பதுளை பிரதான அரசினர் மருத்துவமனையில் நோயாளர்கள் கவனத்திற் கெடுத்துக்கொள்ளப்படும் வகையிலான பல்வேறு அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அவ்வறிவுறுத்தல்கள் தவறான வார்த்தைப் பிரயோகங்களைப் குறிப்பதினால், நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

இவ்விடயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருவதாக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், பதுளை மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தின் பிரதிகள், ஊவாமாகாண ஆளுனர் ஏ.கே.எம். முசாம்மில்,? ஊவா மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

 

தொடர்ந்து அக்கடிதத்தில், “ ஊவாமாகாணத்தில் மிகப்பிரதானஅரசினர் மருத்துமனையாக இருந்து வருவது, பதுளை அரசினர் மருத்துவமனையாகும். இம் மருத்துமனையில் பெருமளவிலான நோயாளர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகளைப் பெற்றுச் செல்லவும், கடினமான நோயாளர்கள் தங்கிச் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

அத்துடன் பதுளை மாவட்டமென்பது தமிழ் பேசும் மக்கள் கணிசமானளவில் வாழ்ந்து வரும் ஒரு பிரதேசமாகும். இம்மாவட்டம் பெருந்தோட்டங்கள் பலவற்றை சூழ்ந்திருப்பதினால், தமிழ் மக்கள் அநேகமானளவிலும் இருந்து வருகின்றனர். இத்தகையவர்களுக்கு சிங்கள மொழியில் போதிய பரீச்சியமில்லை.  தமிழ் மொழியினை மட்டுமே, இம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே  இம்மருத்துவமனையில்  பல்வேறு வகையிலான சிகிச்சைகள், நோய்கள், நோயாளர்கள் அனுமதிக்கப்படும் விதிமுறைகள். மருந்துவகைகளைப் பெற்றுக்கொள்ளல், நோயாளர்கள் அமர்ந்திருக்கும் இடங்கள், மருத்துவமனையில் தங்கிசிகிச்சைப் பெறும் நோயாளர்களை பார்வையிடும் நேரங்கள் மற்றும் அது தொடர்பான சுகாதாரவிதி முறைகள் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், அவைகள் தனிச்சிங்கள மொழி மூலமும், பெரும்பாலான அறிவுறுத்தல்  காட்சிப் பலகைகளில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகியமொழிகளில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், சிங்கள மொழியில் மட்டும் சரியாகவும், தமிழ் மொழியில் முற்று முழுதாக தவறான வார்த்தைப் பிரயோகங்களினாலும், ஆங்கிலமொழி உச்சரிப்பிலும் பிழையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதனால்,சிங்கள மொழி புரியாத தமிழ் மொழி மட்டும் தெரிந்தநோயாளர்கள் பல்வேறுஅசௌகரியங்களை எதிர்நோக்கியவண்ணமுள்ளனர்.  இது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் வினவினாலும் உரியபதில் கிடைக்காமல், தமிழ் நோயாளர்கள் தரக்குறைவாக நடாத்தப்பட்டு வருகின்றனர்.

வெளிநாடுகளைச் சேர்ந்த உல்லாசபிரயாணிகள் தேவை கருதி, இம் மருத்துவமனையினை நாடினாலும் இதேநிலையினையே, அவர்களும் எதிர்நோக்கி வருகின்றனர்.

ஆகவே தயவுசெய்து மேற்படி விடயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். சகல நோயாளர்களும் பயன்பெறும் வகையில் இம் மருத்துவமனையை மாற்றியமைக்கும்படிகேட்டுக்கொள்கின்றேன்.

நோயாளர் காத்திருக்கும் பகுதி என குறிப்பிடுவதற்கு ‘நாயாளர்கள்’ பகுதி என்றவகையிலும் ,மலசலகூடத்தை நோக்கில்  ஆண்கள் என்பதற்கு பெண்கள் பகுதியென்றும், பெண்கள் என்பதற்கு ஆண்கள் பகுதியென்றும் மிகத் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கும் ஒருசிலவற்றை மட்டும் தங்களின் கவனத்திற்கு முன்வைக்கின்றேன்.

Share.
Leave A Reply