நீர்கொழும்பு – கம்பல்தொட பகுதியில் கடலில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த தலவாக்கலை மற்றும் பதுளைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இன்று சடலங்களாக மீட்க்கப்பட்டுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  நீர்கொழும்பு – கம்பல்தொட கடற்பகுதியில் கடலில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில்  நீராடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மூவர் நீரிழ் மூல்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு – தங்கொட்டுவ பகுதியில் தொழிற்சாலை ஒன்றில் தொழில்புரிந்து வந்துள்ள குறித்த இளைஞர்கள் நேற்று மாலை நீராடுவதற்காக , தனது நண்பர்களுடன் நீர்கொழும்பு கடலுக்குச் சென்றுள்ளனர். இதன்போது மூன்று இளைஞர்கள் அலைக்குள் சிக்குண்டு கடலினுள் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் கடற்படையின் சுழியோடிகளும் , பொலிஸாரும்  இளைஞர்களை தேடும் பணிகளை ஆரம்பித்ததுடன் , இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்1.30 மணியளவில் குறித்த இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை – ஸ்டேலின் தோட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய முத்துகுமார் சிந்துஜன் , 23 வயதுடைய மனோகரன் சசிகுமார் மற்றும் பதுளை – நமுனுகள பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய புகனேந்தர் பிரதீபன் என்ற இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலங்களை , குடும்பத்தினருக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply