கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் ஊக்கத்தொகை வழங்கப்படுமென சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. இத்தொகை ஒரே முறை ஒட்டுமொத்தமாக வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலால் உண்டான மன அழுத்தம் மற்றும் ஆட்குறைப்பு ஆகியவை காரணமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவை சிங்கப்பூர் குடிமக்கள் தள்ளி வைத்து வருகின்றனர். அதற்காக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

எவ்வளவு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்பது குறித்து தகவல் எதையும் இன்னும் சிங்கப்பூர் அரசு வெளியிடவில்லை.

மகப்பேறு தொடர்பாக சிங்கப்பூர் அரசு ஏற்கனவே வழங்கி வரும் பல்வேறு சலுகைகளுடன் இதுவும் ஒரு கூடுதல் சலுகையாக இருக்கும்.

உலகிலேயே மிகவும் குறைவான குழந்தை பிறப்பு விகிதம் உள்ள நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் பிறப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை பல பத்தாண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

சிங்கப்பூரின் அண்டை நாடுகளான இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் சிங்கப்பூரில் உள்ள நிலவரத்துக்கு நேர் எதிரான நிலை உள்ளது.

அந்த நாடுகளில் கொரோனா வைரஸ் முடக்க நிலை காலகட்டங்களில் கருவுற்று வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

“குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவோர் அந்த திட்டத்தை தள்ளி வைப்பதாக எங்களுக்கு பின்னூட்டம் கிடைத்தது,” என்று சிங்கப்பூர் துணை பிரதமர் ஹெங் ஸ்வீ கீட் திங்களன்று தெரிவித்துள்ளார்.

குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு எவ்வளவு பணம் வழங்கப்படும் என்பது குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய திட்டங்களின் அடிப்படையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு பத்தாயிரம் சிங்கப்பூர் டாலர் வரை சலுகைகள் வழங்கப்படுகிறது.
Singapore offers ‘pandemic baby bonus’ to boost births

2018ஆம் ஆண்டு சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்தது.

அரசின் தரவுகளின்படி அந்த ஆண்டில் பெண்கள் சாரசரியாக நபர் ஒன்றுக்கு 1.14 குழந்தைகளே பெற்றுக்கொண்டனர்.

இதே மாதிரியான பிரச்சனையை எதிர்கொள்ளும் பல ஆசிய நாடுகளிலும் பெருந்தொற்று பரவல் காரணத்தால் நிலைமை இன்னும் மோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிதும் விமர்சிக்கப்பட்ட ஒற்றைக் குழந்தை திட்டத்தில் பல்வேறு தளர்வுகளை கொண்டு வந்த பின்னரும் சீனாவின் பிறப்பு விகிதம் இந்த ஆண்டு மோசமாக சரிந்தது.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அந்த எண்ணிக்கை குறைந்தது.

Share.
Leave A Reply