உலகவரைபடத்தில் சின்னஞ்சிறு தீவாகக் காட்சி அளிப்பது இலங்கை. எனினும் உலகவரலாற்றில் இலங்கைக்கென்று ஒரு தனியிடம் இருக்கிறது.
அத்தகைய இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் பண்டைய நூல்களுள் சில எமது புங்குடுதீவின் வரலாற்றையும் இலங்கையின் வரலாற்றோடு சேர்த்தே சொல்கின்றன.
அவை பண்டைநாளில் புங்குடுதீவில் வாழ்ந்த நம்முன்னோரின் வீரம், காதல் ஆகிய மக்கட்பண்பையும் இசை, நடனம் முதலிய கலைகளையும் பொருளாதார மேம்பாட்டிற்காக அவர்கள் செய்த தொழில்களையும் குறிப்பிடுகின்றன.
அந்த வரிசையில் இதிகாசங்களும் புராணங்களும் மட்டுமல்லாமல் பண்டைய அரேபிய, கிரேக்க, சீன நாடோடிக் கதைகளும் புங்குடுதீவின் பெருமையை எடுத்து இயம்பத் தவரவில்லை.
அப்படி இருந்தும் நாம் அதன் பண்டைய பெருமையை போற்றாமல் இருப்பது ஏன்?
எனெனில் ‘எமது வரலாற்றை பிறமொழியாளன் சொல்லியிருந்தால் மட்டுமே நம்புவோம்’ என்ற நிலைப்பாடு எம்மிடம் இன்றும் இருக்கிறது.
பண்டைய வரலாறு ஏதும் அற்ற இனங்கள் கூட தத்தம் வரலாறுகளை எப்படியெல்லாம் புனைகிறார்கள் என்பதைக் கண்டும் பல்லாயிரவருட வரலாற்றைக் கொண்ட நாம் எமது சரித்திரத்தை எழுதாதிருப்பதேன்?
அதைத்தவிர்த்து, உலக வரலாற்றை நாமே புரட்டிப் படித்து புங்குடுதீவின் வரலாற்றை எழுதலாமே. ஆதலால் இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன் [கௌதமபுத்தர் பிறக்க முன்னர்]
புங்கைமரம் புங்குடுதீவின் புகழை உலகில் மணக்க வைத்த பெருமையை இங்கே சொல்லலாம் என நினைக்கிறேன்.
பாளி மொழியில் எழுதப்பட்ட பண்டைய புத்த சாதகக் கதைகளில் ‘பியங்குதீவு’ [Piyangudipa] என்றும் ‘புவங்குதீவு’ என்றும் புங்குடுதீவு அழைக்கப்படுகிறது.
கிரேக்க, சீன, அரேபிய நாடோடிக்கதைகள் கூட புங்குடுதீவை, ‘குங்குமத்தீவு’ எனச்சொல்ல, ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை
“ஈங்கிதன் அயலகத்து இரத்தினத் தீவத்து
ஓங்குயர் சமந்தத்து உச்சி மீமிசை”
– (மணிமேகலை: 11: 21 – 22)
என ‘இரத்தினத் தீவகம்’ என்று சொல்கிறது.
புங்குடுதீவை ‘புயங்குதிவயின’ என ‘நம்பொத்த’ என்ற சிங்கள நூல் சொல்வதாக ‘Nagadipa and Buddhist remains In Jaffna’ என்னும் நூலில் – Pieris. P. E என்பவர் எழுதியுள்ளார்.
‘பியங்குதீப’ என்பது தற்கால புங்குடுதீவு என்று ‘Historical Topography of Ancient and Medieval Ceylon’ என்னும் நூலில் – Nicholas. C. W என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரே வல்லிபுரத்தில் கண்டு எடுக்கப்பட்ட பொன் தகட்டைப் பற்றி கூறும் இடத்தில் புங்குடுதீவை ‘குங்குமத்தீவு’ [Saffron Island] என்றும் கூறுகிறார்.
இப்படி இரத்தினத் தீவகம், குங்குமத்தீவு, பியங்குதீப, புவங்குதிவியின என்றெல்லாம் புங்குடுதீவு அழைக்கப்பட்டதன் காரணம் என்ன?
இன்றைய நிலையில் புங்குடுதீவில் இரத்தினச் சுரங்கம் இருந்ததா? குங்குமம் விளைந்ததா? பியங்கு அல்லது புவங்கு இருந்ததா? என்று கேட்டால் அதற்கு இல்லை என்பதே பதிலாகாக் கிடைக்கும்.
ஆதலால் இரத்தினமும், குங்குமமும், பியங்கும், புவங்கும், புங்குடுதீவின் காரணப்பெயர்களாகவே இருந்திருக்க வேண்டும்.
