மட்டக்களப்பு , கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பிளாந்துறையில் இன்று சனிக்கிழமை (14) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் அவருடன் பயணித்த மற்றொருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் பலாச்சோலையைச் சேர்ந்த 38 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு – போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட பலாச்சோலை கிராமத்திலிருந்து வடமுனை பகுதியில் அமைந்துள்ள அவர்களது வயலுக்கு இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் அம்பிளாந்துறை தாமரைப்பூ சந்தியை அண்மித்த வேளை, மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிருந்த மின்கம்பத்தில் மோதுண்டதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய நபர் தலைமறைவாகியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கொக்கட்டிச்சோலைப் பொலிஸாரும், மட்டக்களப்பு தடயவியல் பொலிஸ் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த திடீர் மரணவிசாரணை அதிகாரி ரி.தவக்குமார் சடலத்தைப் பார்வையிட்டதயைடுத்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.