இலங்கையில் பசுவதை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இன்று முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய சந்தர்ப்பத்திலேயே இந்த விடயத்தை தெரிவித்தார்.
பசுவதை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அமைச்சரவை பத்திரம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் நேற்றைய தினம் (28) முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனைக்கு, அமைச்சரவை முழுமையாக அனுமதியை வழங்கியதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரம், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்றமையினால், மாடுகளின் பயன்பாடு அத்தியாவசியமானது என அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் மாடுகள் கொல்லப்படுகின்றமையினால், அது விவசாயத்தை பெருமளவில் பாதித்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக விவசாயத்திற்கான தேவையை பூர்த்தி செய்துக்கொள்வதற்கான மாடுகள் போதுமானதாக இல்லை என அமைச்சரவையில் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
அத்துடன், பால்மா இறக்குமதிக்கான வெளிநாடுகளுக்கு பெருமளவிலான நிதி செலுத்தப்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பசுக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையினால், கிராமிய பகுதிகளிலுள்ள மக்களின் பால் தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள முடியவில்லை என அமைச்சரவை பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டே, பசுவதை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரதமரின் யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் உடன் அமலுக்குவரும் வகையில் பசுவதை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பசுவதை தடுப்பு சட்டத்தை இலங்கையில் அமல்படுத்துமாறு பல்வேறு அமைப்புகள் கடந்த சில தினங்களாக போராட்டங்களை நடத்தி வந்திருந்தன.
குறிப்பாக இலங்கை சிவசேனை அமைப்பு, பௌத்த அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பசுவதை தடுப்பு சட்டத்தை அமல்படுத்துமாறு கடந்த சில தினங்களாக போராட்டங்களை நடத்தி வலியுறுத்தியிருந்தனர்.
இந்தநிலையில், பசுவதை தடுப்பு சட்டம் அமல்படுத்தப்படும் பட்சத்தில், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளதாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணைத் தலைவர் ரஸ்மின் தெரிவித்திருந்தார்.
இதன்படி, பசுவதை தடுப்பு சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளமையினால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தொடர்பில் தமது சட்டத்தரணிகளின் உதவிகளை நாடியுள்ளதாக ரஸ்மின் கூறினார்.