யாழ். அல்லைப்பிட்டி கடற்கரையில் கரை ஒதுங்கிய ராமேஸ்வரம் மீனவரின் உடல் இலங்கையிலிருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக மீனவரின் சொந்த ஊரான தங்கச்சி மடம் கொண்டு வரப்பட்டது. உடலை தாயகம் எடுத்து வர உதவிய யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுக்கு ராமேஸ்வரம் மீனவ சங்கத்தினர் மற்றும் மீனவரின் உறவினா்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
கடந்த புதன்கிழமை காலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தனிக்கிளாஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்று புதன்கிழமை இரவு கச்சத்தீவுக்கும் தனுஸ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் படகிலிருந்து கார்சன் நிலை தடுமாறி நடுக்கடலில் விழுந்து மாயமானார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் வேலணைப் பகுதிக்கு உட்பட்ட அல்லைப்பிட்டி, வெண்புறவிநகர் கடற்கரையில் மீனவரின் உடல் கரை ஒதுங்கியது.
பின்னர் உடலை மீட்ட ஊர்காவற்றுறைபொலிசார் உடற்கூறு ஆய்வுக்காக யாழ்ப்பாணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கைப்பற்றப்பட்ட உடலை புகைப்படம் எடுத்து யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மூலம் தங்கச்சிமடத்தில் உள்ள மீனவர்களின் உறவினர்களுக்கு அனுப்பப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து நேற்று மீனவர் கார்சனின் உடல் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் இன்று அதிகாலை இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மீனவரின் உடலை கப்பல் மூலம் தாயகம் திருப்பி அனுப்ப காங்கேசன் கடற்படை முகாமில் உள்ள கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மூலமாக கொண்டு வரப்பட்டு சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோர காவல் படையிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு மாலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகம் வந்தடைந்தது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக மீனவரின் உடல் அவரது சொந்த ஊரான தங்கச்சிமடத்திற்குக் கொண்டு வரப்பட்டு பின் தகனம் செய்யப்பட்டது.
மீனவர் கார்சன் உடல் தாயகம் எடுத்து வர உதவிய யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுக்கு ராமேஸ்வரம் மீனவ சங்கத் தலைவர் ஜேசுராஜா மற்றும் மீனவரின் உறவினாகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.