புதிய தடுப்பு மருந்து ஒன்று, கொரோனா தொற்றுக்கு எதிராக கிட்டதட்ட 95 சதவீத அளவிற்குப் பலனளிக்கக்கூடியதாக உள்ளது என ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க நிறுவனமான ‘மாடர்னா’ தெரிவித்துள்ளது.

சில தினங்களுக்கு முன் பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்து 90 சதவீத அளவிற்கு கொரோனா தொற்றிலிருந்து காக்கும் என நம்பிக்கையுடன் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த செய்தி வந்துள்ளது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் தடுப்பு மருந்தை உருவாக்க அதிக புதுமையான மற்றும் சோதனை முறையிலான அணுகுமுறையைக் கையாண்டு வருகின்றன.

இது தங்களுக்கு `சிறந்த ஒரு நாள்` என மாடர்னா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த சில வாரங்களில் இந்த தடுப்பு மருந்தைப் பயன்படுத்தும் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

இருப்பினும் இது ஆரம்பக் கட்ட தகவல்களே. பல முக்கிய கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியவில்லை.

இது எந்த அளவிற்குப் பலனளிக்கும்?

அமெரிக்காவில் 30 ஆயிரம் பேரிடம் இந்த தடுப்பு மருந்திற்கான சோதனை நடத்தப்பட்டது. இதில் பாதிபேருக்கு நான்கு வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ் மருந்து வழங்கப்பட்டது. பிறருக்கு `டம்மி` ஊசிகள் வழங்கப்பட்டன.

கோவிட் அறிகுறிகள் உருவாகிய முதல் 95 பேரைக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. அதில் தடுப்பு மருந்து வழங்கப்பட்ட ஐந்து பேருக்கு மட்டுமே கோவிட் கண்டறியப்பட்டது. மீதமுள்ள 90 பேர் டம்மி ஊசிகள் கொடுக்கப்பட்டவர்கள். இந்த தடுப்பு மருந்து 94.5 சதவீத அளவு பாதுகாப்பு வழங்குகிறது என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்த தடுப்பு மருந்து பரிசோதனை சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது. இது ஒரு சிறந்த நாள்,” என மாடர்னாவின் தலைமை மருத்துவ அதிகாரி தால் சாக் பிபிசியிடம் தெரிவித்தார்.

நமக்கு தெரியாத தகவல்கள் என்னென்ன?

இந்த தடுப்பு மருந்து எவ்வளவு காலம் பலனளிக்கும் என்பது தெரியாது. அதற்குத் தன்னார்வலர்கள் நீண்ட நாட்களுக்குக் கண்காணிக்கப்பட வேண்டும். வயதான, கோவிட் தொற்றால் உயிரிழக்கக்கூடியவர்களுக்கு இது பாதுகாப்பு அளிக்கும் என்பதுபோல தெரிகிறது. இருப்பினும் அதுகுறித்த எந்த முழு தகவலும் இல்லை.

தரவுகளின்படி, இந்த மருந்து “தனது ஆற்றலை இழப்பது போலத் தெரியவில்லை” என தால் சாக் தெரிவிக்கிறார்.

மேலும், இந்த தடுப்பு மருந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை மோசமடையாமல் காக்குமா அல்லது கொரோனா தொற்று பரவாமல் தடுக்குமா போன்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை.

இந்த கேள்விகள்தான் கொரோனா தடுப்பு மருந்து எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை விளக்கும்.

இது பாதுகாப்பானதா?

இதுவரை பாதுகாப்பு அச்சங்கள் எதுவும் எழவில்லை. இருப்பினும் பாராசிட்டமல் உட்பட எதுவும் 100 சதவீதம் பாதுகாப்பானது இல்லை.

