இலங்கையில் தற்போது வேகமாக பரவிவரும் மிக வீரியம் கொண்ட கோவிட்-19 வைரஸானது, ஐரோப்பிய நாடுகளை அண்மித்து பரவிவரும் வைரஸ் பிரிவுடன் ஒத்துப்போவதாக இலங்கை பல்கலைக்கழகம் ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, இலங்கையில் தற்போது பரவிவரும் கோவிட் வைரஸின் 16 மாதிரிகளின் ஊடாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஐரோப்பாவின் ஸ்வீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளை அண்மித்தே இந்த கோவிட் வைரஸ் பிரிவு பரவி வருகின்றமை, சர்வதேச தரவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வு குழு குறிப்பிடுகின்றது.

இந்தியாவிலிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என முதலில் சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில், இந்தியாவில் பரவி வரும் வைரஸ் பிரிவுடன் இந்த வைரஸ் பிரிவு தொடர்புப்படவில்லை என அந்த குழுவினர் கூறுகின்றனர்.

இதன்படி, ஐரோப்பிய நாடுகளில் பரவிவரும் வைரஸ் பிரிவிற்கும், இலங்கையில் தற்போது பரவிவரும் வைரஸ் பிரிவிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதாக அந்த குழுவினர் உறுதிப்பட தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பரவிய கோவிட் தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதி முதல் கோவிட் வைரஸ் சமூகத்திற்குள் மீண்டும் பரவு ஆரம்பித்திருந்தது.

மினுவங்கொட தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் முதல் முறையாக கண்டறியப்பட்ட இந்த கோவிட் வைரஸ் கொத்தணி, பின்னரான காலப் பகுதியில் பேலியகொட மீன் சந்தையில் பரவ ஆரம்பித்திருந்தது.

அதன்பின்னர், கொழும்பு மாநகர சபை பணியாளர்களுக்கு இடையிலும், போலீஸ் அதிகாரிகளுக்கும் இந்த வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில், மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலை, பேலியகொட மீன் சந்தை மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியவற்றில் பரவிய கோவிட் வைரஸின் 16 மாதிரிகள் குறித்து ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம், சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய ஆய்வுகளை நடத்தியிருந்தது.

இந்த ஆய்வுகளின் பெறுபேறாக, குறித்த வைரஸ், முதல் தடவை பரவிய வைரஸ் பிரிவை விடவும், வீரியம் கொண்ட வைரஸ் பிரிவு என்பது அடையாளம் காணப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த வைரஸ் பிரிவு, ஐரோப்பிய நாடுகளில் பரவும் கோவிட் வைரஸ் பிரிவுடன் ஒத்து போகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் பரவும் வீரியம் கொண்ட வைரஸின் பாதிப்புக்கள் என்னென்ன?

இலங்கையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வரையான காலம் வரை 3478 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பின்னணியில், கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதி முதல் இன்று வரையான காலம் வரை 7746 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், இலங்கையில் இந்த புதிய கோவிட் கொத்தணி பரவுவதற்கு முன்னர் 13 பேர் உயிரிழந்திருந்ததுடன், புதிய பரவலின் ஊடாக உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 21 வரை அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை கோவிட் வைரஸ் தாக்கம் காரணமாக 11,224 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, அவர்களில் 5953 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது,

குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதி வரை 2 லட்சத்து 93 ஆயிரத்து 219 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டிருந்ததுடன், கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதி முதல் நேற்று வரையான ஒரு மாத காலத்தில் மாத்திரம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 229 பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் குறிப்பிடுகின்றது.

இதன்படி, கடந்த முறை இலங்கையில் பரவிய கோவிட் வைரஸை விடவும், இந்த முறை பரவிவரும் வைரஸானது, பரவும் வேகம் அதிகமான மிக வீரியம் கொண்ட வைரஸ் என பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கின்றது.

Share.
Leave A Reply