தென் கொரிய அதிகாரி ஒருவர் வட கொரிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் அரிதான நிகழ்வாக, இதுகுறித்து தனிப்பட்ட முறையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மன்னிப்பு கேட்டுள்ளதாக தென் கொரிய தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுக்கு வட கொரிய தலைவர் கிம் எழுதிய கடிதத்தில், “அவமானகரமான இந்த சம்பவம்” நடந்திருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, இருநாட்டு எல்லை அருகே ரோந்து கப்பலில் இருந்து காணாமல் போன அந்த அதிகாரி, பின்னர் வட கொரிய கடல் பக்கம் கண்டெடுக்கப்பட்டதாக தென் கொரியா கூறியிருந்தது.

வட கொரிய வீரர்கள் அவரை சுட்டு, பின்னர் அவரது உடலின் மீது எண்ணெயை ஊற்றி எரித்துள்ளதாக தென் கொரிய தரப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.

வட கொரிய படைகளால் தென் கொரியாவை சேர்ந்த ஒருவர் கொல்லப்படுவது கடந்த 12 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மோசமடைந்து வரும் இருநாடுகளுக்கிடையேயான உறவை இந்த சம்பவம் மேலும் பலவீனப்படுத்தியது.

கொரோனா தொற்று காரணமாக எல்லையை முடக்கியுள்ள வட கொரியா, நோய்த்தொற்று தங்கள் நாட்டுக்குள் வராமல் இருக்க, யார் எல்லைக்குள் நுழைந்தாலும், அவர்களை “சுட்டுக் கொல்ல” உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வருத்தம் தெரிவித்த கிம் ஜாங்-உன்

இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்று கூறி தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னுக்கு எழுதிய கடிதத்திலேயே கிம் மன்னிப்புக் கேட்டுள்ளதாக தென் கொரிய அதிபரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தை “அவமானகரமான விவகாரம்” என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த கிம், இதன் மூலம் மூன் ஜே-இன் மற்றும் தென் கொரிய மக்களை “ஏமாற்றமடையச் செய்ததற்காக” தான் மிகவும் வருந்துவதாக கூறியதாக ப்ளூ ஹவுஸ் என்றழைக்கப்படும் தென் கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வட கொரியா தரப்பில் அதிகாரப்பூர்வ வெளியிடப்பட்ட முதல் கருத்து இதுவே ஆகும்.

Share.
Leave A Reply