இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் “800” திரைப்படத்தில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராக தமிழ்நாட்டிலும் உலக அளவிலும் சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தனது தரப்பு விளக்கத்தை முத்தையா முரளிதரன் அளித்துள்ளார்.
இது தொடர்பாக துபையில் இருந்து மூன்று பக்க அறிக்கை, முத்தையா முரளிதன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
“என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாகக் கூறிய தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன்.
பிறகு முத்தையா முரளிதனாக நான் படைத்த சாதனைகள், என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.”
இலங்கையில் தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக, எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது, இந்திய வம்சாவளியான மலையக தமிழர்கள்தான்.
இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு, ஜேவிபி போராட்டத்தில் நடந்த வன்முறை, பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார். என் சொந்தங்களில் பலர் பலியாகினர். வாழ்வாதாரத்தை இழந்து பல முறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம்.
ஆதலால், போரால் நிகழும் இழுப்பு, அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கு தெரியும். முப்பது வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை. அதன் மத்தியேலேயேதான் எங்கள் வாழ்க்கை பயணம நடைபெற்றது.
இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதித்தேன் என்பது பற்றிய படம்தான் “800”.
இது நாள்வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளைக் கடந்தே வந்துள்ளேன். அது விளையாட்டானாலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது என் வாழ்க்கை வரலாற்றுப் படமான “800” திரைப்படத்தைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான விளக்கங்களை கூற விரும்புகிறேன்.
இது, இப்போது பல்வேறு காரணங்களுக்காக அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், நான் பேசிய சில கருத்துகள் தவறாக திரித்து சொல்லப்பட்டதால் வந்த விளைவுதான்.
உதாரணமாக, நான் 2009ஆம் ஆண்டுதான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019இல் கூறியதை, “தமிழர்களை கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்” என திரித்து எழுதுகிறார்கள்.
ஒரு சராசரி குடிமகனாக சிந்தித்துப் பாருங்கள். போர் சூழ்நிலையிலேயே இருந்த ஒரு நாட்டில், எங்கு எது நடக்கும் என்பது தெரியாது. என் பள்ளி காலத்தில் என்னுடன் பள்ளியில் ஒன்றாக விளையாடிய மாணவன் மறுநாள் உயிருடன் இருக்க மாட்டான்.
வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பினால்தான் நிஜம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் போர் முடிவுற்றது.
ஒரு சராசரி மனிதனாக, பாதுகாப்பாக உணர்வது மட்டுமல்லாமல் போர் நிறைவடைந்ததால் கடந்த 10 வருடங்களாக இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏதுமில்லாமல் இருப்பதை மனதில் வைத்தே, “2009ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான நாள்” என்ற கருத்தினைத் தெரிவித்திருந்தேன். ஒரு போதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன்.
அடுத்த எனது பள்ளி காலம் முதலே நான் தமிழ் வழியில் படித்து வளர்ந்தவன்தான். எனக்கு தமிழ் தெரியாது என்பது மற்றொரு தவறான செய்தி.
“தமிழ் மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை உடையவர்” என முரளி கூறுகிறார் என சொல்கின்றனர்.
இயல்பாகவே சிங்களர்கள் மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்வதால், எல்லோரிடமும் ஒரு தாழ்வுமனப்பான்மை இருக்கத்தான் செய்யும்.
அது இயற்கை. அது என்னிடத்திலும் இருந்தது. காரணம், எனது பெற்றோரும் கூட அப்படிப்பட்ட சிந்தனையில்தான் இருந்தார்கள்.
அதையும் மீறி கிரிக்கெட் மீதான எனது ஆர்வம் பள்ளியின் கிரிக்கெட் அணியில் என்னை பங்கேற்க தூண்டியது.
எனது முயற்சியால் அணியில் சேர்ந்தேன். எனது திறமையால் நான் ஒரு தவிர்க்க இயலாதவனாக மாறினேன். எனவேதான், “தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறிந்து உங்கள் திறமை மீது நம்பிக்கை வைத்து முயற்சி செய்யுங்கள்” என்ற எண்ணத்தில்தான் அப்படி கூறுனேன்.
முத்தையா முரளிதரன்
என்னை பொறுத்தவரையில் சிங்களர்களாக இருந்தாலும் மலையக தமிழர்களாக இருந்தாலும் ஈழத் தமிழர்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன்.
ஒரு மலையக தமிழனான நான், என் மலையக மக்களுக்கு செய்த உதவிகளை காட்டிலும் ஈழத்தமிழர்களுக்கு செய்த உதவிகளே அதிகம்.
செய்யும் நன்மைகளை சொல்லிக்காட்டுவதை என்றைக்கும் நான் விரும்புவதில்லை. ஆனால், இன்று அதை சொல்லியாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.
ஐ.நாவின் உணவு தூதராக இருந்தபோது 2002ஆம் ஆண்டு LTTE கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் உள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு அந்த திட்டத்தை எடுத்துச் சென்றது முதல், பின் சுனாமி காலங்களில் பாதிக்கப்பட்ட ஈழ மக்களுக்கு நான் செய்த உதவிகளை அந்த மக்கள் அறிவர்.
போர் முடிவுற்ற பின் கடந்த 10 வருடங்களாக எனது தொண்டு நிறுவனமான Foundation of Goodness மூலம் ஈழ மக்களுக்கு செய்யும் உதவிகள்தான் அதிகம்.
ஈழத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் எனது தொண்டு நிறுவன கிளைகள் மூலம் குழந்தைகளுக்கு கல்வி, பெண்கள் முன்னேற்றம், மருத்துவம் என பல வகைகளில் பல உதவிகள் செய்து வருகிறேன்.
மக்கள் நல்லிணக்கத்துக்காக வருடா வருடம் MURALI HARMONY CUP என்கிற பெயரில் கிரிக்கெட் போட்டிகள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நடத்தி வருகிறோம். இன்னும் இது போல ஏராளமான விடயங்கள் உள்ளன.
நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் நான் இந்திய அணியில் இடம்பெற முயற்சித்திருப்பேன். இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா?
இவை அனைத்தையும் விடுத்து சிலர், அறியாமையாலும் சிலர் அரசியல் காரணத்துக்காகவும் என்னை தமிழ் இனத்துக்கு எதிரானவர் என்பது போல சித்தரிப்பது வேதனையளிக்கிறது.
எவ்வளவு விளக்கம் அளித்தாலும் எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது என்றாலும் என்னைப்பற்றி ஒரு பக்கம் தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வரும் நிலையில், நடுநிலையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இவ்விளக்கத்தை அளிக்கிறேன் என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.