யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித் தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தீபாவளி திருநாளுக்கு முதல் நாளான நேற்றுமுன்தினம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பயணிகளை ஏற்றிச் சென்றமை தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் கண்டறியப்பட்டு வழங்கப்பட்ட அறிக்கைக்கு அமைய கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியினால் இந்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார நடைமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் சென்றதையடுத்து  குறித்த  பஸ்க்கான வழித்தட அனுமதிப்பத்திரமும் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சால் வழங்கப்பட்டுள்ள இரண்டாம் எச்சரிக்கை நிலையின் கீழ் பஸ்ஸின் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைவாக மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் பின்பற்றப்படாத நிலையில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 750 வழித் தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஒன்றின் சாரதி மற்றும் நடத்துனர் சுயதனிமைப்படுத்தப்பட்டு வழித்தட அனுமதியும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply