மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் 37 ஆம் கிராமம் நவகிரி பாடசாலை வளாகத்தில் பொலிஸாரும் படையினரும் இணைந்து புலிகளின் வெடிபொருட்களை தேடி நிலத்தை தோண்டி தேடுதல் நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை (27) முன்னெடுக்கப்பட்டபோது எதுவும் மீட்கப்படாத நிலையில் நடவடிக்கையை பொலிசார் கைவிட்டனர்.
குறித்த பாடசாலை வளாகம் கடந்த காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது முகாமாக செயற்பட்டிருந்தது இந்த பகுதியில் நிலத்தில் வெடிபொருட்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இதனை தோண்டி சோதனையிட நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர்.
இதற்கமைய களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் பெறப்பட்ட கட்டளைக்கு அமைவாக தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் பங்குபற்றுதலுடன் வெல்லாவெளி பொலிசார் நேற்றைய தினம் (ஜெபிசி) மண் அகழ்வும் கனகர இயந்திரம் மூலம் தோண்டி தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த தேடுதல் மாலைவரை இடம்பெற்ற போதும் எந்த பொருட்களும் மீட்கப்படாத நிலையில் தோண்டும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தி பொலிசார் வெளியேறினர்.

