ஜெனீவா அருகே சுவிட்சர்லாந்து – பிரான்ஸ் எல்லையில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் (CERN) உலகின் மிகப்பெரிய மற்றும் நம்மைச் சுற்றியுள்ள பொருட்களை மிகவும் நுட்பமான அறிவியல் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்கிறது.
“நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் அனைத்தையும் உருவாக்கும் துகள்களின் அடிப்படை கட்டமைப்புகளை நாங்கள் ஆய்வு செய்கிறோம்,” என்கிறது அந்த நிறுவனத்தின் இணையதளம்.
‘கடவுள் துகள்கள்’ என்று பரவலாக அறியப்படும் ‘ஹிக்ஸ் போஸான்’ துகள்கள் இருப்பது வெறும் அனுமானமாக இருந்த சூழலில், ஹிக்ஸ் போஸான்ஸ் அளவில் நிறையுடைய துகள்கள் இருப்பதை கண்டறிந்த ஆய்வுகள் இங்குதான் செய்யப்பட்டன.
ஹிக்ஸ் போசான்களை ஏன் கடவுள் துகள்கள் என்று கூறக்கூடாது என்பது இந்தத் தொடரின் அடுத்த பாகத்தில் விளக்கப்படும்.
அறிவியல் ஆராய்ச்சியில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய ஆய்வு நிறுவனத்தின் வளாகத்தில் நடராஜர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை 2004ஆம் ஆண்டு ஜூன் 18 அன்று அங்கு நிறுவப்பட்டது. ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் நிறுவப்பட்ட ஆண்டும் அதுதான்.
இதுவரை கடந்துள்ள 16 ஆண்டுகளில், இணைய வசதிகள் பலரையும் சென்று சேர்ந்துள்ளதால் சமூக ஊடகங்களின் பரவல் அதிகமாக அதிகமாக அந்த சிலை அங்கு ஏன் வைக்கப்பட்டுள்ளது என்று பரப்பப்படும் போலியான காரணங்களும் அதிகமாகி வருகின்றன.
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான காரணங்கள் என்ன, அந்த சிலை அங்கு நிறுவப்பட்டுள்ளதன் உண்மையான காரணம் என்ன என்பது கீழே விளக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் கூறப்படும் காரணம் என்னென்னெ?
இந்து கடவுளான நடராஜர் சிலை அணுவின் அமைப்பை விளக்கும் வகையில் உள்ளதைக் கண்டு வியந்த விஞ்ஞானிகளால், மிகப்பெரிய நடராஜர் சிலை ஒன்றை ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவன வளாகத்தின் நடுவில் வைக்கப்பட்டுள்ளது என்பது ஒரு கூற்று.
“சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்தத் தாண்டவம் என்ற கோலம் ‘காஸ்மிக் டான்ஸ்’ என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதபடுகிறது. ஒட்டு மொத்த அண்டத்தின் குறியீடாக நடராஜர் அமைந்துள்ளார்,” என்பதை குறிப்பிடவே சுவிட்சர்லாந்தின் ஐரோப்பிய ஆராய்ச்சி கூடத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது இன்னொரு கூற்று.
இதே போன்ற உறுதிசெய்யப்படாத மற்றும் அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படாத எண்ணற்ற காரணங்கள் சமூக ஊடகங்களிலும் இணையதளங்களிலும் பல ஆண்டுகளாக உலாவி வருகின்றன.
சிலையை செய்தவர் என்ன சொல்கிறார்?
கூடுதலாக இன்னொரு சுவாரசியமான தகவல் இந்த சிலையைச் செய்தவர் ஒரு தமிழர். அதுவும் அவர் ஒரு கடவுள் மறுப்பாளர்.
டெல்லியில் உள்ள இந்திய அரசின் நிறுவனமான ‘சென்ட்ரல் காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் எம்போரியம்’ 1998இல் அளித்த ஆர்டரின்பேரில் தாம் இந்திய வெளியுறவுத் துறைக்கு சிலையைச் செய்து கொடுத்ததாகக் கூறுகிறார் கும்பகோணத்தில் சிற்பக்கூடம் நடத்தி வந்த சிற்பி ராஜன்.
1980களில் இருந்தே பல ஆண்டுகளாக டெல்லி சென்று கண்காட்சி உள்ளிட்டவற்றில் கலந்துகொண்டு, அந்த நிறுவனத்துடன் தொழில் ரீதியான தொடர்பில் இருந்த தமக்கு, அந்நிறுவனம் மூலம் இந்திய வெளியுறவுத் துறைக்காக அந்த சிலை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது என்று அவர் கூறுகிறார்.
என் நம்பிக்கைக்கும் தொழிலுக்கும் தொடர்பு இல்லை என்று கூறும் ராஜன், இந்த சிலை நிறுவப்பட்டதற்கான காரணமாகப் பகிரப்படும் தவறான தகவல்களை தானே பல முறை கடந்து வந்துள்ளதாகக் கூறுகிறார்.
தான் தொழிலில் ஈடுபட்டிருந்த காலத்தில் தலித் தொழிலாளர்கள் பலரையும் சிலை செய்ய பயன்டுத்தியிருக்கிறார் சிற்பி ராஜன்.
உண்மையான காரணம் என்ன?
இந்தியா மற்றும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் இடையில் 1960களில் ஏற்பட்ட தொடர்பு பல்லாண்டுகளாக நீடித்து வருவதைக் கொண்டாடும் வகையில் இந்தியா அளித்த பரிசுதான், 39 மற்றும் 40 என எண்ணிடப்பட்ட கட்டடங்களுக்கு இடையே உள்ள சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலை என்கிறது அந்த ஆய்வு மையத்தின் அலுவல்பூர்வ இணையதளம்.
நடனமாடும் நிலையில் உள்ள சிவன் இந்து மதத்தில் நடராஜர் என்று அழைக்கப்படுவதாகவும், நடனத்தின் மூலம் சிவன் பிரபஞ்சத்தை ஆக்கவும், இயக்கவும் அழிக்கவும் முடியும் என்பது இந்து மதத்தில் நம்பிக்கையாக உள்ளது என்றும் அந்த இணையதளம் கூறுகிறது.
‘காஸ்மிக் டான்ஸ்’ என்று வழங்கப்படும் நடராஜரின் பிரபஞ்ச நடனத்தை துணை அணுத்துகள் அல்லது அணுவகத்துகளின் (Subatomic particles) நகர்வுடன் உருவகப்படுத்தும் வகையிலேயே இந்திய அரசு இந்த சிலையைத் தேர்வு செய்தது என்று கூறுகிறது ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் கேள்வி – பதில் பக்கம் ஒன்று.
இந்து மதத்தில் நம்பிக்கையாக கருதப்படுகிறது என்று கூறப்படும் மேற்கண்ட காரணங்களே, அறிவியல் ரீதியாகவும் உண்மையானவை எனும் தவறான கூற்றுடன் இணையம் மூலம் பரவி வருகிறது.
(இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி Myth Buster எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. அந்தத் தொடரின் முதல் பாகம் இது.)