தற்போது நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்று நோயாளிகள் சமூக பரவல் மூலம் அடையாளம் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹரித அளுத்கே, அடையாளம் காணப்பட்ட 259 நோயாளிகளில் இருவர் மாத்திரமே தனிமைப்படுத்தல் நிலையங்களைச் சேர்ந்தவர்கள் என கூறினார்.
தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு வெளியில் இருந்து கொரோனா தொற்று உறுதியாகிய நோயாளிகளைக் கண்டுபிடிப்பது என்பது சமூக தொற்று என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை கொரோனா தொற்று பரவக்கூடிய பகுதிகளை அடையாளம் காணப்பட்ட பின்னர் உடனடியாக அப்பகுதியை முடக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஷேனல் பெர்னாண்டோ கூறினார்.
இவ்வாறான முடக்க கட்டுப்பாடுகளை அமுல்படுத்தாவிட்டால் வைரஸ் தொற்று பெருமளவில் பரவக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தொற்று ஏற்கனவே 13 மாவட்டங்களாக பரவியுள்ளது, மேலும் ஐந்து மாவட்டங்களில் பெரிய துணைக் கொத்துகள் பதிவாகியுள்ளன, இந்த துணைக் கொத்துகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உடனடியாக நாட்டினை முழுமையாக முடக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.