அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை முதல்முறையாக அங்கீகரித்தாலும், தேர்தலை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.

தேர்தலில் மோசடி செய்தே பைடன் வென்றுள்ளார் என ட்விட்டர் பதிவு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். சில நிமிடங்களுக்கு பிறகு அவர் நவம்பர் மூன்று அன்று நடந்த அமெரிக்க தேர்தலை அவர் தோல்வியுற்றதை மறுத்துள்ளார்.’

மேலும், தேர்தலில் முறைகேடு நடந்தது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை மீண்டும் அவர் கூறி உள்ளார்.

இந்த தேர்தலுக்கு எதிராக முக்கிய மாகாணங்களில் டிரம்ப் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், அவர் தேர்தலில் முறைகேடு நடந்தது என்பதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை.

தேர்தல் மிக நேர்மையாக நடந்தது என்றும், வாக்காளர்களால் அளிக்கப்பட்ட வாக்குகள் எதுவும் அழிக்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆனால், இதுவரை பைடனின் வெற்றியை அங்கீகரிக்காமல் இருந்த டிரம்ப் இப்போது ஒப்புக் கொண்டுள்ளார்.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கைலேக் மெக்எனானி, “அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்தும் தாமே அதிபர் என்பதை நம்புகிறார்,” என்று கூறி உள்ளார்.

போராட்டம்

தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறும் டிரம்பின் குற்றச்சாட்டுக்கு ஆதரவு தெரிவித்து, அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வாஷிங்டனில் பேரணியை முன்னெடுத்தனர்.

அமைதியாக நடந்த போராட்டத்தில் மாலை நேரத்தில் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. டிரம்பின் ஆதரவாளர்களும், அவரது எதிர்ப்பாளர்களும் சில இடங்களில் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இருபது பேர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இரண்டு போலீஸார் இந்த சம்பவத்தில் காயம் அடைந்துள்ளனர்.

பைடனே வென்றார்

இந்த தேர்தல் தொடர்பாக டிரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும், பைடனே அதிகாரபூர்வ வெற்றி வேட்பாளர்.

ஜனநாயகக் கட்சி 306 இடங்களில் வென்றுள்ளது. ஆட்சி அமைக்க 270 இடங்களே போதுமானது.

டிரம்ப் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ள மறுப்பது, புதிய அரசாங்கம் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்பதில் தடங்கலை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply