தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான தியாக தீபம் திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாதென, வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் கெஹலிய, யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துமெனவும் ஆகையால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் கூறினார்.

“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது தடைசெய்யப்பட்ட பங்கரவாத அமைப்பாகவே இருக்கின்றது. அவ்வாறு தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினரை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது. அதனடிப்படையிலையே தீலிபனை நினைவு கூருவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

“மேலும் ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காணப்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ, நினைவு கூரவோ முடியாது.

“இதேவேளை, இன்று திலீபனுக்கு நினைவேந்தல் என்றும் இது போல இன்று ஒருவர் நாளை ஒருவர் என நினைவேந்தல் செய்ய முற்படலாம். அதனாலே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை நினைவு கூர தடை விதிக்கப்படுகிறது” என்றார்.

அவர் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்கு மக்கள் 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகால யுத்தம் என்பது சுலபமானதல்ல. யுத்த காலத்தின் போது காணாமல் போனவர்கள், மரணித்தவர்கள் பற்றி சில தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

குறிப்பாக காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் விசா எடுத்து வெளி நாடுகளுக்குச் சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாது வேறு சிலர் தங்களது வீட்டு முகவரிகளை பிழையாகக் கொடுத்து மோசடி செய்துள்ளனர். எனவே இவற்றில் பல முரண்பாடுகள் உள்ளன.

எனவே, காணாமல் போனவர்கள் தொடர்பாக உண்மையாக அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும். காணாமல் போனவர்களின் விவகாரங்களைக் கையாள்வதற்கு காணாமல் போனவர்கள் பணியகம் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றின் ஊடாக நாம் தகவல்களைத் திரட்டி வருகிறோம்.

குறிப்பாக, உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தொடர்பாக பலவிதமான கருத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு விதமான அறிக்கைகள் ஒவ்வொரு தொகையைக் கூறுகின்றன. எனவே, காணாமல் போனவர்கள் தொடர்பாக வேறுபாடுகள் இருப்பதால் ஆதாரபூர்வமான அறிக்கை ஒன்று மிகவும் அவசியமான ஒன்றாகும்.

எனவே, காணாமல் போனவர்கள் விவகாரத்தில் முதலில் தரவுகள் அடிப்படையில் உண்மையான அறிக்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் போர்க் காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான உதவித் திட்டங்கள் மற்றும் உதவித் தொகை வழங்குவது தொடர்பாக கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தால் அது ஆராயப்படும்” என்றார்.

Share.
Leave A Reply