கணவரைக் கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவியை கோவை போலீஸார் கைதசெய்தனர்.
கோவை, வெரைட்டி ஹால் அருகேயுள்ள திருமால் வீதியைச் சேர்ந்தவர் ஃபிராங்க்ளின் பிரிட்டோ. 35 வயதான இவர் பீளமேடு பகுதியிலுள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் விற்பனையாளராகப் பணியாற்றிவந்தார்.
இவருக்கு கரோலின் (31) என்ற பெண்ணுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில், பிரிட்டோ கழுத்து, வயிறு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில் இன்று கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது பிரிட்டோவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக வெரைட்டி ஹால் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது பிரிட்டோவின் மனைவி கரோலின், தனது கணவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்ததாகவும், தான் சமையலறையில் காய்கறி நறுக்கிவிட்டுத் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக பின்னால் நின்றுகொண்டிருந்த கணவரின் கழுத்தில் கத்தி பதிந்துவிட்டதாகவும் போலீஸ் விசாரணையில் கூறியிருக்கிறார்.
இதில் சந்தேகமடைந்த போலீஸார், கரோலினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அப்போது, கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்தது தெரியவந்தது.
மேலும் , அடமானம்வைத்த தாலியை எடுத்துத் தர வேண்டும் என்று பிரிட்டோவிடம் கரோலின் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
அப்போது கரோலின், காய் வெட்டும் கத்தியால் பிரிட்டோவை குத்தியதால் உயிரிழந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, கரோலினைக் கைதுசெய்து வெரைட்டி ஹால் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கணவனை மனைவியே கொலை செய்துவிட்டு, எதிர்பாராதவிதமாக கத்திபட்டு உயிரிழந்ததாக நாடகமாடிய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.