20 கதைக்கு கடந்த வாரம் முற்றுப் புள்ளி வைத்த நாம், இந்த வாரம் புதுக் கதையாக புதிய அரசியல் யாப்புத் தொடர்பான தகவல்களை துவக்கி வைக்கலாம் என்று எதிர் பார்க்கின்றோம்.

அதற்கு முன்பு இந்த இருபது கரைசேர்ந்த விதம் தொடர்பான நமக்குக்க கிடைத்த சில இரகசியத் தகவல்களையும் நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

வாகனத்தில் இருந்து இறங்கி பாதையைக் குறுக்கறுத்து முடிகின்ற நேரம், மெக்ஸ்.. மெக்ஸ்.. என்று ஒரு சத்தம் கேட்டது.

சத்தம் வந்த திசையை திரும்பிப் பார்த்தேன். அங்கே தனது வாகனத்தில் இருந்து இறங்குவதற்காக கண்டியிலுள்ள முதல்தர அச்சகம் உரிமையாளர் கதவுகளைத் திறந்து கொண்டு எனக்காக கொடுத்த குரல்தான் மெக்ஸ்.. மெக்ஸ்.. என்ற வார்த்தை.

அச்ச தேவைகளுக்காக நாம் அவரிடம் அடிக்கடி போய்வருகின்ற போது எமது நிறுவனத்தின் பேரால்தான் அவர் என்னை இப்படித்தான் அழைப்பது வழக்கம். (தம்பிலா வெடே துன்னா நே மொனவாத மே கெரப்பு அபராதய) முஸ்லிம்கள் தங்களது வேலையைக் காட்டி விட்டீர்கள்? என்ன இது நீங்கள் செய்த இந்த பாவச்செயல்? என்று என் முகத்துக்கே கேட்டார்.

இந்த 20 விடயத்தில் அவர் எவ்வளவு கோபத்தில் இருக்கின்றார் என்பது எனக்கு அப்போது புரிந்தது. நெடுநாளைக்குப் பின்னர் அவரை நான் முதல் முறை பார்த்த போது நடந்த சம்பவம் இது. அவர் பேசிய முதல் வார்த்தைகள் அவை.

அவருக்கு என்னிடம் கொடுப்பதற்கு எந்தப் பதிலும் இருக்கவில்லை. 20 தொடர்பாக எனது தனிப்பட்ட கருத்துக்கள் விமர்சனங்களை நாடே அறியும்.

ஆனால் அந்த சிங்கள சகோதரர் முன்னிலையில் நான் ஊமையாக நிற்க வேண்டி வந்தது. சிங்கள சமூகம் இதனை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் செயலாகத்தான் பார்க்கின்றது.

இந்த சம்பவத்தில் நான் என்ன சொல்ல வருகின்றோன் என்றால் ஒரு சிலரது நடவடிக்கைகள் ஒட்டு மொத்த சமூகத்துக்கும் தலைகுனிவைக் கொடுகின்றது.

மற்றுமொரு சிங்கள நாளிதழ் மீண்டும் ஒரு முறை தம்பிகளுடைய தொப்பி திரும்பி விட்டது. அவர்கள் சந்தர்ப்பவாதிகள் அவர்கள் நம்ப முடியாதவர்கள் உண்ட வீட்டுக்கு வஞ்சகம் செய்யக் கூடியவர்கள் என்று செய்தி சொல்லி இருந்தது.

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் தீர்க்க தரசனம் இல்லாத அரசியல் தலைமைகளும் அவர்கள் எடுக்கின்ற தீர்மானங்களும் சமூகம் தொடர்பான கருத்துக்கள் பிற சமூகத்தார் மத்தியில் எப்படியான தாக்கங்களைச் செலுத்துகின்றன என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.

ஈஸ்டர் தாக்குதல் சஹ்ரான் உற்பட மிகச்சிறிய ஒரு குழு பார்த்த வேலையாக இருந்தாலும் அது இந்த நாட்டில் வாழ்கின்ற ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தை மட்டுமல்ல இஸ்லாத்தையும் கேவலப்படுத்திய ஒரு நிகழ்வாக அமைந்து விட்டது.

இந்த வடுவை முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகள் சொன்றாலும் நீக்கிக் கொள்ள மாட்டார்கள்.

மறு படியும் பேர்லின் அச்சக உரிமையாளர் கதைக்கு வருவோம். அவரது இந்தக் கருத்துத்தான் இன்று 20 தொடர்ப்பில் சிங்கள மக்கள் மத்தியில் பொதுவாக நிலவுகின்றது. இந்தக் கருத்தின் மறுபக்கத்தை இப்போது பார்ப்போம்.

இதற்கு ஆதரவாக வாக்களித்த மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் முதலில் நாடு என்று சிந்தித்ததால்தான் நாம் இப்படியான ஒரு முடிவுக்கு வந்ததாகக் கூறுகின்றார். அவரது இந்தக் கருத்துத் தொடர்பில் முஸ்லிம் சமூகம்தான் பதில் சொல்ல வேண்டும்.

தேர்தல் காலங்களில் ராஜபக்ஸாக்களை முஸ்லிம் விரோதிகளாக காட்டி மேடைகளில் முழங்கித்தான் இவர்கள் நாடாளுமன்றம் போனார்கள்.

அதே நேரம் மறு புறத்தில் ராஜபக்ஸாக்களும் இது போன்ற முஸ்லிம் தனித்துவ அரசியல் தலைமைத்துவத்துக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரை செய்துதான் மிகப்பெரிய வெற்றி பெற்றார்கள்.

எனவே ஹரிஸ் தரப்பு நாட்டு நலன் கருதித்தான் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்லி வருகின்றது. ஆனால் யதார்த்தம் அப்படி இல்லை என்பதுதான் எமது கருத்து.

மேலும் தாம் மு.கா. தலைவர் ஹக்கீமுடன் கலந்தாலோசித்த பின்னர் அவரது ஆலோசனைப்படிதான் இந்த முடிவை எடுத்தாகவும் ஹரிஸ் குறிப்பிடுகின்றார்.

அவரது இந்தக் கருத்து முற்றிலும் சரியானது அதற்கு நம்மிடம் பல ஆதாரங்கள் இருக்கின்றன.

தௌபீக்

திருமலை மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் ஹக்கீமுக்கு மிகவும் விசுவாசமானவர். அவர் கூட இதற்கு வாக்களித்திருக்கின்றார் என்றால் மு.கா. தலைவர் ஹக்கீம் வேண்டுதலின் பேரிதான் அப்படி நடந்திருக்கின்றது என்பது மிகத் தெளிவு.

20 தொடர்பில் கடைசி நேரத்தில் ஹக்கீமுடன் பசில் ராஜபக்ஸ பல முறை பேசி இருக்கின்றார். அதற்கு தன்னால் முடிந்த சிறந்த பங்களிப்புக் கிடைக்கும் (ஐவில் டு மை பெஸ்ட்) என்று பதில் வழங்கப்பட்டது என்றும் இதற்கு பசில் தரப்பு இப்போது தாங்களை உள்வாங்கிக் கொள்வதில் எமக்கு கடும் போக்கு பௌத்த தேரர்களால் நெருக்கடிகள் இருக்கின்றது அது உங்களுக்கும் தெரியும்.

எதிர்காலத்தில் நீங்களும் அரசுடன் இணைந்து பணியாற்ற நாம் ஏற்பாடுகளைச் செய்கின்றோம் எனப் பதில் சொல்லப்பட்டிருக்கின்றது என ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

ஹக்கீம்

ஆனால் ஹக்கீமோ இன்று 20க்கு ஆதரவாக வாக்களித்த மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை என்று நாட்டையும் சமூகத்தையும் ஏமாற்ற முயல்கின்றார்.

தனது அணியில் ஏற்பட்டடுள்ள எதிர்ப்தியை சமாளிக்கத்தான் அவர் இப்படி நாடகமாடுகின்றார். எனவே தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடும் விளையாட்டைத்தான் மு.கா. தலைமை செய்து கொண்டிருக்கின்றது.

அவரது நடவடிக்கையால் இப்போது நடந்திருப்பது இந்த அரசாங்கத்தை பதவிக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய முறுத்தெட்டுவே தேரர் போன்றவர்கள் கூட இதில் பெரிய டீல்கள் நடந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுவதுடன் இது தனக்கு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றார்.

எனவே இதனால் ஆளும் தரப்புக்கு ஆதரவளித்தவர்களிடத்தில் கூட இதற்கு அங்கிகாரம் கிடையாது. அவர்கள் இப்படி நடந்து கொள்ளாமல் இருந்திருந்தால் அவர்களுக்கு மூன்றில் இரண்டு கிடைத்திருக்காது.

எனவே இப்போது ஆறுபேர் பார்த்த வேலையால் முஸ்லிம்கள் சந்தர்ப்வாதிகள் என்ற கருத்தை மேலும் உறுதி செய்யப் பட்டிருக்கின்றது.

அரவிந்த குமார் என்ற பதுள்ளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் 20க்கு ஆதரவாக வாக்களித்து விட்டு அதற்கு, சமூக நலன் காரணமாக தாம் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்கின்றார்கள்.

இதற்கு ஆதரவளித்த ஒரே சிங்கள உறுப்பினர் டயான கமகே அவர் 20க்கு ஆதரவாக வாக்களித்ததால்தான் நான் இப்போது நிம்மதியாகத் தூங்க முடிகின்றது என்று கூறுகின்றார்.

அதே நேரம் சஜித் அணியில் தான் தேசியப் பட்டியல் உறுப்பினர் என்பதால் என்னை வெளியேற்றினால் எனது நலன்களை ராஜபக்ஸாக்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பகிரங்கமாக பேசி வருகின்றார்.

அதே நேரம் தனது தொலைபேசி கூட்டணியில் இந்த நடவடிக்கை பெரும் கோபத்துக்கு ஆளாகி இருக்கின்றது.

இவர்களைத் தமது கூட்டணியில் சேர்த்துக் கொண்டது பெரும் முட்டாள் தனம் என்று சஜித் தரப்பு தற்போது யோசிக்கின்றது.

அரச ஆதரவாளர்களும் இதற்குப் பாரட்டுவதற்குப் பதிலாக பல்டியைக் கேவலமாகப் பேசுகின்றார்கள்.

ரிசாட் தரப்பில் இருவர் இப்படி நடந்து கொண்டதும் இதே பின்னணியில்தான். பல்டியடித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அடிக்கடி தொலைபேயில் பசில் இணைப்புக்கு வந்த போதெல்லாம் அவருக்கு சேர் போட்டுப் பேசுவதில் இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்திருக்கின்றார்கள்.

சஹ்ரான் தனது நடவடிக்கையால் நாட்டுக்குப் பெரும் அழிவையும் சமூகத்துக்குப் பெரும் தலைகுனிவையும் தேடிக் கொடுத்தார்.

முஸ்லிம் அரசியல்வாதிகளும் அவர்களது சந்தர்ப்பவாத அரசியலும் மீண்டுமொரு முறை சமூகத்துக்கு ஒரு அவமானத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

விஜேதாச ராஜபக்ஸ போன்றவர் 20 விடயத்தில் நடந்து கொண்டதை எவரும் இப்போது பெரிதாகப் பேசவில்லை. ஆனால் முஸ்லிம் சமூகத்தினர் சந்தர்ப்பவாத அரசியல்தான் இன்று நாட்டில் பேசு பொருளாக இருக்கின்றது. எனவே அழையா வீட்டு விருந்தாளிகளாக இன்று ஹக்கீம், ரிசாட் ஆட்கள் அங்கே நிற்க்கின்றார்கள்.

வருகின்ற வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஹக்கீம், திகாம்பரம் பேன்றவர்கள் அரசுக்கு ஆதரவாக பகிரங்கமாக களத்தில் இறங்க இருப்பது பற்றியும் ஒரு கதை இருக்கின்றது.

என்னதான் இவர்கள் அரசுடன் இணைந்து கொள்ள முயன்றாலும் இவர்களை அழையா விருந்தாளிகளாகவே அரசு தன்னுடன் வைத்திருக்க விரும்புகின்றது.

எனவே கடந்த காலங்களைப் போல் இவர்களை ஆளும் தரப்பு தலையில் தூக்கி வைத்துக் கொள்ள மாட்டாது. அப்படி மூலையில் எங்காவது ஒரு இடத்தில் இரு என்றுதான் அரசு இவர்களை வைத்துக் கொள்ளும்.

மொத்தமாக நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரும் ஞானசாரத் தேர் கட்சி உறுப்பினரும் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை.

சபநாயகர் வாக்களிக்க வில்லை. மைத்திரி வாக்களிப்பைத் தவிர்த்துக் கொண்டார். இந்த நான்கு பேரையும் தவிர 221 பேர் வக்களித்திருந்தனர்.

இதில் 20க்கு ஆதரவாக 156பேர். ஏதிராக 65 பேரும் வாக்களிதார்கள். ஆளும் தரப்புக்கு நேரடியாக 143 உறுப்பினர்கள்.

தனித்துப் போட்டியிட்ட ஆளும் தரப்பு ஆதரவு கட்சிகளின் 5பேரும் தொலைபேசியல் இருந்து கைதூக்கிய எட்டுப்பேரும் இதில் அடங்குகின்றார்கள்.

இந்த எட்டுப்பேர் பல்டி அடித்திருக்காவிட்டால் அரசு மூன்றில் இரண்டை எட்டி இருக்க மாட்டாது. இப்போது முஸ்லிம்கள் தரப்பு குற்றவாளிக் கூன்றில் நிறுத்தப் பட்டிருக்கின்றது.

“தம்பில வெடே துன்னா” என்றுதான் சந்தியில் கதை. எதிர் காலத்தில் தலைவர்கள் மட்ட பல்டிகளும் வர இருக்கின்றது. வருகின்ற வரவு செலவு திட்டத்தின் போது அது நடக்க இடமிருக்கின்றது.

இப்போது 20 இல் சொல்லப்பட்டுள்ள இரட்டைப் பிரசா உரிமை பற்றிப் பார்ப்போம்.

நாடு கடந்து வாழ்கின்ற இலட்சக்கணக்கானவர்களுக்கு இங்கு அரசியல் செய்வதற்கு உரிமை இதன் மூலம் கிடைக்கின்றது என்று சொல்ல முடியும்.

ஜே.ஆர். இந்த 1978 யாப்பைக் கொண்டுவந்த போது இரட்டைக் குடியுரிமை பற்றி அப்போது ஒருவர் கூட வாய்திறக்க வில்லை.

அப்படிப்பார்க்கின்ற போது 19 ஆவது அரசியல் சீர்திருத்தம் ராஜபக்ஸாக்களைப் பழிவாங்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று என்று வாதிடுவதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கின்றது.

இப்போது புதிய அரசியல் யாப்பு என்ற கதைக்கு வருவோம். 20 க்கு மூன்றில் இரண்டை வாங்கிக் கொண்ட ராஜபக்ஸாக்கள், இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த பௌத்த குருமரை இப்போது சந்தித்து அவர்களது கோபத்தைத் தணிக்கின்ற வேலையைப் பார்த்து வருகின்றார்கள்.

ஜனாதிபதி ஜீ.ஆர். மற்றும் பிரதமர் எம்.ஆர். நேரடியாக அவர்களிடத்தில் இதற்கான விளக்கங்களைக் கொடுத்து புதிய யாப்பில் பின்னர் தங்களது விருப்பங்கள் அனைத்தையும் நாம் நிறைவேற்றித் தருவோம் என்று உத்தரவாதம் கொடுத்து வருகின்றார்கள்.

எனவே அவர்கள் இப்போது பெட்டிப் பாம்பின் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் 20க்குக் காட்டிய வேகத்தை புதிய அரசியல் யாப்பு விடயத்தில் ராஜபக்ஸாக்கள் காட்டமாட்டார்கள் என்று நாங்கள் கருதுகின்றோம்.

புதிய அரசியல் யாப்பை வடிவமைக்கின்ற பணிக்கு ஒன்பது பேர் அடங்கிய ஒரு குழுவை அரசு நியமனம் செய்திருக்கின்றது. அது ஆமை வேகத்தில்தான் நகரும். அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

இந்தியாவை நேரடியாகப் பகைத்துக் கொள்ள முடியாத நிலை அரசுக்கு இருக்கின்றது. எனவே குறைந்தது இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் வரை புதிய அரசியல் யாப்பு என்பது கானல் நீர் போலத்தான் இருக்கும் என்பது எமது கணிப்பு.

புதிய யாப்பு வடிவமைக்கப்படுகின்ற போது கடும் போக்கு பௌத்த மேலாதிக்கம் அங்கு ஆதிக்கம் செலுத்தும்.

அந்த யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் பலவற்றை பௌத்த கடும் போக்காளர்கள் ஏற்கெனவே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கையளித்திருக்கின்றார்கள்.

அவர்களின் விருப்பங்களை அரசின் உயர் மட்டங்கள் அங்கிகரிக்கின்ற போது இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்கள் பெரும் நெருக்கடிகளுக்கும் அடக்கு முறைகளுக்கும் இலக்காகும்.

இந்த 20 இல் சொல்லப்பட்ட திருத்தங்களை வைத்துக் கொண்டு ஜனாதிபதி எதிர்பார்க்கின்ற துரித அபிவிருத்திக்குப் போக முடியாது.

எனவே நாட்டுக்கு மிக அவசரமாக ஒரு யாப்புத் தேவை என்று ஜனாதிபதிக்கு விசுவாசமானவர்கள் கூறுகின்றார்கள்.

அதே நேரம் சஜித் தரப்பும் புதிய அரசியல் யாப்பு தேவை என்பதை ஏற்றுக் கொள்கின்றது. ஜேவிபி கூட யாப்பு மாற்றம் ஒன்று அவசியம் என்று சொல்கின்றது.

தமிழ் தரப்புக்களும் புதிய அரசியல் யாப்பில் நமக்கு ஏதும் நல்லது நடக்கும் என்று நம்புகின்றறது. நம்மைப் பொறுத்து இது விடயத்தில் எமக்கு அப்படியான ஒரு நம்பிக்கை கிடையாது.

காரணம் அதற்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய அரசில் செயல்பாடுகள் தற்போது கிடையாது. முஸ்லிம் தரப்பு சந்தர்ப்பவாத அரசியலை மையமாக வைத்து நகர்ந்து கொணடிருக்கின்றது.

எனவே தமிழ் தரப்புகளுக்கு இதற்காக போராடுவதற்கு சகபாடிகள் கிடையாது. அவர்கள் ஒரு கை ஓசையைதான் எழுப்ப வேண்டி இருக்கின்றது.

தற்போது வடக்கு கிழக்கில் பிளவு பட்டிருக்கின்ற அரசியல் இயக்கங்கள் ஒரு பொது இலக்கை மையமாக வைத்துக் கொடுக்கின்ற அழுத்தம் ஒன்றே தற்போது அவர்கள் கரங்களில் உள்ள ஓரே ஆயுதம்.

இதற்கான வியூகங்களை அவர்கள் உடனடியாக வடிவமைக்க வேண்டும். நிச்சயமாக புதிய யாப்பு விவகாரத்தில் இந்தியா ஏதாவது அழுத்தங்களைக் கொடுத்தால் மட்டுமே ஏதாவது தமிழர்களுக்கு நல்லது கிடைக்கலாம்.

இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் சேர்வடைந்த நிலையில் இருப்பதுபோல் தெரிகின்றது. அவர்களது பலயீனம் ராஜபக்ஸாக்களுக்கு வாய்ப்பாக இருக்கின்றது.

-நஜீப் பின் கபூர்-

Share.
Leave A Reply