சிங்கள, பௌத்த வாக்குகளினால் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த ஜனாதிபதி கோட்டாபய தனது முதலாவது ஆண்டு பூர்த்தி செய்யும் வேளையில் சிறுபான்மையின மக்களையும் பெரும்பான்மையின மக்களையும் திருப்திப்படுத்த முடியாதவொரு சுழலுக்குள் சிக்கியிருக்கிறார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று,  ஒரு வருடம் நிறைவடைந்து விட்டது. இப்போது அவரது பதவிக்காலத்தில் 20சதவீதம் அல்லது ஐந்தில் ஒரு பங்கு முடிவுக்கு வந்துவிட்டது. ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்களால் நிராகரிக்கப்பட்ட போதும்,  பெருவாரியான சிங்கள-பௌத்த மக்களால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார் கோட்டாபய ராஜபக்ஷ. தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் கோட்டாபய ராஜபக்ஷ குறித்து அச்சம், வெறுப்பு போன்ற உணர்வுகள் இருந்தாலும்- அவரைப் பற்றி அவர்களிடம் பொதுவான ஒரு கருத்து இருப்பதை  மறுப்பதற்கில்லை.

ஏனைய சிங்கள தலைவர்களை போலன்றி, நிறைவேற்ற கூடியதை வெளிப்படையாக கூறுவார்,  நிறைவேற்ற முடியாததை முடியாது என கூறிவிடுவார் என்பதே அந்த கருத்து. காலம் காலமாக ஆட்சியில் இருந்து வந்த சிங்கள அரசியல் தலைவர்கள் அனைவரும் தமிழ் மக்களை வாக்குறுதிகளின் பெயரால் ஏமாற்றி வந்திருக்கிறார்கள். டி.எஸ்.சேனநாயக்க தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரை அந்த நிலை நீடித்து வந்தது.  இவர்கள் காலத்துக்கு காலம் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வந்திருக்கிறார்கள்.

ஆனால் அந்த வாக்குறுதிகளை ஒருபோதும் காப்பாற்றப்படவில்லை என்பதுதான் உண்மை. இவ்வாறான சூழலில் கோட்டாபய ராஜபக்ஷ,  தமிழ்  மக்களின் பிரச்சினைகளை தீர்க்கின்ற ஒருவராக இருக்காவிட்டாலும்,  இதுதொடர்பாக போலியான வாக்குறுதிகளை அவர் கொடுக்கமாட்டார் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது. ஆனாலும் கடந்த ஓராண்டு காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு நடந்து கொண்டாரா என்பதில் பலத்த விமர்சனங்கள் உள்ளன. கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கிழக்கு தொல்பொருள்  முகாமைத்துவ செயலணி, உருவாக்கப்பட்டது.

அந்த செயலணியில் ஒருவர்கூட தமிழ் அல்லது முஸ்லிம் பிரதிநிதிகள் இடம்பெற்றிருக்கவில்லை. இந்த மனக்குறை ஜனாதிபதியிடமும் பிரதமரிடம் நேரடியாக சுட்டிக்காட்டப்பட்டது. தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் உங்வாங்கப்படுவர் என்று அமைச்சரவையில் வாக்குறுதி கொடுத்ததாகவும் கூறப்பட்டது. ஆனாலும் இன்றுவரை கிட்டத்தட்ட ஐந்தரை மாதங்களாகியும், தமிழ் அல்லது முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை கூட, உள்ளீர்க்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இரண்டு சந்தர்ப்பங்களில் இந்த செயலணிக்குள் சிங்கள பௌத்த பிரதிநிதிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இந்த செயலணி விடயத்தில் ஜனாதிபதி ஏற்கனவே தீர்மானித்தபடி நடந்து கொண்டிருக்கிறாரா-  அல்லது கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை அவரால் காப்பாற்ற முடியாமல் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி அனுராதபுரவில் பதவியேற்ற போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கள பெளத்த வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், தான் அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பேன் என்று உறுதி கூறியிருந்தார்.

ஆனாலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சர்கள், செயலாளர்கள், உள்ளிட்ட பல்வேறு நியமனங்களில் இனத்துவப் பரம்பலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. தமிழ், முஸ்லிம்கள் பல்வேறு நியமனங்களில் ஒதுக்கப்பட்டார்கள். இதுபோன்ற நிலை கடந்த காலங்களில் இருந்ததில்லை. தற்போதைய அரசாங்கத்தில் தமிழ், முஸ்லிம்கள் வேண்டப்படாதவர்கள் போலவே நடத்தப்படும் நிலை காணப்படுகிறது. இந்த அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு முன்னுரிமை  கொடுக்கப்பட்டது ஒரே விடயம் தான்.  19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்வதில் மட்டும் தான், கவனம் செலுத்தப்பட்டது.

