புதுச்சேரி அருகே மகன் சாலை விபத்தில் உயிரிழந்த தகவலைக் கேட்டு, அதிர்ச்சிய டைந்த தந்தையும் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத் தியுள்ளது.
புதுச்சேரி, திருபுவனையைச் சேர்ந்தவர் விநாயகம்(56). இவரது மகன் உத்திரகுமாரன்(35). தனியார் நிறுவன ஊழியர். இவர், நாள்தோறும் அதிகாலை நேரத்தில் விழுப்புரம் மாவட்ட எல்லைப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
அதுபோல வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பள்ளி நெளியனூர் பகுதியில் சாலையில் உத்திரகுமார் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது, அந்த வழியாக வந்த கார் உத்திரக்குமார் மீது மோதியது. இந்த விபத்தில் உத்திரக்குமார் பலத்த காயம டைந்தார்.
உடனே அங்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயமடைந்த உத்திரக்குமாரை மீட்டு புதுச்சேரி மதுகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
உத்திரக்குமார் விபத்தில் உயிரிழந்த தகவல் வீட்டிலிருந்த அவரது தந்தைக்குத் தெரியவந்தது.
இதனைக் கேட்ட விநாயகம் அப்போதே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், விநாயகம் மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.