யாழ்ப்பாணம், மானிப்பாயில் பலசரக்கு கடை ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக்குக் கும்பல் ஒன்று உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதுடன், கடையிலுள்ள பொருட்களையும் அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று மாலை 6.30 மணியளவில் மானிப்பாய் சந்திக்கு அண்மையாக பொன்னாலை வீதியில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் வந்த வன்முறைக் கும்பல் கடைக்குள் புகுந்து உரிமையாளரின் கழுத்தில் தாக்கியுள்ளது.
அத்தோடு கடையிலிருந்த பொருட்கள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திவிட்டு தப்பிக்க முற்பட்ட வேளை, அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் கும்பலைப் பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.
எனினும் ஒருவரை மட்டும் இராணுவத்தினரால் பிடிக்க முடிந்தது. ஏனையோர் தப்பித்துள்ளனர். அத்துடன் கும்பல் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.