என்ன காரணத்தால் புங்குடுதீவுக்கு இந்தப் பெயர்கள் வந்தன? அந்தத் தேடுதலால் கிடைத்தவற்றை இங்கே தருகிறேன்.
மாணிக்கக்கல்
சீத்தலைச் சாத்தனார் தாமெழுதிய மணிமேகலையில் புங்குடுதீவை இரத்தினத்தீவகம் எனக் குறிப்பிட்டதேன்? நவரத்தினக் கற்களில் மாணிக்கக் கற்களையே பொதுவாக இரத்தினம் எனக் கூறுவர்.
இலங்கையில் தோண்டி எடுக்கப்படும் மாணிக்கக் கற்கள் பெரும்பாலும் குங்கும நிறமானவை. அந்நாளில் எம் தாய்மார் வைத்த குங்குமத்தின் நிறத்தில் [Magenta] இயற்கையாகக் கிடைக்கும் மாணிக்கக் கற்கள் இருக்கும்.
கி மு 931ல் இஸ்ரேலின் [Israel] பேரரசனான சொலமன் [Solomon], இலங்கையிலிருந்து அகிலும் மயிலும் இரத்தினங்களும் தந்தமும் குரங்கும் பெறுவதற்காக கப்பல்களை அனுப்பிவைத்தான் என்று Sir Emerson Tennent என்பவர் தான் எழுதிய ‘Ceylon an account of the Island’ என்னும் நூலில் (1860) குறிப்பிட்டுள்ளார்.
உலகின் தலைசிறந்த மாணிக்கக் கற்களை அரேபியர்கள் இலங்கையில் பெற்றார்கள் என்பதை பண்டைய இலங்கையின் இரத்தினக் கற்களின் வரலாறு சொல்கிறது.
மூவாயிர வருடங்களுக்கு முன்பே [king Solomon time] இலங்கையில் கிடைத்த மாணிக்கக் கற்களை கிரேக்கர்களும் உரோமர்களும் அரேபியர்களும் சீனர்களும் பெரிதும் விரும்பி வாங்கினார்கள்.
இரத்தினக் கற்களின் பண்ட மாற்று புங்குடுதீவில் நடந்ததால் புங்குடுதீவை ‘இரத்தினத்தீவகம்’ என அழைத்தனர். எப்படி அது நடந்தது என்பதைப் பார்ப்போம்.
பண்டைக்கால வணிகப்பாதை
சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு, கடல் வழியாகவும் தரைவழியாகவும் பண்டைய ரோம், எகிப்து, பாரசீகம், அரேபியா, இந்தியா போன்ற நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
வணிகத்திற்காக பட்டு எடுத்துச் செல்லப்பட்ட வழியை பட்டுப்பாதை [Silk Route] என அழைப்பர். கி மு இரண்டாம் நூற்றாண்டில் இருந்து கி பி பதினைந்தாம் நூற்றாண்டுவரை பட்டுப்பாதை வணிகம் நடைபெற்றது.
அப்பாதை புங்குடுதீவின் ஊடாகவும் சென்றது. இந்தப் பட்டுப்பாதை என்னும் பெயர் உண்டாவதற்கு முன்பே [சொலமன் காலத்தில்] மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான கடல் வணிகம் இப்பாதையினூடாகவே நடந்தது என்பதை உலகவரலாற்றால் அறியலாம்.
பண்டை நாளிலிருந்து புங்குடுதீவில் கலங்கரை விளக்கம் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகும். இலங்கையைச் சுற்றிச் செல்வதைவிட மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் நடுவே இருந்த புங்குடுதீவின் ஊடாகச் செல்வது பயண நாட்களைக் குறைத்தது.
அதனால் அப்பாதை வழியே சென்ற சீன, அரேபிய, கிரேக்க வணிகர்களின் பண்டமாற்று புங்குடுதீவிலும் நடந்தது.
அந்நாளில் புங்குடுதீவில் வாழ்ந்த மக்கள் அத்தர் போன்ற வாசனை தைலங்களையும், சங்கு, மயில், போன்றவற்றையும் விற்றதோடு இலங்கையில் கிடைத்த மாணிக்கக் கற்களையும் மற்றைய பொருட்களையும் பண்டைத் துறைமுகமான மாதோட்டத்திலிருந்து புங்குடுதீவுக்கு கொண்டுவந்து பட்டுப்பாதை வணிகர்களுக்கு விற்றனர்.
புங்குடுதீவில் பண்டமாற்று வணிகம் நடந்ததன் உண்மையை திகழியில் கிடைத்த சீன மட்பாண்டங்களும் ரோமாபுரிக் காசுகளும் எடுத்துக் காட்டுகின்றன.
