யாழ் புங்குடுதீவில் 1212 குடும்பங்களைச் சேர்ந்த 3945 ற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.
இன்றும் 385ற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
நேற்று முன்தினம் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் 1212 குடும்பங்களைச் சேர்ந்த 3945 ற்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.
புங்குடுதீவு பகுதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனினும் புங்குடுதீவு பிரதேசம் அப்பகுதியில் இருந்து யாரும் வெளியேறாதவாறும் அப்பிரதேசத்துக்குள் யாரும் செல்லாதவாறும் முடக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் புங்குடுதீவு ஒன்றியம் மற்றும் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்தினரால் சமைத்த உணவுகள் பொதியிடப்பட்டு வழங்கப்படுகின்றது அத்தோடு சர்வோதய நிறுவனத்தினால் குடி தண்ணீர் விநியோகிக்கப்படுகின்றது.
அதேவேளை நெடுந்தீவு , நயினாதீவு மற்றும் ஏனைய தீவுகளுக்கான படகு போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம்பெற்று வருகின்றன.
காலை ஒரு சேவையும் மாலையில் ஒரு சேவையும் இடம்பெறுகின்றது அச்சேவைக்கிணங்க யாழ்ப்பாணத்திற்கான பஸ் சேவையும் இடம்பெறுகின்றது.
குறிப்பாக தீவு பகுதிக்குள் தீவக முகவரி அடையாள அட்டையுடையவர்கள் மட்டும் தீவு பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தீவு பகுதிகளுக்கான படகு சேவைகள் இடம்பெறுகின்றன.
அத்தோடு குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி கடந்த 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பெண் புங்குடுதீவில் கலந்து கொண்ட பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்களிற்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இன்றைய தினம் 380க்கும் மேற்பட்டோர் சுயதனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளான புங்குடுதீவு பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றைய பெண் உட்பட நால்வர் நேற்று இரவு தனிமைப்படுத்தல் முகாமிற்கு சுகாதார பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.
புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் பொலிசார் கடற்படையினர் மற்றும் கிராம அலுவலர்களினால் பயணிப்போர் அனைவரும் சோதனையிடப்பட்டு விவரங்கள் பதியப்பட்ட பின்னர் அப்பகுதியூடாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனினும் புங்குடுதீவு பகுதியில் இருந்து எவரும் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது குறித்த பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் ,ஊர்காவற்துறை பொலிஸார் ,மற்றும் கடற்படையினர் சுகாதாரப் பிரிவினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.