தனியார் எலக்ட்ரானிக்ஸ் கடையில் மேலாளராக பணிபுரியும் திருச்சி, திருவெறும்பூர் பாலாஜி நகரை சேர்ந்த போலீஸ்காரர் மகாலிங்கத்தின் மகன் கார்த்திக் என்பவருக்கும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் சிவகுமாரின் மகள் சுமதிக்கும்(20) கடந்த ஆண்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
பின்னர் இருவரும் திருவெறும்பூர் பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், சுமதி கர்ப்பமானார். அவருடைய கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி கார்த்திக் கூறியுள்ளார்.
அத்துடன் சுமதியின் நகைகளை கார்த்திக் அடமானம் வைத்து ஏமாற்றியதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் கணவரின் சந்தேகப்பட்டு கணவரது செல்போனைப் பார்த்தபோது, அதில் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இதுபற்றி கார்த்திக்கை விசாரித்தபோது திருச்சியை சேர்ந்த ஸ்டெல்லா என்ற பெண்ணை கார்த்திக் முதலாவதாகவும், சென்னையை சேர்ந்த வாணி என்ற பெண்ணை 2-வதாகவும், மூன்றாவதாக அதே பகுதியை சேர்ந்த மீனா என்ற பெண்ணையும் திருமணம் செய்துள்ளது தெரியவந்தது.
ஆனால் இதை அனைத்தையும் மறைத்து 4-வதாக சுமதியை திருமணம் செய்ததாக கார்த்திக் சுமதியுடன் தெரிவித்தார்.
திருமணம் மட்டுமல்ல, முதல் மனைவி ஸ்டெல்லாவிற்கு 3 வயது மகனும், 2-வது மனைவி வாணிக்கு 1½ வயது பெண் குழந்தையும் என கார்த்திக்கிற்கு குழந்தைகள் உள்ளதையும் கேட்டு அதிர்ந்து போன சுமதி தனது தந்தை மூலம் போலீசில் புகார் அளிக்க, லால்குடி போலீசார் இது தொடர்பாக கார்த்திக்கை கைது செய்து விசாரித்ததில் அவர் தன் மீதான இந்த குற்றங்களை ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸார் சிறையில் அடைத்தனர்.