நேற்று வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்.மகாஜனாக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகளுடன் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சந்திரகுமார் ஆர்வலன் மற்றும் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் மகிசன் இருவரும் தலா 195 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
இதேவேளை மகாஜனக் கல்லூரியிலிருந்து 36 பேர் சித்தி பெற்றுள்ளனர். வயாவிளான் சிறிவேலுப்பிள்ளை வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 12 மாணவர்கள் சித்தியடைந்தனர்.
வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி அஸ்வினியா ஜெயந்தன் 196 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
மன்னார்
மன்னார் கல்வி வலயத்திற்குற்பட்ட மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி பாடசாலை இம்முறை இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்துள்ளது.
வெளியாகியுள்ள தரம் 5 மாணவர்களின் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் மன்னார் கல்வி வலயத்தில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி செல்வி றொசான்னா சைலின் ரவீந்திரன் 195 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தையும்,செல்வி நாயோலின் அப்ரியானா குபேர குமார் 194 புள்ளிகளையும் பெற்று 2 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.
குறித்த பாடசாலையில் 34 மாணவிகள் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியை பெற்றுள்ளனர்.
மேலும் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் செல்வன் சதீஸ்வரன் பிரியகன் 194 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் 2 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.
மேலும் மன்னார் கோட்டத்தில் 110 மாணவர்களும், நானாட்டான் கோட்டத்தில் 28 மாணவர்களும், முசலி கோட்டத்தில் 6 மாணவர்களும் மொத்தமாக மன்னார் கல்வி வலயத்தில் 144 மாணவர்கள் இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்.
இதன் போது மாவட்ட ரீதியாக 195 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்ற மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி செல்வி றொசான்னா சைலின் ரவீந்திரன் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சுரூத்தல் காரணமாக மாணவர்கள் அனைவரும் கற்றல் நடவடிக்கைகளில் பாதீப்படைந்து இருந்தனர். ஆனால் பாடசாலை ஆசிரியர், அதிபர், பெற்றோர் ஆகியோரின் முயற்சியினால் நான் சித்தியடைய சந்தர்ப்பம் கிட்டியது.
அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.எனது எதிர் கால இட்சியம் வைத்தியராக வந்து எமது மக்களுக்கு சேவை செய்வதே என அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு
வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவி 198 புள்ளிகளைப்பெற்று சாதனை படைத்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் முதல் நிலை மாணவியாக குறித்த மாணவி சித்தியடைந்துள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இம்முறை 93வீதமாக மாணவர்கள் சித்திபெற்று சாதனை படைத்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 433 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.