திருத்தணியில் மகள் காதலருடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததால், அவமானம் தாங்க முடியாமல் அவரது தாயார் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள நேரு நகர் ஆச்சாரி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 42). தச்சுத்தொழிலாளி.
இவரது மனைவி மகேஸ்வரி (37). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் 10-ம் வகுப்பு படித்து முடித்த இவருடைய 17 வயதுடைய மகள் வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக அவரது மகள் கடந்த 10-ந் தேதி தனது பெற்றோருக்கு தெரியாமல் தனது காதலருடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மகளை தேடி பல இடங்களில் அலைந்தனர். ஆனால் மகள் கிடைக்காததால், அவரது தாய் மகேஸ்வரி மனமுடைந்து காணப்பட்டார்.
இதனால் அவமானம் தாங்காமல் கடந்த 11-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.
இதனால் உடலில் பற்றிய தீ மளமளவென எரிந்ததில் உடல் கருகி படுகாயம் அடைந்த மகேஸ்வரியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அதன் பின்னர், அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.