இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் கொரோனா தொற்று பரவுவது கடந்த பல மாதங்களாக இல்லாது இருந்த நிலையில், சமூகத்திற்குள் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரும் இலங்கையர்களுக்கு மாத்திரம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் சமூகத்திலிருந்து கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவருக்கே கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கம்பஹா – திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 39 வயதான பெண்ணொருவருக்கே கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண், ஐ.டி.எச் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காய்ச்சல் காரணமாக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த பெண், குணமடைந்து வீடு திரும்பும் போது மருத்துவமனையினால் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் ஊடாக கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பெண் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் அறையிலிருந்த சுமார் 15 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், இந்த பெண் கடமையாற்றிய தனியாருக்கு சொந்தமான ஆடைத் தொழிற்சாலையின் 40 ஊழியர்களும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணுடன் நெருங்கி பழகிய ஏனையோர் தொடர்பிலான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு நடத்தப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையின் கீழ், நாட்டு மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றின் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளது.

ஊரடங்கு அமலில்..

திவுலபிட்டிய மற்றும் மினுவங்கொட ஆகிய போலீஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உடன் அமுலுக்குவரும் வகையில் போலீஸ் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

திவுலபிட்டிய பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், கம்பஹா, திவுலபிட்டிய மற்றும் மினுவங்கொட ஆகிய பகுதிகளின் சில கிராமங்களுக்குள் செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, பெம்முன்ன, ஹொரகஸ்முல்ல, திவுலபிட்டிய, வெவகெதர, ஹபுவலான, ஹென்பிட்டிகெதர ஆகிய பகுதிகளுக்குள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

1897ஆம் ஆண்டு 3ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளும் காலவரையறை மூடப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் கொரோனா நிலைமை

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,395ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றினால் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3,254 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன், 128 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் கடந்த மார்ச் மாதம் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன், மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி வரை நாடு முழுமையாக முடக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர் படிப்படியாக நாடு வழமைக்கு திரும்பிய பின்னணியில், சமூகங்களுக்கு இடையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கவில்லை.

Share.
Leave A Reply