சுனாமி தாக்கத்தின்போது 5 வயதில் காணாமல் போன தனது மகன், 16 வருடங்களின் பின்னர் – மீண்டும் தன்னிடம் வந்து சேர்ந்துள்ளதாகக் கூறி, மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றார், இலங்கை – அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஹமாலியா.
கடந்த சில நாட்களாக உள்ளுர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இந்த விடயம் தொடர்பான செய்திகளும், தகவல்களும் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
கல்முனையிலுள்ள அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஊழியராகப் பணியாற்றுகிறார் ஹமாலியா.
காணாமல் போய் திரும்பி வந்த இவரின் மகனை பார்ப்பதற்காக, ஹமாலியாவின் வீட்டுக்கு, உறவினர்களும் ஊரவர்களும் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றனர்.
முகம்மட் அக்ரம் றிஸ்கான் எனும் பெயருடைய தனது மகன் 1999ஆம் ஆண்டு பிறந்தாக ஹமாலியா கூறுகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹமாலியாவின் வீட்டுக்கு அவருடைய மகன் வந்து சேர்ந்திருக்கிறார்.
‘சுனாமி அனர்த்தத்தின் போது தொலைந்து போன மகன் 16 வருடங்களின் பின்னர் தாயைச் சேர்ந்துள்ளார்’ என்று, இந்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டமையினை அடுத்து; சுனாமியின் போது பிள்ளைகளைத் தொலைத்த பலர், தமது பிள்ளைகளின் படங்களையும் விவரங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு, தங்கள் பிள்ளைகளும் உயிருடன் திரும்பி வரமாட்டார்களா எனும் ஏக்கத்தினை வெளிப்படுத்தி வருகின்றமையினையும் காணக் கூடியதாக உள்ளது.
மகன் கிடைத்த சந்தோசத்திலிருக்கும் ஹமாலியாவையும் அவரின் மகனையும் பிபிசி தமிழுக்காக சந்தித்தோம்.
பிச்சைகாரி போல் வேடமிட்டு, பிள்ளையைத் தேடினேன்
“சுனாமி அனர்த்தம் நடந்த வேளையில் – நான் வீட்டில் இல்லை; வேலைக்குச் சென்றிருந்தேன். அப்போது மகனுக்கு 5 வயது. நான் வேலைக்குப் போகும் போது, எனது தாயிடம்தான் மகனை ஒப்படைத்து விட்டுச் செல்வேன். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது எனது பிள்ளை காணாமல் போய்விட்டார்” என்று, பழைய விடங்களைப் பேசத் தொடங்கினார் ஹமாலியா.
“மகன் காணாமல் போனதையடுத்து பல இடங்களிலும் தேடத் தொடங்கினேன். சுனாமி ஏற்பட்டு நாலாவது நாளன்று வைத்தியசாலையொன்றில் எனது மகன் உள்ளார் எனக் கேள்விப்பட்டேன். அங்கு சென்று பார்த்தபோது – பிள்ளை இல்லை. ஆனாலும் தேடும் முயற்சியை நான் கைவிடவில்லை”.
ஹமாலியாவுக்கு ஒரேயொரு பிள்ளைதான். அதுவும் காணாமல் போய்விட்டதால் பெரும் கவலையடைந்தார். கணவரும் கூட இல்லை. “மகன் கிடைத்து நாலாவது மாதம், கணவர் பிரிந்து சென்று விட்டார்” என்று, தனது துயரத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.
சுனாமியில் காணாமல் போன மகனின் சிறிய வயது படத்தை காண்பிக்கிறார் ஹமாலியா
படக்குறிப்பு,
சுனாமியில் காணாமல் போன மகனின் சிறிய வயது படத்தை காண்பிக்கிறார் ஹமாலியா
“2016ஆம் ஆண்டு, அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணியாற்றும் பெண்ணொருவர் மூலம், எனது பிள்ளை – அம்பாறையிலுள்ள வீடொன்றில் வசித்து வருவதாக தெரிந்து கொண்டேன். அதனையடுத்து எனது பிள்ளையைத் தேடிச் சென்றேன்”.
“சிங்களப் பெண்கள் போல் ஆடையணிந்து, சோப் விற்பனை செய்பவரைப் போல், கடலை விற்பவரைப் போல், பிச்சைக்காரி போலெல்லாம் வேடமணிந்து எனது மகன் இருக்கும் வீட்டுப் பக்கமாகச் சென்றேன். அப்போது இவர்தான் எனது மகன் என்பதை நான் கண்டு கொண்டேன். பிறகு அங்குள்ளவர்களிடம் பேசி, இவர் என்னுடைய மகன் என்பதைக் சொன்னேன். அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை”.
“அண்மையில் சிங்கள நண்பர்கள் மூலமாக எனது மகனின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொண்டேன். அவருடன் பேசினேன். தொழிலொன்றின் நிமித்தம் கொழும்பு சென்றிருந்த அவர், இப்போது என்னிடம் வந்து சேர்ந்துள்ளார்” என்று நடந்த விடயங்களை ஹமாலியா விவரித்தார்.
ஆனாலும் காணாமல் போன தனது மகன் இவர்தான் என்பதை – உறுதியாக நிரூபிப்பதற்குரிய எவ்வித ஆவணங்களையும் இதன்போது ஹமாலியா எம்மிடம் காண்பிக்கவில்லை. காணாமல் போன மகனின் சிறிய வயது புகைப்படம் ஒன்றினை காட்டி, அவர்தான் இவர் என்கிறார்.
இந்த நிலையில் ஹமாலியாவின் மகனுடனும் பேசினோம். சரளமாக சிங்களத்தில் பேசும் அவர் – தமிழில் பேசுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றார். அவர் இதுவரை வாழ்ந்து வந்த இடம்பற்றிய தகவலையும், வீட்டு முகவரியினையும் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டோம்.
தனது மகனின் பெயர் அக்ரம் றிஸ்கான் என்று ஹமாலியா கூறிய போதும், அந்தப் பையனோ தனது பெயர் – முகம்மட் சியான் என்கிறார்.
ஹமாலியாவுடன் வாழ்ந்த சிறு வயது ஞாபகங்கள் எவையும் அந்தப் பையனின் நினைவில் இல்லை. “நீ என்னுடைய மகன்” என்று ஹமாலியா கூறியதை நம்பியே, அவர் அங்கு வந்து சேர்ந்துள்ளார்.
சுனாமியின் போது காணாமல் போன தனது மகன் – வேறொரு குடும்பத்தில் வளர்கிறார் என்றும், அவரை மீட்டுத் தருமாறு கோரியும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சில வருடங்களுக்கு முன்னர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ததாக ஹமாலியா கூறினார்.
மேலும் ஜனாதிபதி செயலகம் மற்றும் மனித உரிமை ஆணைக்குழு போன்ற இடங்களுக்கும், தனது மகனை மீட்டுத் தருமாறு கோரி – எழுத்து மூலம் அவர் முறையிட்டிருக்கின்றார்.
“ஆனால், அந்த முறைப்பாடுகளுக்கமைய எனக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை” என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க இந்த சம்பவம் தொடர்பில், ஹமாலியா கூறிய விடயங்களை மட்டுமே அனைத்து ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தன. காணாமல் போன நிலையில் திரும்பி வந்துள்ளார் எனக் கூறப்படும் ஹமாலியாவின் மகன் – இதுவரை வாழ்ந்த குடும்பம் குறித்து எந்தவொரு ஊடகமும் பேசவேயில்லை. அந்தக் குடும்பத்தைத் தேடி பிபிசி சென்றது.
நான்தான் தாய்: உரிமை கோரும் நூறுல் இன்ஷான்
சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை நகரில், நூற்றுக்கும் குறைவான மலாய் முஸ்லிம் குடும்பங்கள் உள்ளன. நூறுல் இன்ஷான் எனும் பெண்ணின் குடும்பம் அவற்றில் ஒன்றாகும். காணாமல் போய் திரும்பி வந்ததாகக் கூறப்படும் பையன் இங்குதான் வளர்ந்துள்ளார்.
