கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் யாவும் நாளை முதல் முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம். மொறாய்ஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பரந்தன் பூநகரி வீதியூடாக நாளை மூன்றாம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அனைத்து வகையான போக்குவரத்துகளும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
மேலும், பரந்தனிலிருந்து 12 ஆவது கிலோ மீற்றர் பகுதியில் அமைந்துள்ள இரும்புப் பாலம் ஒன்றில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்த வேலை காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் மாற்று பாதைகளைப் பயன்படுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை காலை ஒன்பது மணி முதல் ஆரம்பமாகும் திருத்தப்பணிகள் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு இடம்பெறும் எனவும் இக்காலப்பகுதியில் துவிச்சக்கர வண்டி உள்ளிட்ட எந்தவொரு வாகனமும் குறித்த வீதியைப் பயன்படுத்த முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.