காவலர் கற்குவேல் எப்போதும் இரவுப் பணியை மட்டுமே விரும்பி கேட்டிருக்கிறார். இரவு முழுவதும் வீடுகளை நோட்டமிடும் அவர், பகலில் காவலர் உடையிலேயே பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்துக் கொள்ளையடித்திருக்கிறார்.
நெல்லை மாநகர விரிவாக்கப் பகுதிகளிலுள்ள வீடுகளில் பட்டப்பகலில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன.
குறிப்பாக, பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து, துணிச்சலாகப் பகலிலேயே கொள்ளையடிக்கப்பட்டதால் போலீஸார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். ஆனாலும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க முடியவில்லை.
பெருமாள்புரம், கே.டி.சி நகர், பேட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலுள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் நடந்த கொள்ளைச் சம்பவங்களில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
சில வாரங்களுக்கு முன்னர் பெருமாள்புரம் பகுதியிலுள்ள சிறைக் காவலர் குடியிருப்பில் பூட்டிய வீட்டை உடைத்து 12 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
சிறைக் காவலர் குடியிருப்பில் துணிச்சலுடன் நடந்த கொள்ளை குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அந்த வீட்டில் ஐந்து பேரின் கைரேகைகள் சிக்கின. அதனால் அந்த ரேகைகளை வைத்து போலீஸார், தங்களிடம் கம்ப்யூட்டரில் ஏற்கெனவே இருக்கும் ரேகைகளுடன் ஒப்பிட்டனர்.
அவற்றில் ஒரு கைரேகை காவலர் ஒருவருடைய கைரேகையுடன் ஒத்துப் போனதால் போலீஸார் அதிர்ச்சியடைந்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஏட்டாகப் பண்புரியும் கற்குவேல் என்பவரின் கைரேகையுடன் ஒத்துப்போனதால், அந்த மாவட்டத்தின் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்கள்.
பின்னர், கற்குவேலின் நடவடிக்கைகள் குறித்து ரகசியமாகக் கண்காணிக்கத் தொடங்கினார்கள்.
காவல்துறையினர் பலரும் இரவுப் பணியை வெறுத்து ஒதுக்கும் நிலையில் ஏட்டு கற்குவேல், தான் பணிபுரியும் காவல் நிலையத்தில் இரவுப் பணியை விரும்பிக் கேட்டுப் பணியாற்றியது தெரியவந்தது.
பகலிலும் அவர் காவலர் உடையிலேயே இருந்ததையும் அவரைப் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். காவலர் கற்குவேல், பகல் நேரங்களில் தன் கூட்டாளிகள் நான்கு பேருடன் சேர்ந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தது தெரியவந்ததால், அவரை பெருமாள்புரம் போலீஸார் கைதுசெய்தார்கள்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது கூட்டாளிகளுடன் சேர்ந்து வீடுகளில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.
சீக்கிரமே கோடிகளைக் குவித்து உல்லாசமாக வாழ வேண்டும் என்ற எண்ணம்கொண்ட கற்குவேல், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பணத்தைச் சேர்க்கத் திட்டமிட்டிருக்கிறார்.
ஆனால், அதில் தொடர்ந்து தோல்வியடைந்ததால் இருந்த பணத்தையும் இழந்திருக்கிறார். அதனால் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்து கோடீஸ்வரனாகத் திட்டமிட்டிருக்கிறார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றி தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் நெல்லை மாநகரில் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாகக் கண்காணித்ததில் காவலர் கற்குவேலுக்கு கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு இருப்பது உறுதியானது.
காவலர் உடையில் சென்றால் பிறருக்குச் சந்தேகம் வராது என்பதால் அந்த உடையுடனேயே கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.
காவலர் கற்குவேல் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோல்வியடைந்து பல லட்சங்களை இழந்ததால் கொள்ளையடிக்கத் தொடங்கியிருக்கிறார்.-நெல்லை மாநகர காவல்துறை
கற்குவேலிடம் முழு விசாரணை நடத்தப்பட்ட பின்னரே, அவர் எங்கெல்லாம் கொள்ளையடித்தார் என்கிற தகவல் முழுமையாகத் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.
தலைமறைவாக இருக்கும் அவரது கூட்டாளிகளான மோகன் உள்ளிட்ட நான்கு பேரையும் போலீஸார் தேடிவருகிறார்கள். காவலரே கொள்ளைக்காரராக மாறிய சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது.