இலங்கை அரசாங்கத்தினால் கோவிட்-19 ஒழிப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட சுகாதார நடைமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல், நாடாளுமன்றத்திற்கு செலுப்படியாகாது என இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கோவிட் தொற்று மிக வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

சமூக இடைவெளியை பின்பற்றி நாடாளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.

அரசாங்கத்தினால் வெளியிடப்படும் சுற்று நிருபங்களை பின்பற்றப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் சுகாதார நடைமுறைகள் செயல்படுத்தப்படும்வரை, நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைக்குமாறும் அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடனம் கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாடாளுமன்ற அமர்வுகளுக்குள், குறித்த வர்த்தமானி செலுப்படியற்றது என கூறினார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன், நாடாளுமன்றத்திற்குள் நடந்து கொள்ளுமாறும் சுகாதார அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

சுகாதார அமைச்சரின் கருத்துக்கு, எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

நாடாளுமன்றம் பொது இடம் கிடையாது எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களை பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும் சுகாதார அமைச்சர் கோருவது தவறானது என்றும் எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

பொது இடம் என வர்த்தமானியில் கூறப்பட்டிருப்பது, வெளி இடங்களையே என்றும் சுகாதார அமைச்சர் விளக்கமளித்தார்.

எதிர்கட்சியினரால் விடுக்கப்படும் இந்த கோரிக்கையானது, தேவையற்ற விடயம் என கூறிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன், இந்த விடயத்தை கைவிடுமாறும் கோரினார்.

இதையடுத்து, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற அமர்வுகளை நிறுத்தி, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைய நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை, சபாநாயகர் நிராகரித்தார்.

2ஆவது உலக மகா யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில், லண்டன் நகர் மீது தொடர் குண்டு வீச்சுகள் நடத்தப்பட்டதாக அவர் நினைவூட்டினார்.

அவ்வாறான அச்சுறுத்தல் மிக்க நிலைமையும், பிரித்தானிய நாடாளுமன்றம் கூடியதாகவும், அதனால் நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைக்க முடியாது எனவும் சபாநாயகர் பதிலளித்தார்.

கோவிட் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை, நாடாளுமன்றத்திற்குள் நடைமுறைப்படுத்த முடியாதுள்ளமை குறித்து, தான் கவலை அடைவதாகவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

Share.
Leave A Reply