இலங்கையை ஐந்து பிராந்தியங்களாக வகுக்கும் முன்மொழிவு தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கரிசணை செலுத்தியுள்ளார்.

 

அதனடிப்படையில் இலங்கையை ஐந்து பிராந்தியங்களாக  பிரிக்கும் முன்மொழி தொடர்பிலான வரைபினை தன்னிடத்தில் கையளிக்குமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார்.

புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள் தொடர்பில் மெல்ல மெல்ல பல்வேறு தரப்பினரினதும் கருத்துக்களை பெற்றுவரும் செயற்பாடுகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்தில் அரசியல் விடயங்களை அதிகளவில் கையாளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அனைத்துத் தரப்பினையும் அரவணைத்து வெற்றி காணவேண்டும் என்றும் முனைப்புக் காட்டுகின்றார்.

குறிப்பாக தமிழ்த் தரப்பின் பங்களிப்பினைப் பெறுவதில் பல்வேறு நகர்வுகளையும் அவர் எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

இந்நிலையில் தமிழ் தரப்பில் முக்கியஸ்தர் ஒருவரிடத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடிய பிரதமர் மஹிந்த, இலங்கையை மூன்று அலகுகளாக பிரிப்பதற்கான பரிந்துரைகள் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார்.

முன்னதாக, பண்டைய அரச காலத்தில் இருந்தது போல் உருகுணை, பிஹிட்டி மற்றும் மாயா ஆகிய மூன்று மாகாணங்களை மாத்திரம் முன்னெடுத்துச் செல்ல நிபுணர்கள் குழுவால் தனக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.

இந்த யோசனையையே பிரதமர் மஹிந்தவும் வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், மூன்று அலகுகளாக இருக்கின்றபோது சுமூகமான சூழலுக்கு பதிலாக மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் வாய்ப்புக்களே அதிகமாக உள்ளதாக குறித்த தமிழ் பிரமுகர் பிரதமர் மஹிந்தராஜபக்ஷவிடத்தில் எடுத்துக்கூறியுள்ளார்.

அத்துடன், மூன்று மாகாணங்களாக வகுப்பதை விடவும் தமிழ்த் தரப்பினால் ஏற்கனவே ஐந்து பிராந்தியங்களாக வகுக்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டிருப்பதையும் அப்பிரமுகர் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

அதனையடுத்து பிரதமர் அந்த முன்மொழிவினை தன்னிடத்தில் கையளிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளதோடு தமிழர்களும் புதிய அரசியலமைப்புச் செயற்பாட்டில் பங்கேற்பது அவசியம் என்றும் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

1972 ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அரசியர் நிர்ணய சபைக்கு தமிழர் தரப்பின் முன்மொழிவுகளைச் செய்வதற்கான பொறுப்பு தமிழரசுக்கட்சியின் அப்போதைய உடுவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான விஸ்வநாதர் தருமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அந்நிலையில், விஸ்வநாதர் தருமலிங்கம் பூரணப்படுத்தப்படாத நிலையிலேயே அரசியல் நிர்ணய சபைக்கான முன்மொழிவுகளை செய்திருந்தார்.

அந்த முன்மொழிவில், சமஷ்டி அடிப்படையில் ஐந்து மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதில், வடக்குகிழக்க தனிமாநிலமாகவும், தெற்கு மேற்கு ஒன்றிணைந்த மாநிலம், வடமத்திய வடமேல் ஒன்றிணைந்த மாநிலம், மத்திய மாநிலம், தென்கிழக்கு மாநிலம் என்றவாறான ஐந்து மாநிலங்கே தமிழ்த் தரப்பினால் முன்மொழியப்பட்டிருந்தது.

எனினும் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்த முன்மொழிவை நிராகரித்திருந்த நிலையில் தமிழர் தரப்புக்கள் அரசியலமைப்பு செயற்பாட்டில் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply