்வி:- 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தவதற்கும், மாகாண சபை முறைக்கும் எதிரான கருத்துக்கள் அரசாங்கத்திற்குள்ளிருந்தே வெளிக்கிளம்பியுள்ளதே?

பதில்:- அவர்கள் பலவிதமான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். ஆனால் கொள்கை ரீதியாக எவ்விதமான தீர்க்கமான முடிவுகளையும் அறிவிக்கவில்லையே.

கேள்வி:- இந்தவிடயம் சம்பந்தமாக இந்தியத் தரப்பின் நிலைப்பாடு எவ்வாறு உள்ளது? இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் வெளிப்படுத்தப்பட்டதா?

பதில்:- நாங்கள் பலவிடயங்கள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடினோம்.இந்தியா எம்மை கைவிடாது. இந்தியா எம்மை கைவிடப்போவதும் இல்லை. எமது விடயத்தில் இந்தியாவுக்கு தார்மீக கடமை இருக்கின்றது. ஆகவே அந்தக் கடமையை இந்தியா நிச்சயமாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

கேள்வி:- இந்திய உயர் ஸ்தானிகருடனான கலந்துரையாடல்களுக்கு அப்பால் சென்று ஆதிக்கம், அழுத்தம் செலுத்தவல்ல இந்திய மத்திய அரசு தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான அணுகுமுறைகளை செய்கின்றீர்களா?

பதில்:- எங்களுக்கு மத்திய அரசுடன் நீண்ட தொடர்புகள் இருக்கின்றன. ஆகவே அந்த விடயங்களை உங்களுடன் பகிரங்கமாக பகிர முடியாது.

கேள்வி:- ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நீங்கள் இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளபோதும் அதற்கு ஆகக்குறைந்தது கடிதம் கிடைத்தது என்ற பதிலளிப்பாவது கிடைக்கவில்லையே?

பதில்:- எனது கடிதங்களுக்கு அவரால் பதிலளிக்க முடியாது. அந்த கடிதத்தில் உண்மையான சான்றாதாரங்களுடன் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ள நியாயங்களுக்கு அவர்களால் பதில் கூறவே முடியாது. அந்தக் கடிதத்திற்கு பதிலளிக்காது இருப்பதால் தமக்கு நன்மையென்று அவரால் கருதமுடியாது. அவர் பதிலளிக்காமல் இருப்பது எமக்கே பலமாகும். அந்தக் கடிதத்தின் பிரதிகள் சகல தூதரகங்கள் ஊடாக சர்வதேசம் வரையில் சென்றுவிட்டன. ஆகவே ஜனாதிபதி அக்கறை செலுத்தாமல் இருப்பதால் அந்த விடயங்கள் மழுங்கி விடாது. எனது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நான் தொடர்ந்தும் கடிதம் எழுதுவேன்.

கேள்வி:- கடிதங்களுக்கே பதிலளிக்காதவர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பில் பதிலளிப்பார்களா?

பதில்:- எமது நியாயமான கோரிக்கைகளை அவர்களால் நிராகரித்துச் செல்ல முடியாது. அவ்வாறு செல்ல விளைந்தால் அதனை எப்படிக் கையாள வேண்டும்  என்பது எமக்குத் தெரியும்.

கேள்வி:- 2015ஆம் ஆண்டுக்குப்பின்னரான சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நெகிழ்வுப்போக்கினாலேயே அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் பற்றிய ஜெனீவா தீர்மானங்கள் நீர்த்துப்போனதோடு தீர்மானத்திலிருந்து அரசாங்கம் வெளியேறும் அறிவிப்புக்கும் வித்திட்டுள்ளதாக கூறப்படுகின்றதே?

பதில்:- எமக்கு எதிரான தரப்பினரே இத்தகைய கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். அவர்கள் அரசியல் இலாபமடைவதற்காகவே இத்தகைய கருத்துக்களை கூறுகின்றார்கள். ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு நாங்களே காரணமாக இருக்கின்றோம். 2011ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த நாம், அமெரிக்க இராஜாங்க திணைக்கத்திற்குச் சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து விடயங்களை தெளிவுபடுத்தி தீர்மானத்தினை கொண்டுவருவதற்கு வித்திட்டிருந்தோம்.

அதன் பின்னர் இராஜாங்கப் பிரதிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கைக்கு வந்து என்னையும், சுமந்திரனையும் சந்தித்தபோது முதன்முதலாக தீர்மானம் கொண்டுவருவதையும் உறுதிப்படுத்திச் சென்றிருந்தார். அதனைத்தொடர்ந்து நாம் ஜெனீவா விடயத்தில் அதீத கரிசனையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கு விட்டுக்கொடுப்புக்களைச் செய்யவில்லை.

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் 46ஆவது கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. ஜெனீவாவில் அளித்த வாக்குறுதியிலிருந்து அவர்கள் தப்பிப்பிழைக்க முடியாது. அந்தத் தீர்மானங்களிலிருந்து வெளியேறவும் முடியாது. ஆகவேஅடுத்தக்  கூட்டத்தொடர் அரசுக்கு அழுத்தங்களை அளிப்பதாகவே அமையப்போகின்றது. அதற்கு முன்னதாக அவர்கள் வாக்குறுதி அளிக்கப்பட்ட விடயங்களை உடன் ஆரம்பிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

கேள்வி:- தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் வாக்குறுதிகளை கடந்த அரசாங்கமே வழங்கியதென்றல்லவா கூறுகின்றார்கள்?

