இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தபோது நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் முதலீடு செய்ய சீனாவே முன்வந்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கொரிய மக்கள் குடியரசு, ஜேர்மன், வத்திக்கான், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், ஜனாதிபதியை சந்தித்த சந்தர்ப்பத்திலேயே இதனை அவர் கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டு இலங்கையில் பயங்கரவாதம் தோல்வியுறச் செய்ததன் பின்னர், நாட்டின் துரித அபிவிருத்தியையே அரசாங்கமும், மக்களும் எதிர்பார்த்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதம் காரணமாக பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சி அடைந்திருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் துரித அபிவிருத்திக்கு வெளிநாடுகளின் உதவிகள் தேவைப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில், நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சீனாவே முன்வந்ததாக அவர் நினைவு கூர்ந்தார்.

இந்த நிலையில், இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒரு வர்த்தக ரீதியிலான கொடுக்கல் வாங்கல்களே இடம்பெற்றதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனினும், இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவை சில தரப்பினர் பக்கச்சார்பானதாக வியாக்கியானம் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனா மட்டுமின்றி, அனைத்து நாடுகளுடனும் இலங்கை நட்புறவாகவே உள்ளது என்றும் அவர் புதிய தூதர்களிடம் குறிப்பிட்டார்.

சீனாவின் நிதியுதவியின் கீழ் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதை கடன் வலையில் இலங்கை சிக்கிக்கொள்வதாக சில தரப்பினர் குறிப்பிட்ட போதிலும், ஹம்பாந்தோட்டை துறைமுகம் பாரிய அபிவிருத்தி ஆற்றல் வளத்தை கொண்ட திட்டம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கியபோதும், அந்த துறைமுகம் வர்த்தக நோக்கத்திற்காகவே பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்து சமுத்திரம் தொடர்பிலான இலங்கையின் கொள்கையையும்; ஜனாதிபதி இதன்போது தூதுவர்களுக்கு தெளிவூட்டியுள்ளார்.

இந்து சமுத்திரம், அனைத்து நாடுகளுக்கும் திறந்த சுதந்திர வலயமாக இருக்க வேண்டும் எனவும், இந்து சமுத்திரத்தை ஒரு அமைதி வலயமாக மாற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை இலங்கை சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு முன்னரே முன்மொழிந்திருந்ததையும் ஜனாதிபதி இதன்போது நினைவுப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, கொவிட் 19 தொற்றை வெற்றிகரமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தமைக்கான ஜனாதிபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்த கொரிய நாட்டு தூதுவர் ஜோங் வூன்ஜின்ங், இலங்கையே மிகவும் பாதுகாப்பான நாடு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply