யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சம் காரணமாக தடை செய்யப்பட்ட புங்குடுதீவுப் பகுதியில் க.பொ.த உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரீட்சை மேற்பார்வை ஆசிரியர்களிற்கு விசேட பாதுகாப்பு உடை வழங்கப்பட்டு பரீட்சை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் கொவிட் -19 ன் தொற்று அபாயம் என புங்குடுதீவில் தற்போது 3 ஆயிரத்து 915 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இப் பகுதியில் க.பொ.த உயர்தரம் எழுதும் 3 மாணவர்களும் தரம் 5 எழுதும் இப்பிரதேசத்தைச் சேர்ந்த 7 மாணவர்களும் உள்ளதோடு கிளிநொச்சியில் கல்வி பயிலும் இரு மாணவர்களும் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தை சேர்ந்த ஒரு மாணவரும் என தரம் 5 மாணவர்கள் 10 பேர் உள்ளனர்.
இந்த 13 மாணவர்களிற்குமான பரீட்சைகள் இப் பகுதியிலேயே நடத்த ஏற்பாடு செய்யப்படுவதோடு இவ்வாறு நடைபெறும் பரீட்சைக்கு செல்லும் மேற்பார்வை ஆசிரியர்களிற்கு தினமும் பாதுகாப்பு உடை வழங்க சுகாதாரத் திணைக்களம் ஊடாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் நடைபெறும் பரீட்சைகள் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.