அத்துடன் கி பி 1311ம் ஆண்டு புங்குடுதீவு வந்து கோட்டைகட்டி வாழ்ந்த பாண்டிய இளவரசி வீரமாதேவி எழுதிய நாட்குறிப்பும், கி பி 1685ம் ஆண்டு புங்குடுதீவுக்கு வந்த Portugal Captain John Ribeyro என்பவரும் எழுதிய குறிப்புகளும் சொல்கின்றன.
நம் பண்டைத்தமிழரின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அவர்கள் வாழ்ந்த ஊர்களின் புகழ், மரங்களால் நிலைத்து நிற்பதைக் காணலாம்.
பண்டைக்காலம் தொட்டு இன்றுவரை மதுரையின் புகழை தன் பெயரில் தாங்கி நிற்பது மருத மரமே. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூட வைகைக் கரையோரம் மருதமரங்களே நிழலைத் தந்து கொண்டிருந்தன. அவற்றை இப்போ கண்பது அரிது. மதுரையின் புகழ்பாடும் பரிபாடல்
“வையைத் திருமருத முன் துறை”
– (பரிபாடல்: 22: 45)
என ‘மருதையே’ மதுரை ஆக மாறி நிற்பதைச் சொல்லாமல் சொல்கிறது.
பண்டைய தமிழர்கள் தாம் உயிர்வாழத் தமக்கு உணவை வழங்கிய மரங்களையும், நீர் நிலைகளையும் போற்றினர்.
மனிதர் நோயற்று நீண்ட காலம் வாழ்வதற்கும் பசிப்பிணியைப் போக்குவதற்கும் உணவும் நீரும் உதவுவதைக் கண்டு அவற்றை ‘இருமருந்து’ என அழைத்தனர். அதனை புறநானூறு
“இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்
கிள்ளி வளவன் நல்லிசை உள்ளி”
– [புறம்: 70: 9 – 10]
எனக்கூறுகிறது.
சங்ககாலத் தமிழரின் இத்தகைய பண்பாடுகளின் அடிச்சுவடுகள் இன்றும் ஈழத்தமிழரிடையே அழியாது நிற்கின்றன.
பண்டைய ஈழத்தமிழர்கள் மரங்களை, நீர்நிலைகளை எவ்வளவுக்குக் காதலித்தார்கள் என்பதை அங்குள்ள ஊர்களின் பெயர்கள் எடுத்துக்காட்டுகின்றன. நம் முன்னோர் ஈழத்து ஊர்களை மரத்தின் பெயரோடு நீர்நிலையின் பெயரைச் சேர்த்து அழைத்திருப்பதைக் காணமுடிகிறது.
அந்த உண்மையை ஈச்சமடு, மருதமடு, ஒதியமடு, ஆலங்குளம், பூவரசங்குளம், விளாங்குளம், மாங்குளம், கருவேலங்குளம், இலுப்பைக்குளம், பாவற்குளம், முல்லைத்தீவு, பாலைதீவு, புளியந்தீவு, காரைதீவு, நாவல் தீவு (நயினாதீவு), இலவந்தீவு (அனலைதீவு), தெங்கின் தீவு (எழுவைதீவு), குசத்தீவு (ஊர்கவற்றுறை + வேலணை + மண்டைதீவு), போன்ற ஊர்களின் பெயர்கள் எமக்கு எடுத்துச் சொல்கின்றன.
இந்த ஊர்களைப் போல் புங்குடுதீவும் தன் பெயரில் புங்க மரத்தையும், தீவு என நீர்நிலையையும் தாங்கியே நிற்கிறது.
கீழீ குறிப்பிடும் சில விடயங்கள் புத்தரின் வரலாற்றோடு தொடர்புடையதே அல்லாமல் சிங்கள மொழியோடு தொடர்புடையன அல்ல.
உண்மையில் சிங்கள மொழிக்கு முதன்முதல் எழுதப்பட்ட சிங்கள இலக்கண நூல் – ‘ஸிதத் ஸங்கராவ’ [Sidath Sangarawa] – கி பி 13ம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டது. அதுவும் தமிழ்மொழி இலக்கண நூலான வீரசோழியத்தைப் படித்தே எழுதப்பட்டுள்ளது.
சிங்கள மொழிக்கு இலக்கணம் உண்டாவதற்கு ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட வரலாற்றையே இங்கு குறிப்பிடுகிறேன்.
துட்டகைமுனுவின் வரலாறு, கி மு இரண்டாம் நூற்றாண்டில் புங்குடுதீவில் [புயங்குதீவ] வாழ்ந்த புத்த குருமார் பற்றிய செய்தியைச் [South Indian Inscription, Vol.II] சொல்கிறது.
ஆனால் கி மு நாலாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் கௌதமபுத்தர் பிறக்க முன்பே, புங்குடுதீவில் நிலைத்த அறிவும் ஆற்றலும் உள்ள மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை புத்தசாதகக் கதைகளால் [Jataka tales] அறியலாம்.
