இந்தியாவுக்கு தப்பியோடிய நிலையில், அங்கு மாரடைப்பால் உயிரிழந்தார் என நம்பப்படும் பிரபல பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா எனும் மத்துமகே லசந்த பெரேராவின் மனைவியின் வங்கிக் கணக்கு ஒன்றில் உள்ள சுமார் 2 கோடி பணம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த நிசங்சலா என்பவரின் வங்கிக் கணக்கு தொடர்பிலேயே இவ்வாறு விசேட விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக, நுகேகொடை வலய குற்றத் தடுப்புப் பிரிவினர் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு விசேட முதல் தகவல் அறிக்கை ஊடாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை, அங்கொட லொக்காவின் மிக நெருங்கிய சகாவாக கருதப்படும், தற்போது துபாய்க்கு தப்பியோடியுள்ளதாக நம்பப்படும் பலித்த பிரியங்கர என்பவரின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் விசேட விசாரணைகள் இடம்பெறுவதாக விசாரணையாளர்கள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
அத்துடன் மற்றொரு சகாவான தற்போது கைது செய்யப்பட்டுள்ள ‘ சிம்பு சமன் ‘ எனப்படும் நபரின் வங்கிக் கணக்கு தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதாள உலக மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் ஊடாக சம்பாதிக்கப்பட்ட கறுப்புப் பணம் தொடர்பில் இடம்பெறும் விசேட விசாரணைகளின் ஒரு பகுதியாக மேற்படி விசாரணைகள் இடம்பெறுகின்றன.