தற்கொலை குண்டுதாரிகள் 20 பேரை பயன்படுத்தி உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்த பயங்கரவாதி ஸஹ்ரான் திட்டமிட்டிருந்துள்ளதாக முதன் முறையாக தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் விசாரணை அதிகாரி ஒருவர் சாட்சியமளித்து இதனை வெளிப்படுத்தினார்.
அத்துடன், முதல் தாக்குதலுக்கு பின்னர் 3 கட்டங்களின் கீழ் தாக்குதல் பலவற்றை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் தெரிய வந்ததாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்ற அறிவித்தலின் கீழ் சாட்சியமளித்த குறித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரியின் சாட்சியத்தில்
‘ 2019 மார்ச் மாதம் ஆகும்போது தேசிய தெளஹீத் ஜமா அத்தின் தலைவர் பதவி தொடர்பில் ஸஹ்ரான் ஹஷீமுக்கும் நெளபர் மெளலவிக்குமிடையே போட்டி நிலவியுள்ளது.
தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஸஹ்ரான் கும்பலின் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இது தெரிய வந்தது.’ என குறிப்பிட்டார்.
அரசின் சிரேஷ்ட சட்டவாதி ஒருவரின் நெறிப்படுத்தலில் சாட்சியமளித்த அவர் மேலும் கூறியதாவது,
‘ ஸஹ்ரான் மற்றும் நெளபர் மெளலவி ஆகியோருக்கு இடையிலான தலமைத்துவத்தை மையப்படுத்திய மோதலை 2019 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி, கொச்சிக்கடை தேவாலய குண்டுதாரி அலாவுதீன் மொஹம்மட் முவாத், தெஹிவளை ட்ரொபிகல் இன் குண்டுதாரி ஜெமீல் ஆகியோர் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளனர்.
அன்றைய தினம் இருவரும் கல்கிஸை ரயில் நிலையம் அருகே கார் ஒன்றில் வந்து, ஸஹ்ரான் குழுவின் மேலும் மூவரை அந்த காரில் ஏற்றிக் கொண்டு பாணந்துறையில் இருந்த ஸஹ்ரானின் பாதுகாப்பு இல்லத்துக்கு ஒரு கலந்துரையாடலுக்காக சென்றுள்ளனர்.
அப்போது அந்த பாதுகாப்பு இல்லத்தில், ஸஹ்ரானுடன் கட்டுவபிட்டிய தேவாலயத்தில் குண்டை வெடிக்கச் செய்த அச்சு முஹம்மது ஹஸ்தூன் இருந்துள்ளார் ‘ என அந்த அதிகாரி சாட்சியமளித்தார்.
இதன்போது அங்கு என்ன கலந்துரையாடப்பட்டது என அரச சிரேஷ்ட சட்டவாதி குறித்த விசாரணை அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், ‘ அவர்களுக்குள் ஒரு சூறா கவுன்சில் ( கலந்துரையாடல் சபை) ஒன்று இருந்துள்ளது.
அதில் 13 பேர் அங்கத்தவர்களாக இருந்துள்ளனர். அவர்கள்தான் அந்தக் குழுவின் பிரதானிகள். அதில், ஒரு உறுப்பினரான மொஹம்மட் மில்ஹானினால் ஸஹ்ரான் தொடர்பிலான 19 குற்றச்சாட்டுக்களை அந்த கவுன்சிலில் முன்வைத்துள்ளார்.
அதனை மையப்படுத்தி ஸஹ்ரானை தலைமைத்துவத்திலிருந்து மாற்றி நெளபர் மெளலவியை நியமிக்கவும் கோரப்பட்டுள்ளது.
இதன்போது ஸஹ்ரான் தான் குற்றமற்றவர் என கூறியிருக்கின்றார். இதன்போது அவர்கள் பாதுகாப்புத் தரப்புகளுக்கு எதுவும் தெரியவரா வண்ணம் அவர்களின் சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
எனினும் அந்த சூறா கவுன்சிலில், ஷெங்ரில்லா குண்டுதாரியான மொஹம்மட் இல்ஹாம், தான் பணம் வழங்கியது அமைப்புக்கு அன்றி, ஸஹ்ரான் மீதுள்ள நம்பிக்கையிலாகும். நவ்பர் மெளலவிக்கு வேண்டுமானால் வீடு, வாகனம், ஆயுதம் ஒன்றைப் பெற்றுத் தர முடியும்.’ என கூறியுள்ளார். என அந்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரி சாட்சியமளித்தார்.
இதனைவிட, நியூசிலாந்தில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் சிரியாவில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஸஹ்ரான் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டவர்கள் அதிகம் வந்து செல்லும் ஹோட்டல்கள், கெசினோக்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும் என அந்த் அதிகாரி சட்சியமளித்தார்.
இதன்போது, இந்தத் தாக்குதல்களை எவ்வளவு காலப் பகுதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என அரச சிரேஷ்ட சட்டவாதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அந்த அதிகாரி,
‘ ரிழ்வானே குண்டுகளை தயாரிப்பார் என ஸஹ்ரான் கூறியுள்ளார். குண்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் 15 நாட்களில் காலாவதியாகும். எனவே அதிகமான கால நேரத்தை எடுத்துக்கொள்ள முடியாது.
அதனால் தாக்குதலை 15 நாட்களுக்குள் நடத்த வேண்டும். இந்த யோசனை நீர்கொழும்பு பகுதியில் வைத்தே முன்வைக்கப்பட்டுள்ளது.’ என அந்த திகாரி குறிப்பிட்டார்.
‘ அத்துடன் இதன்போது முவாத் எனும் குண்டுதாரி, எனது வீட்டுக்கு அருகிலேயே கொச்சிக்கடை தேவாலயம் அமைந்துள்ளது.
நான் அங்கு தற்கொலை தாக்குதல் நடத்துகின்றேன்.’ எனக் கூறியுள்ளார். என மேலதிக தகவலக அந்த பயங்கரவாத புலனாய்வு அதிகாரி சாட்சியமளித்தார்.
இதற்கு முன்னதாக ஸஹ்ரான் ஹாஷிம் மள்வானை பகுதியில் தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி, தற்கொலை செய்து சாவதா அல்லது யுத்தத்தில் சாவதா என்பதி தீர்மானித்து ஜிஹாத் செய்ய தயாராகுமாறு கூறி ஒரு ஆவணத்தில் கையெழுத்து பெற்றுள்ளதாகும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.