இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கடந்த வியாழக்கிழமை இரவு 30 ஆவது கொரோனா மரணம் பதிவாகியது. கொழும்பு 15  முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்பதோடு , கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இலங்கையில் பதிவான 34 மரணங்களில் இரண்டு இளம் மரணங்களும் உள்ளடங்குகின்றன. ஒக்டோபர் 27 ஆம் திகதி 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இலங்கையில் இம்மாத்திலேயே அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. மார்ச் மாதம் இரு மரணங்களும், ஏப்ரலில் 5 மரணங்களும் , மே மாதம் 3 மரணங்களும் , ஜூன் மாதம் ஒரு மரணமும், ஆகஸ்ட் மாதம் ஒரு மரணமும், செப்டெம்பரில் ஒரு மரணமும், ஒக்டோபரில் 7 மரணங்களும் , நவம்பரில் 14 மரணங்களும் பதிவாகியுள்ளன.

நாட்டில் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டதிலிருந்து ஜூலை மாதத்தில் மாத்திரமே எந்த மரணமும் பதிவாகவில்லை.

எமது நாட்டில் அதிகளவில் ஆண்களே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய இதுவரையில் 18 ஆண்களும் 16 பெண்களும் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தோர் 19 தொடக்கம் 88வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.

மாரவில, கொச்சிக்கடை, மருதானை, ஹோமாகம, தெஹிவளை, கல்கிசை, பொல்பிதிகம, முகத்துவாரம், திருகோணமலை, ஹோமாகம, மாவத்தகம, நுகேகொடை, குளியாபிட்டி, கொம்பனிவீதி, ஜாஎல, கொழும்பு, மஹர, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, கனேமுல்ல மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளிலேயே இது வரையில் மரணங்கள் பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர்களில் 8 பேர் அவர்களது வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர். ஏனையோர் கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஐ.டி.எச். வைத்தியசாலை, நீர்கொழும்பு, வெலிக்கடை, ஹோமாகம, திருகோணமலை, சிலாபம், குளியாபிட்டி, வத்தளை தேசிய வைத்தியசாலை மற்றும் பிம்புர வைத்தியசாலை ஆகியவற்றில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply