நாமக்கல் மாவட்டத்தில் 6 மாதங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரு சிறுமிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் இன்று மீட்டுள்ளனர்.

ராசிபுரம் பகுதியில் வசித்துவந்த இச்சிறுமிகள் எளிமையான கூலித்தொழிலாளியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் தந்தை உயிரிழந்துவிட்டார். வாழ்வாதாரத்திற்காக தாய் கூலிவேலை செய்து வருகிறார்.

வறுமை மற்றும் பாதுகாப்பில்லாத சூழலில் வளர்ந்து வரும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது குறித்த தகவல் பெறப்பட்டதன் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ராசிபுரம் காவல்துறையினர் இன்று அவர்களின் வசிப்பிடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

இதில் 8 மற்றும் 9ம் வகுப்பு படித்துவரும் சகோதரிகள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. மேலும், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இச்சிறுமிகளை 10க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளதாக ஆய்வு செய்த அலுவலர்கள் பிபிசியிடம் தெரிவிக்கின்றனர்.

தற்போது வரை சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை அலுவலர் ரஞ்சிதப்பிரியா அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குறித்து காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply