கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் தாக்கல் செய்த பிணை மனுவானது நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ரிஷாத் பதியூதீனை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஐனாதிபதி தேர்தலின்போது புத்தளத்திலிருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12 ஆயிரம் இடப்பெயர்ந்த வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்துக் கொடுத்தமை ஊடாக , நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றுவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை கைது செய்யுமாறு கடந்த 13 ஆம் திகதி சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.
குற்றப்புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பின்னர் 6 தினங்களுக்கு பின்னர் ரிஷாத் கடந்த 19 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதுடன், இன்று வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
இதேவேளை மேற்படி சம்பவம் தொடர்பில் ரிசாத்தின் கணக்கு விவகார நடவடிக்கைகளை செய்து வந்த கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் மற்றும் ரிசாத்தான் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிடுந்த கான்ஸ்டபிள் ஒருவரும் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந் நிலையிலேயே இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.