பதில்:- அவர்களால் அவ்வாறு கூறி தட்டிக்கழிக்க முடியாது. நாங்கள் ஜனநாயக வாதிகள். அனைத்து தருணங்களிலும் முட்டிமோதி விடயங்களை சாதிக்க முடியாது. நாங்கள் உரிய தருணங்களில் சரியான நகர்வுகளை செய்வோம். இராஜதந்திரமாக கையாள்வோம். நாங்கள் அரசியல் பிரபல்யத்திற்காக எதனையும் செய்வதில்லை. ஆனால் விடயங்களை சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பதற்காக பக்குவமாக கையாள்வோம். அதனை பலர் அறிந்திருப்பதில்லை.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுகளுக்கு ஊடகப்பேச்சாளராக செயற்பட்டுக்கொண்டிருக்கும் எம்.ஏ.சுமந்திரன்தான் காரணமாக இருப்பதாக பங்காளிக்கட்சிகளே குற்றம் சாட்டியிருக்கின்றார்களே?

பதில்:- சுமந்திரன் தமிரசுக்கட்சியையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ வழிநடத்தவில்லை. ஆகவே அவரால் தான் பின்னடைவுகள் ஏற்பட்டன என்பதை ஏற்றக்கொள்ள முடியாது. அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்.

ஜனாதிபதி சட்டத்தரணி. அவருக்கு தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு முழுமையான உரித்துண்டு. எல்லாச் சூழலிலும் எல்லோருடைய கருத்துக்களும் அனைவருக்கும் ஏற்புடையதாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆனால் ஜனநாயகக் கட்டமைப்பான எமது கட்சியில் அடிப்படைக் கருத்தில் முரண்பாடுகள் இல்லை. அந்த விடயத்தில் ஒற்றுமையான நிலைமையே தொடருகின்றது.

கேள்வி:- கூட்டமைப்பின் பேச்சாளர், கொறாடா பதவிகளை மாற்றுவதற்கு நீங்கள் கொள்கை அளவில் இணங்கியுள்ளீர்களா?

பதில்:- புதிய பாராளுமன்றத்தில் புதிய பாராளுமன்றக் குழுவே உள்ளது. ஆகவே புதிய தெரிவுகள் இடம்பெறுவது வழமையானது. அதில் எவ்விதமான பதவி நிலைகள் அமையப்போகின்றன என்பதை பாராளுமன்றக் குழுவே தீர்மானிக்கும்.

கேள்வி:- தேசியப் பட்டியல் விவகாரத்தில் கட்சியின் தலைவருக்கு தெரியாது முடிவுகள் எடுக்கப்பட்டமைக்கான காரணம் என்ன?

பதில்:- தேசியப்பட்டியல் ஆசன விவகாரம் தற்போது முடிவுக்கு வந்திருக்கின்றது. ஆகவே நீங்கள் முடிந்த விடயத்தினை புதிப்பித்து விடாதீர்கள்.

கேள்வி:- ஆனால் தேசியப் பட்டியல் ஆசனத் தெரிவு இடம்பெற்ற முறைமை தவறு என்று மத்தியக்குழுவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள் அல்லவா?

பதில்:- மத்திய குழுவில் அம்பாறைக்கு ஆசனம் வழங்கப்பட்டதை யாரும் எதிர்க்கவில்லை. மாவை.சேனாதிராஜாவே எதிர்க்கவில்லை. ஆனால் தெரிவு முறைமை சம்பந்தமாக வருத்தம் தெரிவித்தார்கள். தற்போது அந்த விடயம் முடிவுக்கு வந்து நிலைமை சுமூகமாகி விட்டது.

கேள்வி:- இந்த நிகழ்வுக்குப்பின்னர் பொதுச்செயலாளர் பதவி விலகியுள்ளரே?

பதில்:- அவர் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவி விலகியுள்ளதாக கூறியுள்ளார். அவர் கடந்த காலத்தில் கட்சிக்காக அர்ப்பணிப்பாக செயற்பட்டுள்ளார். இந்நிலையில் புதிய செயலாளர் அடுத்த பொதுச்சபையில் தெரிவுசெய்யப்படுவார்.

கேள்வி:- தேர்தல் நிறைவடைந்த கையோடு தமிழ்த் தேசியக் கட்சிகளின்  மக்கள் பிரதிநிதிகளை ஒருங்கிணைந்து செயற்படுவதற்கு உங்களால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு சில நிபந்தனைகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அத்தரப்புக்களுடன் பேசுவதற்கு தயாராக உள்ளீர்களா?

பதில்:- ஒற்றுமையாக செயற்படுவதற்கு அவர்கள் முன்வராது விட்டால் அதனை ஒரு காரணமாக வைத்து அவர்களுடன் நாம் பகைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆகவே நாம் பிரிவினையை வளர்க்காது ஒற்றுமையை வளர்ப்போம்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும், தமிழரசுக்கட்சியிலும் அடுத்த பரம்பரையினரிடத்தில் பொறுப்புக்களை ஒப்படைப்பதற்கான சூழல் எப்போது ஏற்படப்போகின்றது?

பதில்:- அதனை நான் தீர்மானிக்க முடியாது. கட்சியும் மக்களுமே தீர்மானிப்பார்கள். என்னைப்பொறுத்தவரையில் எதிர்காலத் தலைவர்களுக்கு பக்க பலமாக இருந்து முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க தயாராகவே உள்ளேன்.

Share.
Leave A Reply