அவை வட இந்தியாவில் [நேபாளத்தில்] புத்தர் பிறந்த கபிலவஸ்த்து [kapilavastu] என்ற இடத்திற்கும் அப்பால் வாழ்ந்தவர்களும் புங்குடுதீவில் உற்பத்தி செய்த வாசனைத் திரவியத்தை பயன்படுத்தினார்கள் என்று சொல்கின்றன.
மாயாதேவி
அந்தப் புத்த சாதகக் கதைகளில் வரும் பெண்கள் புங்க மலரில் [puvangu flower] இருந்து தயாரித்த வாசனைத் தைலத்தை [perfume] தமது உடலுக்கும், நகைகளுக்கும் போட்டார்கள் என்பதையும் அவ்வாசனைத் தைலம் புங்குடுதீவில் [புவங்கு தீவில் – Puwangu Deepa/ பியங்கு தீவில் – Piyangu Dipa] இருந்து சென்றதையும் அக்கதைகள் தருகின்றன.
‘அந்த வாசனைத் தைலம் உடலின் நிறத்தை பொன்னிறமாக்கியதால் அரச குடும்பதைச் சேர்ந்தோர் அதனை அதிக விலை கொடுத்து வாங்கினர். கௌதம புத்தரின் தாயான மாயாதேவியும் போட்டார்’ எனப் பாளி ஏடுகள் சொல்வதாக அநுராதபுரத்தில் வாழ்ந்த புத்ததேரர் என் தந்தைக்குச் சொன்னதைக் கேட்டிருக்கிறேன்.
வெளிரிய குங்கும நிற புங்கமலர்
புங்கமலர்கள் கொத்துக் கொத்தாய் அரிசிப் பொரிபோல், குங்கும [Magenta] நிறத்திலும், வெளிரிய குங்கும நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் காணப்படுகின்றன.
அந்நாளில் புங்குடுதீவில் இருந்த புங்க மரங்கள் குங்கும நிறமான பூக்களோடு காட்சியளித்ததால் [மேலே உள்ள படத்தைப் பார்க்கவும்] புங்குடுதீவை ‘குங்குமத்தீவு’ எனவும் அழைத்தனர்.
புங்குடுதீவில் வாழ்ந்த எம்முன்னோர் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே வாசனைத் தைலத்தை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் அறிவும் ஆற்றலும் வலிமையும் உடையோராய்த் தானே இருந்திருக்க வேண்டும்?
உலகெலாம் பரந்து வாழும் புங்குடுதீவாராகிய நாமும் உலகெங்கும் வணிகத்தொழிலில் சிறந்து விளங்க வழிவழியாக வரும் மரபணுவே காரணம் எனலாம்.
இன்று நம் தமிழ் இனத்தைச் சூழ இருக்கும் தெழுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் போன்ற பல மொழிகளும், பல இனங்களும் இவ்வுலகில் தோன்ற முன்னர், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளுக்கும் புங்க மலரில் இருந்து உருவாக்கப்பட்ட வாசனைத் தைலம் மணம் பரவி, புங்குடுதீவின் [புவங்குதீவு] புகழை மணக்க வைத்திருக்கிறது.
அப்படி கண்காணாத தேசங்களில் எல்லாம் புங்குடுதீவின் புகழை மணக்கவைத்த புங்கமரம் இப்போ எங்கே போயிற்று?
புங்குடுதீவில் புங்கமரத்தை கண்டவர்கள் யாராவது இருக்கிறீர்களா? ஆனால் புங்கடி என்று ஓர் இடம் இருப்பது மட்டும் எனக்குத் தெரியும்.
ஏனெனில் எனக்கு புங்கடியில் தாய்வழிச்சொத்தாகக் கொஞ்ச நிலம் இருக்கிறது. அங்காவது புங்கமரம் இருக்கின்றதா? புங்குடுதீவிற்கு புகழ் தேடித்தந்த புங்க மரத்தைப்பற்றி நம்மில் எவராவது நினைக்கிறோமா?
புங்க மரம் எப்படி இருக்கும் என்பதையாவது அறிந்திருக்கிறோமா? எப்படி இந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம்? மரந்தானே என்ற அசட்டையா! எமது சோம்பலா!!
எமது அறிவின்மையா!!! எதனால் நாம் மரங்களைப் புறக்கணித்து வாழக் கற்றுக்கொண்டோம்…….?? மீண்டும் புங்குடுதீவின் புகழ் மணக்க புங்கமரம் வளர்ப்போம் வாருங்கள்!! அதற்கு முன் அது எப்படி இருக்கும் என்பதை அறிய வேண்டாமா? தொடர்ந்து காண்போம்…
இனிதே,
தமிழரசி.
Thamilarasi Siva