இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இடையே காணொலி வாயிலாக இன்று இருதரப்பு கூட்டம் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் தொடக்கத்தில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை ஆளும் கட்சியின் சமீபத்திய தேர்தல் வெற்றியும் ராஜபக்ஷ அரசின் கொள்கைகளும் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த உதவும் என்று கூறியுள்ளார்.

“உங்கள் கட்சியின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு இந்திய – இலங்கை உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,” என்று மோதி குறிப்பிட்டிருந்தார்.

பிற நாடுகளில் எந்தக் கட்சி ஆட்சியில் உள்ளது என்பதைப் பொறுத்து, அந்த நாடுகளுடன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமையாது; இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அந்நாடுகளின் உள்நாட்டு அரசியலால் தாக்கத்துக்கு உள்ளாகாது என்று கடந்த காலங்களில் இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது பௌத்த கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 110 கோடி, இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 278 கோடி) நிதியை இந்தியா இலங்கைக்கு ஒதுக்கியுள்ளது.

இந்த சந்திப்பில் மோதி மற்றும் ராஜபக்ஷ ஆகியோர் இருநாட்டு வர்த்தகம் குறித்தும் விவாதித்தனர்.

இந்தியப் பொருட்கள் சிலவற்றின் இறக்குமதிக்கு இலங்கை அரசு விதித்துள்ள தற்காலிக கட்டுப்பாடுகளை இலங்கை நீக்கும் என்று தாம் நம்புவதாக மோதி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் தெரிவித்தார்.

அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் நடக்கும் சில சமூக மேம்பாட்டு திட்டங்களை நீட்டிப்பது தொடர்பாகவும் இந்த சந்திப்பில் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.

இவை குறித்து பிரதமர் நரேந்திர மோதி, ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுகள் பிரதமரின் அலுவல்பூர்வ பக்கத்தில் இல்லாமல், நரேந்திர மோதியின் தனிப்பட்ட பக்கத்தில் இருந்தன.

“எனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன். அபிவிருத்தி,பொருளாதார உறவு ,சுற்றுலாத்துறை,கல்வி,கலாசாரம், பரஸ்பர நலன் அடிப்படையிலான பிராந்திய & சர்வதேச விவகாரங்கள் உட்பட தனித்துவமிக்க இந்திய-இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து மீளாய்வு செய்தோம்,” என்று மோதி பதிவிட்டுள்ளார்.

“இந்திய இலங்கை பௌத்த உறவை மேம்படுத்த 15 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கீட்டை அறியத்தருகிறோம். பல்லாயிரம் ஆண்டுகளாக புத்தபெருமான் போதனைகள் எமது நாகரிகங்களுக்கு வழிகாட்டுகின்றன. குஷிநகர் சர்வதேச விமான நிலையத்துக்கான முதல் சேவையில் இலங்கை பௌத்த யாத்திரிகர்களை வரவேற்க இந்தியா ஆவலுடனுள்ளது.”

“மேம்பட்ட வர்த்தகம் & முதலீடு, உட்கட்டமைப்பு மற்றும் தொடர்பாடல் திட்டங்கள் ஊடாக பொருளாதார நட்புறவை வலுவாக்குவதில் இந்தியாவும் இலங்கையும் அர்ப்பணிப்புடன் உள்ளன. பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக போராட எமது பாதுகாப்புசார் உறவை தொடர்வதுடன் அது மேலும் வலுவாக்கப்படும்,” என்றும் மோதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply