ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் நான்கால் பிரிபடக் கூடிய ஆண்டின் நவம்பர் மாதத்தின் முதலாம் திகதிக்குப் பின்வரும் செவ்வாய்க் கிழமையில் அமெரிக்க அதிபருக்கும் துணை அதிபருக்குமான தேர்தல் நடைபெறும்.
2016-ம் ஆண்டு நான்கால் பிரிபடக் கூடியது. அதன் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஞாயிற்றுக் கிழமையாதலினால் மூன்றாம் திகதி வரும் செவ்வாய்க் கிழமையில் (03-11-2016) அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கின்றது.
இலங்கையைப் போல அமெரிக்க அதிபர் நேரடி வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்வதில்லை. ஒவ்வொரு அமெரிக்க மாநிலத்திற்கும் என ஒதுக்கப்பட்ட தேர்தல் குழுக்கள் (Electoral College) அதிபரைத் தேர்ந்தெடுக்கின்றன.
தேர்தல் குழுக்கள் (Electoral College)
அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் இரண்டு என நூறு உறுப்பினர்களை அமெரிக்காவின் பாராளமன்றத்தின் மூதவைக்கு மக்கள் நேரடி வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்கின்றனர்.
ஐம்பது மாநிலங்களில் இருந்தும் அவற்றின் மக்கள் தொகைகு ஏற்ப அமெரிக்க பாராளமன்றத்தின் மக்களவைக்கு 435 உறுப்பினர்களை நேரடி வாக்களிப்பின் மூலம் மக்கள் தெரிவு செய்கின்றனர்.
மூதவையின் நூற்றையும் மக்களவையின் 435ஐயும் பாராளமன்ற உறுப்பினர் இல்லாத வாஷிங்டனுக்கு மூன்று தேர்தல் குழுக்கள் எனவும் கூட்டி மொத்தம் 538 தேர்தல் குழுக்கள் (Electoral College) அமெரிக்காவில் உள்ளன.
உதாரணத்திற்கு கலிபோர்ணியா மாநிலத்தை எடுத்துக் கொண்டால் அது மக்களவைக்கு 53 உறுப்பினர்களையும் மூதவைக்கு இரண்டு உறுப்பினர்களையும் தெரிவு செய்கின்றது.
அதனால் அங்குள்ள மொத்த தேர்தல் குழுக்கள் 55ஆகும். ஒருவர் அதிபராகத் தெரிவு செய்யப்படுவதற்கு இந்த குழுக்களில் உள்ளவர்களின் 270பேரின் வாக்குகள் தேவை.
கலிபோர்ணியா மாநிலத்தின் மொத்த 55 தேர்தல் குழுக்களில் 28ஐ ஒரு அதிபர் வேட்பாளரும் மற்ற வேட்பாளர் 27ஐயும் பெற்றால் அந்த மாநிலத்தின் மொத்த 55 வாக்குகளும் அதிகப்படியான 28 தேர்தல் குழுக்கள் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு உரியதாக்கப்படும்.
இதை “வெற்றி பெற்றவர் எல்லாவற்றையும் அள்ளிக் கொள்ளுவார்” என்பர். Maine, Nebraska ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் “வெற்றி பெற்றவர் எல்லாவற்றையும் அள்ளிக் கொள்ளுவார்” என்ற முறைமை இல்லை.
தேர்தல் குழுக்கள் மூலமான தேர்வு முறையால் இரண்டு கட்சிகள் மட்டும் ஆதிக்கல் செலுத்துவது இலகுவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்களுக்கு இரண்டு முதலாளித்துவக் கட்சிகளைத் தவிர வேறு தெரிவு இல்லை.
அமெரிக்க பாராளமன்றத் தேர்தலும் நடக்கின்றது.
2020 நவம்பர் 3-ம் திகதி அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவையின் 435 தொகுதிகளுக்குமான தேர்தலும் நடைபெறுகின்றது. மக்களவைக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தற்போது ஜோ பிடனின் மக்களாட்சிக் கட்சி மக்களவையில் அதிக பெரும்பான்மையுடன் இருக்கின்றது. ஆனால் மூதவையில் டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும்பான்மையுடன் இருக்கின்றது.
ஒரு மூதவை உறுப்பினரின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள். ஆனால் மொத்த மூதவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கான தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை சுழற்ச்சி முறையில் நடைபெறும். 2020 நவம்பர் 03-ம் திகதி 35 மூதவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடை பெறுகின்றது.
இதில் மக்களாட்சிக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி மூதவையிலும் அது பெரும்பான்மையுடன் இருக்கும் என எதிர் பார்க்கப் படுகின்றது. ஒரு அதிபர் சிறப்பாக செயற்பட மக்களவையிலும் மூதவையிலும் அவருக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
கேள்விக் குறியான மக்களாட்சி
கலிபோர்ணியா மாநிலம் அமெரிக்காவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமாகும். அங்கு 718,000 மக்களுக்கு ஒரு தேர்தல் குழு என வரையறை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் வையோமிங் (Wyoming) மாநிலத்தில் 193,000 மக்களுக்கு ஒரு தேர்தல் குழு எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளது.
இந்த வேறுபாட்டால் அமெரிக்க தேர்தல் முறைமை மக்களாட்சி முறைமைக்கு விரோதமானது எனப்படுகின்றது.
2016-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஹிலரி கிளிண்டனுக்கு டொனால்ட் டிரம்பிலும் பார்க்க அதிக மக்கள் வாக்களித்திருந்த போதிலும் தேர்தல் குழு முறையினால தேர்தலால் டிரம்ப் வெற்றி பெற்றார்.
பெரிய ஒரு சில மாநிலங்கள் மற்ற மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க இந்த தேர்தல் குழு முறைமை உதவி செய்கின்றது என அதை விரும்புபவர்கள் சொல்கின்றனர்.
மொத்த ஐம்பது மாநிலங்களில் California, New York, Texas, Florida, Pennsylvania, Ohio, Illinois, Michigan, New Jersey, North Carolina, Virginia ஆகிய பதினொரு மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்று ஒரு வேட்பாளரால் அதிபராக முடியும்.
1787-ம் அமெரிக்க அரசியல் யாப்பு வரையும் போது குடியரசுத் தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதா அல்லது பாராளமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதா என்ற இருதரப்பு விவாதங்களின் உடன்பாடுதான் தேர்வுக் குழு முறைமை.
இரு கட்சிகளைத் தவிர வேறு தேர்வில்லை.
அமெரிக்கத் தேர்தல்களில் குடியரசுக் கட்சி மக்களாட்சிக் கட்சி என இரண்டு பெரிய கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன.
இந்த இரண்டு கட்சிகளும் தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் அதிக பணம் செலவழிக்கப்படும்.
இம்முறை குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் மக்களாட்சிக் கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றார்கள்.
ஒவ்வொரு வேட்பாளர்களும் நிச்சயம் வெற்றி பெறக் கூடிய மாநிலங்கள், வெற்றி வாய்ப்புள்ள மாநிலங்கள் என உள்ளன.
அத்துடன் கடும் போட்டி நிலவும் மாநிலங்களும் உள்ளன. 2020 ஒக்டோபர் 29-ம் திகதிய நிலவரப்படி மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் கலிபோர்ணியா, நியூ யோர்க், இலியான, நியூ ஜேர்சி, போன்ற பெரிய மாநிலங்கள் உட்பட பத்தொன்பது மாநிலங்களில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நிலை உள்ளதாக கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்கள் தெரிவிக்கின்றன.
அவற்றில் அவருக்கு 207 தேர்தல் குழு வாக்குகள் கிடைக்கும். மேலும் ஏழு மாநிலங்களில் அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளன.
