பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகத்தினர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

 

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் தற்போது தீவிரமடைந்துவரும் நிலையில் ,இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்தவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது. ஆகையால் வடமாகாணத்தில் பின்வரும் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

01.சுகாதார அமைச்சினால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டமைக்கு அமைவாக கூட்டங்கள், ஒன்றுகூடல்கள் வைபவங்களை தவிர்த்துக்கொள்ளவும் அல்லது பிற்போடவும்.

02.சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைவாக, அலுவலகங்கள் , பொது நிறுவனங்களில் முககவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளி பேணுதல் , உடல்வெப்பநிலை அளவிடுதல் மற்றம் வருகை தருவோரின் விவரங்கள் பதிவேட்டினை பேணுதல் போன்றவற்றை இறுக்கமாகப் பின்பற்றவேண்டும்.

03.பொது இடங்களில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் கட்டாயமாக கடைபிடித்தல் வேண்டும். இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

04.தவிர்க்கமுடியாத கட்டாயமாக நடாத்தப்படவேண்டிய நிகழ்வுகளை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான அங்கத்தவர்களுடன் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடாத்தப்படல் வேண்டும்.

05.வர்த்தக நிலையங்கள், சலூன்கள் உணவகங்கள் போன்றவற்றிற்கு ஏற்கனவே சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும்

06.பொதுப் போக்குவரத்து வாகனங்களில் ஆசனங்களுக்கு அளவான பயணிகள் மட்டுமே பயணம் செய்யமுடியும்.

07.காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டைநோ உள்ளவர்கள் அலுவலகங்கள் அல்லது பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் வேண்டும்.

08.இயலுமானவரை நீண்டதூர பயணங்களை தவிர்த்தல் வேண்டும்.

09.பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் மறு அறிவித்தல் வரை நடாத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை இறுக்கமாக கடைப்பிடிக்கவும்.

எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கொரோனா தொற்று பரம்பலை எமது மாகாணத்தில் கட்டுப்படுத்த உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.

Share.
Leave A Reply