கல்லால் கட்டப்பட்ட சிறிய வீடொன்றில் தனது வயதான தாயாருடன் வாழ்கிறார் நூறுல் இன்ஷான். அவருக்கு 42 வயதாகிறது. அங்கு சென்ற நாம் முகம்மட் சியான் பற்றி விசாரித்தோம். அவர் தனது மகன் என்றும், தற்போது வேலை கிடைத்து கொழும்புக்குச் சென்றுள்ளார் எனவும் நூறுல் இன்ஷான் தெரிவித்தார். அதன்போது நடந்த சம்பவங்களை நாம் கூறியோது அவர் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
“ஹமாலியா எனும் பெண் எனது மகனைத் தேடி இங்கு அடிக்கடி வந்துள்ளார். அந்த காலகட்டத்தில் நான் பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றிருந்தேன். அந்தப் பெண்ணிடம் எனது தாயார்; “சியான் எங்கள் பிள்ளை” என்று கூறியிருக்கிறார். ஆனால், அவர் அதனைக் கருத்தில் எடுக்காமல் அடிக்கடி வந்து தொந்தரவு செய்திருக்கிறார்” என்றார் நூறுல் இன்ஷான்.
“சியான் 2001ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி அம்பாறை வைத்தியசாலையில் பிறந்தார்” என்று தெரிவித்த நூறுல் இன்ஷான்; தான் கர்ப்பமாக இருந்த போது – சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் வழங்கப்பட்ட ‘கர்ப்பவதி பதிவேறு’, மகன் பிறந்தபோது வழங்கப்பட்ட ‘குழந்தையின் சுகாதார வளர்ச்சிப் பதிவேடு’ ஆகியவற்றினைத் தேடியெடுத்துக் காண்பித்தார்.
மேலும் சியானின் சிறிய வயது புகைப்படங்களையும் அவர் எம்மிடம் காட்டினார்.
இதன்போது பேசிய சியானின் பாட்டி; “எனது மகளுக்கு சியான் ஒரே பிள்ளை. சியானின் தாய் கர்ப்பமாக இருக்கும் போதே அவரின் கணவர் பிரிந்து விட்டார். சியானின் பிரசவத்தின் போது, வைத்தியசாலையில் நான்தான் துணையாக இருந்தேன்” என்றார்.
சியான் – அம்பாறையிலுள்ள சத்தாதிஸ்ஸ எனும் பாடசாலையில் முதலாம் வகுப்பில் மூன்று மாதங்கள் வரை கல்வி கற்றுள்ளார். அதன் பின்னர் சியானின் தாயை – ஹம்பாந்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் திருமணம் செய்து அங்கு அழைத்துச் சென்றுள்ளார். அதனால் முதலாம் வகுப்பிலிருந்து 05ஆம் வகுப்பு வரை ஹம்பாந்தோட்டயிலுள்ள பாடசாலையொன்றில் சியான் படித்துள்ளார்.
பின்னர், சியானின் தாய் மீண்டும் அம்பாறை வந்துள்ளார். அதனையடுத்து 05ஆம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை மீண்டும் அம்பாறையிலுள்ள பாடசாலைக்கு சியான் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் படிப்பை தொடரவில்லை.
இவை அனைத்தும் சியானின் தாயார் கூறிய விடயங்கள்.
இந்தப் பின்னணியில்தான், சுனாமியின் போது காணாமல் போன தனது மகன் திரும்பி வந்துள்ளதாகவும், அம்பாறையில் உள்ள நூறுல் இன்ஷான் என்பவர் தனது மகனின் வளர்ப்புத்த தாய் என்றும், முகம்மட் அக்ரம் றிஸ்கான் எனும் தனது மகனுக்கு, அவரை வளர்த்தவர்கள் சியான் எனப் பெயர் வைத்துள்ளார்கள் எனவும் ஹமாலியா கூறுகிறார்.
இதன் காரணமாக, ஒரு பிள்ளைக்கு இரண்டு தாய்கள் உரிமை கோரும் நிலைமை தற்போது உருவாகியுள்ளது.
நூறுல் இன்ஷான் வழங்கிய, சியானின் சிறிய வயது படம்
இந்த நிலையில், தனது மகனை மீட்டெடுப்பதற்காக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, முதற்கட்டமாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமையன்று முறைப்பாடொன்றைப் பதிவு செய்ததாக நூறுல் இன்ஷான் தெரிவித்தார்.
சுனாமி பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தையொன்று, அநாதரவாக கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், ஒன்பது பெற்றோர் அக்குழந்தைக்கு உரிமை கோரிய சம்பவமொன்று இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது.
பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனையினை அடுத்து, உரிய பெற்றோரிடம் அந்தக் குழந்தை ஒப்படைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.