சென்னையில் மகள்படும் கஷ்டத்தைப் பார்த்த அவரின் தந்தை, வீடு புகுந்து 35 சவரன் தங்க நகைகளைத் திருடியிருக்கிறார். திருடிய 24 மணி நேரத்துக்குள் போலீஸாரிடம் சிக்கிக்கொண்டார்.

சென்னை எம்.கே.பி.நகர் மத்திய நிழற்சாலை, அப்துல் கலாம் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருபவர் ஜோசப் செல்வராஜ் (57). இவர் இரும்பு வியாபாரம் செய்துவருகிறார்.

கடந்த 26.10.2020-ல் ஜோசப் செல்வராஜின் வீட்டில் திருமணம் நடந்திருக்கிறது. அதனால் அவரின் குடும்பத்தினர் பெங்களூரு சென்றுவிட்டனர்.

ஜோசப் செல்வராஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். கடந்த 4-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு அவர் கடைக்குச் சென்றுவிட்டார்.

பிற்பகலில் வீட்டுக்குள்ளிருந்து சத்தம் கேட்பதாகப் பக்கத்து வீட்டினர் ஜோசப் செல்வராஜுக்கு போனில் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது 35 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

உடைக்கப்பட்ட பீரோ

இது குறித்து ஜோசப் செல்வராஜ், எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

சம்பவ இடத்துக்கு உதவி கமிஷனர் ஹரிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், மனோன்மணி, எஸ்.ஐ-க்கள் பிரேம்குமார், கல்வியரசு, காவலர்கள் கார்த்திக், உதயராஜ் ஆகியோர் சென்று விசாரித்தனர்.

கொள்ளை நடந்த இடத்தில் போலீஸார் விசாரித்தபோது கொள்ளையன், சிவப்பு நிற சொகுசு காரில் வந்ததும், முகம் தெரியாத அளவுக்கு முகமுடி அணிந்திருந்ததும் தெரியவந்தது.

மேலும், பக்கத்துக்கு வீடுகளை வெளியில் பூட்டிவிட்டு கதவிலுள்ள லென்ஸை மறைக்கும் வகையில் பறவைகளின் இறகுகளை ஒட்டிவிட்டுச் சென்றதும் தெரிந்தது.

இந்தக் கொள்ளை தொடர்பாக அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர்.

அப்போது அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலிருக்கும் ஆயா ஒருவர் கூறியதுபோல சிவப்பு நிற காரில் கொள்ளையன் ஏறிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த காரின் பதிவு நம்பரை கண்டுபிடித்த போலீஸார் அந்த முகவரிக்குச் சென்றனர். ஆனால், கொள்ளையன் அங்கு இல்லை.

மேலும் அந்த கார், புரசைவாக்கத்திலுள்ள ஒருவருக்கு விற்கப்பட்ட தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸார் அங்கு சென்றபோது கொள்ளையன், செங்குன்றம் அருகேயுள்ள காரனோடை, ஆத்தூர், ஜெய்நகரில் குடியிருப்பது தெரியவந்தது.

சிசிடிவியில் சிக்கிய கார்
சிசிடிவியில் சிக்கிய கார்

அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். அப்போது சிசிடிவி-யில் சிக்கிய சிகப்பு நிற சொகுசு கார், பங்களா வீட்டின் முன் நின்றுகொண்டிருப்பதை போலீஸார் பார்த்தனர்.

உடனே அந்த வீட்டுக்குள் சென்று போலீஸார் விசாரித்தபோது ஜான்சன் நெல்சன் (55) கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் அவரைக் கைதுசெய்து 35 சவரன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். ஜான்சன் நெல்சனிடம் போலீஸார் விசாரித்தபோது கொள்ளையடித்ததற்கான காரணம் தெரியவந்தது.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “ஜான்சன் நெல்சன், கேட்டரிங் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார்.

அதில் நல்ல வருமானம் கிடைத்ததால், காரனோடை பகுதியில் பங்களா வீடு ஒன்றைக் கட்டியிருக்கிறார்.

அந்த வீட்டின் இன்றைய மதிப்பு 3 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். ஜான்சன் நெல்சனின் மகளுக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

அப்போது அவருக்கு போடப்பட்ட தங்க நகைகள் குறைவாக இருந்தது என்று மாப்பிள்ளை வீட்டினர் கூடுதல் நகைகளைக் கேட்டிருக்கிறார்கள்.

கொரோனா காலகட்டத்தில் ஜான்சன் நெல்சனுக்கு வேலை இல்லை. அதனால், வருமானமும் இல்லை.

இந்தச் சமயத்தில் கணவர் வீட்டில் மகள் கஷ்டப்படுவதையறிந்த ஜான்சன் நெல்சன் திருட முடிவு செய்திருக்கிறார்.

இதையடுத்து ஆன்லைனில் வீட்டின் பூட்டுகளை உடைக்கத் தேவையான கம்பிகள், கையுறைகள், முகமூடி ஆகியவற்றை வாங்கியிருக்கிறார் ஜான்சன்.

பிறகு, தன்னுடைய காரில் வீட்டிலிருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்திருக்கிறார். பேசின்பாலம் பகுதிக்கு வந்த ஜான்சன், அங்கு குடிசை வீடுகளைப் பார்த்துவிட்டு எம்.கே.பி.நகருக்குள் நுழைந்திருக்கிறார்.

அங்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பார்த்த ஜான்சன், அங்கே கொள்ளையடிக்க முடிவு செய்திருக்கிரார்ர். காரை நிறுத்திவிட்டு, அடுக்குமாடி குடியிருப்புக்குள் பிற்பகலில் நுழைந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் அங்கு ஆள்நடமாட்டம் இல்லை.

ஜோசப் செல்வராஜின் வீட்டில் பூட்டு தொங்குவதைப் பார்த்த ஜான்சன், இரும்புக்கம்பியால் அதை உடைத்து உள்ளே சென்றிருக்கிறார்.

பிறகு பீரோவிலிருந்து தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.

அப்போது அவரை அந்தப் பகுதியிலிருக்கும் வயதான பெண் ஒருவர் பார்த்திருக்கிறார். ஜோசப் செல்வராஜ் வீட்டில் சமீபத்தில் திருமணம் நடந்ததால், அங்கு சென்றிருப்பார் என அந்தப் பெண் நினைத்திருக்கிறார். இதையடுத்துதான் கொள்ளை நடந்த தகவல் வெளியில் தெரிந்தது.

Share.
Leave A Reply