மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் 605 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 139 பேருக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதனடிப்படையில், குறித்த தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 706 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையின் அனைத்து ஊழியர்களும் தற்போது வசிக்கும் பகுதிகளிலிருந்து வௌியேற வேண்டாம் என இராணுவத் தளபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன், வீடுகளிலிருந்து வௌியேறுவதை தவிர்க்குமாறும் குறித்த ஊழியர்களின் குடும்பத்தினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த நிறுவனத்திலிருந்து கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்ட ஊழியர்களின் குடும்பத்தினரை, தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுக்கு பாரிய அளவில் நோய் குணங்குறிகள் காணப்படவில்லை என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொற்றுக்குள்ளான அநேகமானவர்களிடம் நோய் அறிகுறி தென்படாமை தாம் எதிர்கொண்ட முக்கிய சவால் என Brandix நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமது ஊழியர்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் முக்கியத்துவம் அளிப்பதுடன், தற்போதைய நிலையில் ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை இராணுவம் வழங்கும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என Brandix நிறுவனம் தெரிவித்துள்ளது.