ஊசி செலுத்திய பிறகு சில நோயாளிகளுக்கு, சோர்வு, தலைவலி மற்றும் வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் “இந்த தாக்கங்கள், வேலை செய்யக்கூடிய மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் ஒரு தடுப்பு மருந்தின் விளைவாக நாம் எதிர்பார்க்கலாம்,” என்கிறார் லண்டன் இம்பீரியல் காலேஜின் பேராசிரிய பீட்டர் ஓபன்ஷா.

இந்த மருந்து எவ்வாறு பிஃபிசர் தடுப்பு மருந்துடன் ஒப்பிடப்படுகிறது?

இந்த இரு தடுப்பு மருந்துகளுமே வைரஸின் ஜெனிட்டிக் கோடை உடலில் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் அணுகுமுறையைதான் கையாளுகின்றன.

இரு தடுப்பு மருந்து சோதனை குறித்து ஆரம்பக் கட்ட தகவல்களில் பிஃபிசர் தடுப்பு மருந்து 90 சதவீத பாதுகாப்பு அளிக்கும் என்றும், மாடர்னா தடுப்பு மருந்து 95 சதவீத பாதுகாப்பு அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் இரு மருந்துகளுக்கான சோதனைகளும் நடைபெற்று வருகிறது. இறுதி எண்ணிக்கை மாறக்கூடும்.

மாடர்னா தடுப்பு மருந்தைப் பொறுத்தவரை ஆறு மாத காலத்திற்கு 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைக்கலாம். மேலும் சாதாரண ஃபிரிட்ஜில் ஒரு மாதக் காலம் வரை வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் பிஃபிசர் தடுப்பு மருந்தை மைனஸ் 75 டிகிரி செல்சியஸில்தான் சேமித்து வைக்க முடியும்.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து குறித்த ஆரம்பக் கட்ட தகவல்கள், அது 92 சதவீத அளவு பலனளிக்கும் என்று கூறுகிறது.

எப்போது கிடைக்கும்?

இது நீங்கள் இந்த உலகில் எங்கு உள்ளீர்கள் என்பதை பொறுத்தும் உங்களுக்கு எத்தனை வயதாகிறது என்பதை பொறுத்தும்தான் உள்ளது.

வரும் வாரங்களில் அனுமதி கோரி அமெரிக்கக் கண்காணிப்பாளர்களிடம் விண்ணப்பிக்கப் போவதாக மாடர்னா தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவுக்கு 20 மில்லியன் டோஸ் மருந்துகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அடுத்த வருடம் உலகம் முழுவதும் பயன்படும் வகையில் ஒரு பில்லியன் டோஸ் மருந்துகள் தயாரிக்கப்படும் என மாடர்னா நிறுவனம் நம்புகிறது. மேலும் பிற நாடுகளில் பயன்படுத்துவதற்கான அனுமதியைக் கோர திட்டமிட்டுள்ளது.

இது எவ்வாறு வேலை செய்யும்?

மாடர்னா ஒரு ஆர்என்ஏ தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இதன் பொருள் கொரோனா வைரஸ் ஜெனிட்டிக் கோடின் ஒரு பகுதி உடலில் செலுத்தப்படும். இது முழு வைரஸையும் உருவாக்காமல், வைரல் ப்ரோட்டீனை உடலில் உருவாக்கத் தொடங்கும். இதுவே நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்திற்கு ஒரு பயிற்சியாக இருக்கும்.

இது உடலில் ஆண்டிபாடிகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஒரு பகுதியான டி செல்கள் கொரோனா வைரஸை எதிர்த்து போரிட தயார் செய்யும்.

என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்?

“இந்த தடுப்பு மருந்து சோதனை அடுத்த சில மாதங்களில் கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் ஒரு தடுப்பு மருந்து நமக்கு கிடைத்துவிடும் என்ற நேர்மறையான எண்ணத்தை இது உருவாக்குகிறது” என லண்டன் இம்பீரியல் காலேஜின் பேராசிரியர் ஒபன்ஷா தெரிவிக்கிறார்.

Share.
Leave A Reply