அதனை அரசாங்கம் அண்மையில் நிறைவேற்றியிருக்கிறது. அதுவும், வேண்டப்படாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை வளைத்துப் போட்டே அதனைச் சாதித்திருக்கிறது.

கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம், மரபுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும், பாரம்பரிய அரசியல்வாதிகளின் செயற்பாடுகளில் இருந்து விலகியதாக செயற்படும் என்ற எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தவர்களுக்கு. 20 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட முறை அதிர்ச்சியையே கொடுத்தது. வழக்கம்போலவே தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளை கறிவேப்பிலையாக கையாளும் அணுகுமுறையில் இருந்து, தாமும் விலகவில்லை என்பதை இந்த அரசாங்கமும் நிரூபித்துக் கொண்டது.

கோட்டபபய ராஜபக்ஷ பதவிக்கு வந்தபோதே நாட்டின் பொருளாதாரம் படுமோசமான நிலையில் இருந்தது. அதனை சீர்படுத்தி, அடுத்தகட்ட இலக்குகளை தீர்மானிப்பதற்கு இயற்கை அவருக்கு அவகாசத்தைக் கொடுக்கவில்லை. பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாகவே, கொரோனா தொற்று பரவத் தொடங்கி விட்டது.  அதனை கட்டுப்படுத்துவது, அதற்காக அரசாங்க பொறிமுறைகளை கையாளுவது பற்றியே அதிகளவில் சிந்திக்க வேண்டிய நிலைக்கு, அவரையும் அவரது அரசாங்கத்தையும் தள்ளி  விட்டது. சிங்களபௌத்த மக்கள் மத்தியில்பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அவரால் கூட ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியாமல் போனது.

சில கோடுகளை கடந்து செல்ல முடியாமல் உள்ளது அவரது துரதிஷ்டம் தான். உதாரணத்துக்கு சிங்கள பௌத்த மக்கள் அவரிடம் எதனை எதிர்பார்த்தனரோ அதனைக் கூட அவரால் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போயிருக்கிறது. 20 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவதில் அவர் காண்பித்த அக்கறை, அவரை ஆட்சிக்கு கொண்டு வந்த பலரை அவரிடம் இருந்து விலகி இருக்கச் செய்திருக்கிறது. அதிருப்தியாளர் அணிகளையும் உருவாக்கியிருக்கிறது. சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் பிரதிநிதிகளாக மட்டும் அவர் நடந்து கொள்ள வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு தான் இந்த ஏமாற்றத்துக்கு காரணம்.

ஆனால், நடைமுறையில் ஜனாதிபதியினால் அவ்வாறு முற்றிலுமாக இயங்க முடியாது. அவர் சிறுபான்மையின மக்களை திருப்திப்படுத்தவும் முடியாமல், அதேவேளை பெரும்பான்மையினரை திருப்திப்படுத்தவும் முடியாமல் ஒரு சுழலுக்குள் சிக்கியிருக்கிறார். வெளிநாடுகளுடனான உடன்பாடுகள் உறவுகள் போன்ற விடயங்களிலும்,  கோட்டாபய ராஜபக்ஷவின் மீது நம்பிக்கை வைத்த பலரை ஏமாற்றமடைய செய்திருக்கிறது. ஒரு வருட பதவிக் காலம் என்பது மிக முக்கியமானது. இந்த ஒரு வருடம் தான் அதிகாரத்தில் உள்ளவர்களை சரியாக புரிந்து தெரிந்து கொள்வதற்கு உதவக்கூடியது.

ஆனால் கொரோனா போன்ற நெருக்கடிகள் அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு, அவருக்கு அந்த சந்தர்ப்பத்தை கொடுக்கவில்லை. இதனால் தனது இலக்கை நோக்கி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அவருக்கு தாமதங்கள் ஏற்பட்டிருக்கலாம். இந்த நெருக்கடியான, சிக்கலான சூழலும் பொருளாதார அழுத்தங்களும் அடுத்த கட்டங்கள் குறித்து இப்போதைக்கு யோசிக்க முடியாத நிலையை ஜனாதிபதிக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையானது கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பான ஒரு மிகப்பெரிய பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது என்பது சந்தேகம் இல்லை. இந்த ஏமாற்றம் நிலையானதாக இருக்குமா அல்லது- அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் அவர் தன்னை சுதாகரித்துக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-சத்ரியன்

Share.
Leave A Reply