அவற்றில் இருந்து ஜோ பிடனுக்கு 72 தேர்தல் குழு வாக்குகள் கிடைக்கலாம். இரண்டிலும் மொத்தமாக அவருக்கு 279 தேர்தல் குழு வாக்குகள் கிடைக்கலாம் என்பதால் அவர் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்படுகின்றது.
குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 17 மாநிலங்களில் நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவற்றில் இருந்து 83 தேர்தல் வாக்குகளைப் பெறுவார். டிரம்ப் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் உள்ள ஆறு மாநிலங்களில் இருந்து 42 தேர்தல் குழு வாக்குகளை டிரம்ப் பெறலாம்.
அதனால் டிரம்ப் 125 தேர்தல் குழு வாக்குகளைப் பெறலாம். கடும் போட்டி நிகலும் எட்டு மாநிலங்கள் எல்லாவற்றிலும் டிரம்ப் வெற்றி பெற்றாலும் அவரால் தேவையான 270 வாக்குகளைப் பெற முடியாது.
நடளாவிய கருத்துக் கணிப்பில் ஜோ பிடனுக்கு ஆதரவாக 51.4% மக்களும், டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக 42.8% மக்களும் உள்ளனர். இவை யாவும் 2020 ஒக்டோபர் 29-ம் திகதி நிலவரங்கள். இறுதி நேரத்தில் செய்யப்படும் பரப்புரைகள் மற்றும் ஒரு வேட்பாளரைப் பற்றிய அந்தரங்க தகவல்களை அம்ப்லமாக்குதல் போன்றவை நிலைமையை மாற்றலாம்.
ஒதுக்கப்பட்ட உலகம்
வழமையாக தேர்தல் பரப்புரைக் கூட்டங்களிலும் நேரடி தொலைக் காட்சி விவாதங்களிலும் உலக அமைதி, உலக ஒழுங்கு போன்றவை காத்திரமான பங்கு வகிக்கும்.
இந்த முறை அவை பெரிதாக அடிபடவில்லை. துணை அதிபர்கள் பதவிக்குப் போட்டியிடும் மைக் பென்ஸுக்கும் கமலா ஹரிஸுக்கும் இடையில் நடந்த விவாதத்தில் உலக வெப்பமயமாதல் மற்றும் சூழல் பாதுகாப்பு போன்றவை விவாதிக்கப்பட்டன.
சிரியாவில் நடந்த பேரழிவு, பத்தொன்பது ஆண்டுகளுக்கு மேல் தொடரும் ஆப்காலிஸ்த்தான் போர், மனித உரிமை மீறல் போன்றவற்றைப் பற்றிய விவாதமே நடக்கவில்லை எனச் சொல்லலாம்.
கொவிட்-19 தொற்று நோயை டிரம்ப் கையாண்ட விதம் அவருக்கு பெரும் பாதகமாக அமைந்துள்ளது.
கடும் போட்டி நிலவும் மாநிலங்களில் ஒன்றான புளோரிடா மாநிலத்தில் டிரம்பிற்கு எதிரான பரப்புரையில் நாவன்மை மிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஈடுபட்டுள்ளார்.
தபால் மூலம் அளிக்கப் படும் வாக்குகளில் குளறுபடிகள் நடந்தன என்ற குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து டிரம்ப் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளாமல் பதவியில் தான் தொடருவேன் என அடம் பிடிப்பார் எனவும் அஞ்சப்படுகின்றது.
அதனால் நாட்டில் பெரும் கலவரம் உருவாகலாம் எனவுக் எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்க பாதுகாப்புத் துறை அதற்கு தயாரான நிலையில் உள்ளது.
2020 நவம்பர் 3-ம் திகதி நடக்கும் அமெரிக்க தேர்தல் முடிவுகள் உலக அமைதிக்கோ அல்லது செழுமைக்கோ உதவாது.