நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டு கணிசமான அளவு வாக்குகளை பெற்றது.

இந்த நிலையில், வரும் சட்ட மன்ற தேர்தலில் எத்தகை நிலைப்பாட்டை மேற்கொள்வது என்பது தொடர்பாக கடந்த 3 நாட்களாக சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த 3 நாள் ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு கமல்ஹாசன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து ஒரு அறிக்கை வெளியானது. அவரது உடல்நிலை குறித்து அவரிடம் பேசினீர்களா? அரசியல் நிலைப்பாடு குறித்து அவரிடம் பேசினீர்களா?

பதில்:- ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு பற்றி என்னிடம் பேசுகிறார். அவை அனைத்தையும் ஊடகங்களில் தெரிவிக்க முடியாது. அவர் அறிக்கையில் அவரது உடல்நிலை குறித்து வெளியிடப்பட்டது உண்மை என்பது எனக்கு முன்பே தெரியும்.

கேள்வி:- சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணி அமைக்குமா? அமைக்காதா?

பதில்:- கூட்டணி குறித்து பதில் சொல்லும் நேரம் இதுவல்ல என்று நினைக்கிறேன். எங்களுக்கு கிடைத்திருக்கும் சதவீதங்கள், கணக்குகளை பார்க்கும் போது நாங்கள் தான் தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி.

கேள்வி: கழகங்களுடன் கூட்டணி இல்லை என்ற பட்சத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைப்பீர்களா?

பதில்:- நல்லவர்களுடன் கூட்டணி என்று சொல்லி இருக்கிறேன். நல்லவர்கள் எல்லா கட்சியிலும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இங்கு வர வேண்டும் என்று கூறுகிறேன். கட்சிகளுடன் கூட்டணி என்பது இந்த நேரத்தில் இவ்வளவு அவசரமாக சொல்ல வேண்டியது இல்லை. எங்கள் அரசியல் பழி போடும் அரசியலும் அல்ல. பழி வாங்கும் அரசியலும் அல்ல. வழிகாட்டும் அரசியலாக இருக்கும்.

கேள்வி:- தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளதே?

பதில்:- உங்களுக்கு தகவல் சொன்னவர் யார்? என்று சொல்லுங்கள். ஏன் என்றால், எனக்கு அவர்கள் தகவல் சொல்லவில்லை. நான் தான் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர். உங்களுக்கு தகவல் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.

கேள்வி:- ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அவர் உடல்நிலையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா? ஒரு நண்பராக என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:- அவர் உடல்நிலையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது நண்பராக சொல்லும் ஒரு விஷயம். நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பது எனக்கு எப்போதும் இருக்கும் ஆசை. இரண்டில் எது முக்கியம் என்று பார்க்கும் போது உடல்நிலை முக்கியம்.

ஆனால், முடிவு எடுக்க வேண்டியது நான் அல்ல. அவர் தான் முடிவு எடுக்க வேண்டும். 2 விதமாகவும் வற்புறுத்த முடியாது.

நல்ல ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். என் அன்பு என்ன என்பது அவருக்கு தெரியும். அதை இங்கு விளக்க வேண்டியது அல்ல.

கேள்வி:- சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவாரா? அவரது குரல் சட்டசபையில் ஒலிக்குமா?

பதில்:- கண்டிப்பாக ஒலிக்கும். நான் என்னுடைய ஆட்களுக்கு சொல்லும் போது சில நடைமுறைகள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அதற்கு நான் சொன்ன உதாரணம், கண்டிப்பாக மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டசபையில் ஒலிக்கும். அதற்கான தகுதி உடையவர்களாக இன்று முதல் நடக்க தொடங்குங்கள் என்று தெரிவித்து இருக்கிறேன்.

கேள்வி:- நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுவீர்கள்? திருச்சியா? மயிலாப்பூரா?

பதில்:- உங்கள் யோசனையை நான் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், எங்கு நான் போட்டியிடுவேன் என்பது நான் கையெழுத்து போடும் போது தான் தெரியும்.

கேள்வி:- ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்றால், அவரிடம் ஆதரவு கேட்பீர்களா?

பதில்:- நான் தமிழகத்தில் உள்ள அனைவரிடமும் ஆதரவு கேட்டு கொண்டு இருக்கிறேன். அவரிடம் கேட்காமல் விட்டுவிடுவேனா? அவர் கட்சி ஆரம்பித்தால் அவரிடம் கேட்பது வேறு விஷயம். ஆதரவு என்று கேட்பது வேறு விஷயம்.

கேள்வி:- மக்கள் நீதி மய்யம் சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை எப்போது தொடங்கும்?

பதில்:- என்னை பொறுத்தவரையில் பிரசாரம் தொடங்கிவிட்டது. இனி நான் எங்கெல்லாம் ஊடகத்தின் முன் நிற்பேனோ அப்போது எல்லாம் பிரசாரம் நடக்கும். ஊடகம் மூலமாகவோ, திறந்தவெளியிலோ அது நடந்து கொண்டு இருக்கும். பிரசாரம் தொடங்கிவிட்டது. நவம்பர் 26, 27-ந் தேதிகளில் திருச்சி, மதுரையிலும், டிசம்பர் 12, 13-ந் தேதியில் கோவை, சேலத்திலும் பிரசாரம் செய்ய உள்ளேன்.

கேள்வி:- சட்டமன்ற தேர்தலில் உங்கள் வேட்பாளர் தேர்வு எப்படி இருக்கும்?

பதில்:- எங்கள் வேட்பாளர் தேர்வு மக்களுக்கு தெரிந்தவர்களாக இருப்பார்கள். அல்லது மக்களுக்கு பிடித்தவர்களாக இருப்பார்கள். சினிமா மட்டும் இன்றி நற்பணிகளால் மக்கள் மத்தியில் தெரிந்தவர்களாக இருப்பார்கள். அப்படித் தான் தேர்ந்தெடுக்க முயற்சிக்கிறோம்.

கேள்வி:- தமிழகத்தில் மேற்கொள்ள இருந்த வேல் யாத்திரை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- என்னுடைய ஆர்வம் எல்லாம் வேலையை எப்படி வாங்கித் தருவது என்பது தான். இந்த ‘வேலை’ யார் வேண்டுமானாலும் கையில் எடுக்கலாம். வேலையை வாங்கித் தருவது என்பது மிகப்பெரிய பொறுப்பு. வேல் யாத்திரை வேண்டாம் என்று ரத்து செய்தது நல்லது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு ரத்து செய்து இருக்கலாம்.

கேள்வி:- 7 தமிழர்கள் விடுதலை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- தூக்கு தண்டனை வேண்டாம் என்பது என் கருத்து. அவர்கள் விடுதலை குறித்து சட்டம் தான் முடிவு செய்யும்.

கேள்வி:- 7 தமிழர் விடுதலையில் கவர்னரின் காலதாமதம் குறித்து உங்கள் கருத்து?

பதில்:- காலம் தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி.

கேள்வி:- பிக்பாஸ் நிகழ்ச்சியை அரசியலுக்கு பயன்படுத்துவதாக கூறுகிறார்களே?

பதில்:- கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யமும் ஒன்று தான். எங்கு மேடை கிடைத்தாலும் பிரசாரம் செய்வேன். அது என் கருத்து சுதந்திரம். என் நம்பிக்கை சம்பந்தப்பட்டது.

இவ்வாறு கமல்ஹாசன் பதில் அளித்தார்.

Share.
Leave A Reply