பிரான்ஸின் லியான் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தேவாலய பாதிரியார் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார் என அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதால், அவரை தேடும் பணி தீவிரமாக்கப்பட்டது. அதன்பின் நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களை கொண்டு சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதலுக்காக காரணம் தெரியவில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொலை முயற்சி என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீஸ் நகரில் தேவாலயம் ஒன்றில் தாக்குதல் நடைபெற்ற மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

நீஸ் நகர தாக்குதலை “இஸ்லாமியவாத பயங்கரவாத தாக்குதல்” என விவரித்திருந்த பிரான்ஸ் அதிபர் மக்ரோங், பொது இடங்களிலும், வழிப்பாட்டு தலங்களிலும் காவல் பணியில் இருக்கும் ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக தெரிவித்தார்.

தற்போது லியான் நகரில் நடைபெற்ற தாக்குதல் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு நடைபெற்றது. அவசரநிலை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், மக்கள் சம்பவ இடத்திற்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும், பிரான்ஸின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“சம்பவ இடத்தை நேரில் பார்த்தவர்களின் கூற்றை வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யும் சமயத்தில் அவரிடம் ஆயுதங்கள் இல்லை.

அவரின் அடையாளத்தை கண்டறிய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்” என வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“இந்த தருணத்தில் கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை,” என லியான் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

பாதிரியாரின் பெயர் நிக்கோலஸ் ககவெலகிஸ் என அறியப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் அவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

வயிற்றில் இரண்டு முறை சுடப்பட்டதால் அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

நீஸ் நகர தாக்குதல்

பிரான்ஸின் நீஸ் நகரில் இரு தினங்களுக்கு முன் தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற தாக்குதலில் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தனர்.

தாக்குல்தாரி துனிஷியாவிலிருந்து வந்தவர் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் பாரிஸ் நகரின் வட மேற்கு பகுதியில் உள்ள பள்ளி ஒன்றிற்கு அருகில் நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலிகள் நீஸ் நகர தாக்குதலில் இருப்பதாக கூறப்பட்டது.

முகமது நபிகளின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்களைத் தனது மாணவர்களிடத்தில் காட்டியதாக கூறப்படும் சாமூவேல் பேட்டி என்ற ஆசிரியர் தலைவெட்டி கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸில் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில்தான் லியான் நகர தாக்குதல் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply