மலேசியாவைச் சேர்ந்த தமிழ் குடும்பமொன்று லண்டனின் மேற்கு பகுதியில் உள்ள பிரெண்ட்போர்டில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சடலாமாக மீட்கப்பட்டுள்ளது.
சடலாமாக மீட்கப்பட்டவர்கள் கணவர் குகராஜ் சிதம்பரநாதன் (வயது 42), மனைவி பூர்ணா காமேஷ்வரி சிவராஜ் (36), மகன் கைலாஷ் குகராஜ் (3) ஆகியோராவர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
சடலமாக மீட்கப்பட்ட பூர்ணா பற்றி திடீரென எந்த தகவலும் இல்லை என்ற நிலையில் அவரது உறவினர் கவலையோடு, லண்டன் பெருநகர பொலிஸை தொடர்பு கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் செய்தார்.
திங்கட்கிழமையன்று பொலிஸாரும் அந்த வீட்டாருடன் பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் இல்லை. இதையடுத்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாலையில் பொலிஸார் அந்த குடியிருப்புக்கு சென்றனர்.
கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்ற பொலிஸார் அங்கு பூர்ணாவும், அவரது மகன் கைலாசும் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை கண்டனர்.
குகராஜ் சிதம்பரநாதன் கடுமையான கத்திக்குத்து காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். பொலிஸார் அங்கு சென்ற சில நிமிடங்களில் அவரும் இறந்து விட்டார்.
இது குறித்து விசாரித்து வரும் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் மனைவியையும், குழந்தையையும் கொன்று விட்டு, கத்தியால் தன்னை தானே குத்திக்கொண்டு கணவர் இறந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.