நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் போன்றே மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் புதிதாக 704 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதோடு , 5 மரணங்களும் பதிவாகின.
தொற்றாளர்கள் அனைவரும் மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணி பரவல் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 17,287 உயர்வடைந்துள்ளதுடன் 5,734 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்றையதினம் நாட்டில் மேலும் 171 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 11,495 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் 562 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக நேற்று கொழும்பைச் சேர்ந்த ஆண்கள் ஐவர் உயிரிழந்ததையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று பதிவான மரணங்கள்
கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஆணொருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழப்பிற்கான காரணம் நீண்ட நாள் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததோடு கொவிட் தொற்றுக்கும் உள்ளானமையாகும்.
கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய ஆணொருவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததோடு கொவிட் தொற்றுக்கும் உள்ளானமை மரணத்திற்கான காரணமாகும்.
கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 88 வயதுடைய ஆணொருவர் நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழப்பிற்கான காரணம் கொவிட் தொற்றால் ஏற்பட்ட இதய பாதிப்பாகும்.
கொழும்பு 8 ஐ சேர்ந்த 79 வயதுடைய ஆணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நாட்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள குறித்த நபர் கொவிட் தொற்றுக்கும் உள்ளாகியுள்ளமை மரணத்திற்கான காரணமாகும்.
கொழும்பு 13 ஐ சேர்ந்த 88 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றால் ஏற்பட்ட இதய பாதிப்பு மரணத்திற்கான காரணமாகும். அதற்கமைய நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணி வரை 704 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். அதற்கமைய மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 788 ஆக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 17 287 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 11 495 பேர் குணமடைந்துள்ளதோடு 5734 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படும்
இன்று திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மருதானை பொலிஸ் பிரிவு , கோட்டை பொலிஸ் பிரிவு, புறக்கோட்டை பொலிஸ் பிரிவு, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவு மற்றும் டேம் வீதி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டு சபை (BOI) மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) ஆகியவற்றில் செயல்படும் தொழிற்சாலைகள் , இந்த பகுதிகளில் இடம்பெறும் நீதிமன்ற அலுவல்கள் மற்றும் அத்தியாவசிய ஏனைய அரச நிறுவனங்கள் சுகாதார அதிகாரிகளின் கடுமையான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டி ஆலோசனைகளின் கீழ் முன்னெடுக்க முடியும் என்று கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
4 சிறைச்சாலைகளில் 437 தொற்றாளர்கள்
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 437 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகள் ஐவருக்கும் 147 சிறைக்கைதிகளுக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, வெலிக்கடை மகளிர் சிறைச்சாலை, பூசா மற்றும் பழைய போகம்பறை சிறைச்சாலை ஆகியவற்றில் இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகளின் விடுமுறை இரத்து
மறு அறிவித்தல் வரை அனைத்து சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகளை இன்று திங்கட்கிழமை காலை 08 மணிக்கு முன்னர் கடமைக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் நெருக்கடி இல்லை
தினமும் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டாலும் தொற்றிலிருந்து குணமடைந்து செல்வோரின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிப்பதால் சிகிச்சையளிக்கும் நிலையங்களில் நெருக்கடி நிலை ஏற்படவில்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 36 சிகிச்சை நிலையங்களில் கொரோனா நோயாளர்களுக்கு தற்போது சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் 2800 படுக்கைகள் தயார் நிலையிலுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக மேலும் சில வைத்தியசாலைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் , தேவை கருதி குறித்த வைத்தியசாலைகளில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

